Monday, October 12, 2015

சீக்கிரம் செய்யுங்கள்

logo

என்றைக்கு ஒரு பெண் கழுத்து நிறைய நகைகள் அணிந்துகொண்டு நள்ளிரவில் தன்னந்தனியாக தலைநகரில் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றுதான் உண்மையான சுதந்திரம் என்றார், தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் டெல்லியில் மட்டுமல்ல, மற்ற நகரங்களிலும் கற்புக்கு பங்கம் இல்லாமல் ஒருபெண் தனியாக இரவில் எங்கும் செல்லமுடியாத சூழ்நிலைதான் இருக்கிறது. கடந்த 3–ந் தேதியும், 5–ந் தேதியும் பெங்களூருவில் நடந்த இரு சம்பவங்கள் நெஞ்சை பதறவைக்கிறது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் பெங்களூருவில் ஒரு கால்செண்டரில் பணிபுரிந்து வருகிறார். இரவில் தன் வீட்டுக்கு செல்ல ஒரு வேனில் சென்றபோது, கத்தி முனையில் அந்த இளம்பெண்ணை, 2 டிரைவர்கள் 4 மணி நேரம் கதற கதற கற்பழித்துவிட்டு, மடிவாலா போலீஸ் நிலையத்துக்கு சற்று தூரத்தில் இறக்கிவிட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்.

இது ஒரு பயங்கர சம்பவம் என்றால், அடுத்தும் ஒரு கொடிய சம்பவம் அரங்கேறி ஒரு பெண்ணின் உயிரை பறித்துவிட்டது. தமிழ்நாட்டை பூர்வீகமாகக்கொண்ட 15 வயது பள்ளிக்கூட மாணவியை அவள் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பும்போது, 4 பேர்கள் கடத்திக்கொண்டுபோய் ஆடைகளை களைந்து நிர்வாணமாக போட்டோ எடுத்துவிட்டனர். ‘‘மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் சாதி தமிழ்பெண் அவள். மானம் பறிபோன பிறகு உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை’’ என்ற உணர்வுடன் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டாள்.

2012–ம் ஆண்டு இதுபோல டெல்லியில் நிர்பயா என்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையைப்போல, இந்தியாவில் வேறு எந்த பெண்ணுக்கும் நேரிடக்கூடாது என்ற வகையில்தான் அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிர்பயா நிதி என்ற ஒரு தனி நிதி உருவாக்கப்பட்டது. இதுவரையில் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும், இன்னும் பெண்கள் பாதுகாப்புக்காக ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் காணோம். சாலைபோக்குவரத்து பொதுவாகனங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டு, அதற்காக 1,405 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆபத்து நேரங்களில் போலீஸ் நிலையங்களோடு தொடர்புகொள்ளவும், உடனடி நடவடிக்கை எடுக்கவும் மற்றொரு திட்டம் வகுக்கப்பட்டு, அதற்காக 321 கோடியே 69 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்படி மேலும் சில சிறிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டு, இப்போது 1,273 கோடியே 31 லட்ச ரூபாய் எதற்கும் ஒதுக்கப்படாமல் தூங்கிக்கொண்டு இருக்கிறது. நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களும் முழுமையான செயலுக்கு வரவில்லை.

இப்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி மேனகா காந்தி, பெண்களுக்கு ஆபத்தான நேரங்களில் செல்போன்கள் மூலம் காவல்துறை மற்றும் 10 எண்களுக்கு அபாய குரல் எழுப்ப செல்போன்களில் ஆபத்து பட்டன்களை அந்த பெண் எந்த இடத்தில் இருக்கிறாள் என்பதையும் காட்டும் ஜி.பி.எஸ். வசதியுடன் பொருத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசாங்கம் செய்துவருகிறது என்று கூறியுள்ளார். இது மிகவும் நல்ல திட்டம். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத பெண்களே இல்லை எனலாம். இதுவரையில் நிர்பயா நிதியை பெண்கள் பாதுகாப்புக்காக செலவழிக்க பல யோசனைகள் கூறப்பட்டாலும், இது மிகவும் நல்ல திட்டம். ஆபத்தில் இருந்து தப்பிக்க ஒரு நொடியில் பட்டனை அழுத்தினால் போதும். ஆனால், அறிவித்து ரப்பராய் இழுக்காமல், உடனடியாக இந்த திடத்தை செயல்படுத்தும் முயற்சிகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024