Saturday, October 3, 2015

அரசு விளம்பரங்களில் ‘முதல்–அமைச்சர்’ படம்

logo

இந்திய ஜனநாயகத்தில், மத்திய அரசாங்கம் பிரதமர் தலைமையிலும், மாநில அரசுகள் முதல்–அமைச்சர் தலைமையிலும் இயங்குகின்றன. மாநில அரசில் முதல்–அமைச்சர் என்பவர் அந்த மாநிலத்தின் முகமாக கருதப்படுகிறார். ஒரு மாநிலத்தின் வளர்ச்சியே அதன் முதல்–அமைச்சரை பொருத்துத்தான் இருக்கிறது. பொதுவாக அரசின் சாதனைகள் என்றாலும் சரி, திட்டங்கள் என்றாலும் சரி, கொள்கைகள் என்றாலும் சரி, சமூகநலப்பணிகள் என்றாலும் சரி, வளர்ச்சி பணிகள் என்றாலும் சரி, அரசு செயல்படுத்துவது மக்களுக்குப்போய் சேர்ந்தால்தான் மக்கள் அதை நன்றாக தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு, அறிந்துகொண்டு அதன்பலனை அனுபவிக்க முடியும். என்னதான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டாலும், நிச்சயமாக எந்த பத்திரிகையாலும் இந்த தகவல்களை முழுமையாக கொண்டுபோய் சேர்க்கமுடியாது. இதற்கு கைகொடுப்பது பத்திரிகைகளில் அரசு வெளியிடும் விளம்பரம்தான். இதுபோன்ற திட்டங்களுக்கு மக்களின் கவனம் ஒரு விளம்பரத்தில் அதிகமாக செல்ல வேண்டும் என்றால் வெறுமனே வாசகங்கள் இருந்தால் போதாது. அந்த விளம்பரங்களில் படங்கள் நிச்சயமாக இருக்கவேண்டும். மறைந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், ‘‘பத்திரிகையில் ஒரு பக்கத்தில் படம் இல்லாமல் வெறும் செய்தி மட்டும் இருந்தால், அந்த பக்கம் பாலைவனம்போல இருக்கிறது’’ என்று கூறுவார். நிச்சயமாக விளம்பரத்துக்கும் அது பொருந்தும். அந்த திட்டத்தை செயல்படுத்தும் முதல்–அமைச்சர் படம் இருந்தால் நிச்சயமாக அதைப்பார்க்க தூண்டும் ஆர்வத்தை மக்களுக்கு ஏற்படுத்தும்.

ஆனால், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இரு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முதல்– அமைச்சர்களின் படம் அரசு விளம்பரங்களில் இடம்பெறக்கூடாது என்ற வகையில், ஒரு வழக்கை பதிவு செய்தனர். இதையொட்டி, வழிமுறைகளை வகுக்க உச்சநீதிமன்றம் ஒரு மூவர் கமிட்டியை அமைத்தது. அந்த மூவரும் பத்திரிகை துறைக்கே சம்பந்தம் இல்லாதவர்கள். அவர்கள் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் அரசு விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி படங்களை தவிர, வேறு யார் படங்களும் அரசு விளம்பரங்களில் இருக்கக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அப்போதே இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அரசு விளம்பரங்களில் முதல்–அமைச்சர் படங்களை மறைப்பதால் என்ன பயன் வந்துவிடப்போகிறது?, அதே விளம்பரத்தை கட்சி சார்பில் கொடுத்து அதில் முதல்–அமைச்சர் படத்தை வைத்தால் யார் தடை செய்ய முடியும்?, இப்படி ஏட்டிக்கு போட்டி விளம்பரங்கள் வந்தால் உச்சநீதிமன்றத்தின் எந்த நோக்கம் நிறைவேறும்? என்றெல்லாம் விமர்சனங்கள் கூறப்பட்டன.

இந்த நிலையில், கர்நாடகம், மேற்கு வங்காளம், அசாம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த தீர்ப்பின் மீதான மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, மத்திய அரசாங்கத்துக்கு ஒரு நோட்டீசை அனுப்பியுள்ளது. இதுபோல, உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு நிச்சயமாக வரவேற்கத்தக்கது. மத்திய அரசாங்கம் இப்போது ஒரு நல்ல முடிவை எடுத்து, மாநில அரசுகள் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் மாநில முதல்–அமைச்சர்கள் படங்கள் இருப்பதில் தவறில்லை என்பதை தங்கள் நிலையாகவும், அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தங்கள் பதில் மனுவில் தெரிவிக்கலாம். பிரதமர் படம் அரசு விளம்பரங்களில் இடம்பெறலாம் என்றால், கண்டிப்பாக மாநிலங்களிலும் முதல்–அமைச்சர் படங்கள் இடம்பெறவேண்டும். அதுதான் கூட்டாட்சியின் தார்ப்பரியம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024