By க. சண்முகவேலாயுதம்
First Published : 10 October 2015 01:42 AM IST
ஆடையைக் கிழித்துக் கொண்டு, சாலையில் கூச்சலிட்டு, தலைவிரி கோலமாகக் கல்லெடுத்து எறிபவர் மட்டுமே மனநலம் பாதித்தவரல்லர். வாழ்வில் ஏற்படும் எத்தனை எத்தனையோ தொல்லைகள், மன அழுத்தங்கள், துன்பங்களால் பாதிக்கப்பட்டு தங்களது விருப்பங்கள் நிறைவேறாமல் போகும்போது, மனமுடைந்து விபரீதமாக நடந்து கொள்வோரும் மனநலம் பாதித்தவரே ஆவர்.
வெளித் தோற்றத்தைக் கொண்டு இவர்களை மனநலம் பாதித்தவர்கள் என்று கணிக்க முடியாது. மனநலம் பாதித்தவர்களைத் தனிநபர் நோயாக மட்டும் கருதாமல், ஒரு சமூகப் பிரச்னையாகக் கருத வேண்டியிருக்கிறது.
மனநலம் பாதிப்பு (Mental Health Problems) என்பது உள - சமூகரீதியான வேதனையான நிலையாகும். இப்பிரச்னை அதிக நபர்களைப் பாதிப்புக்குள்ளாக்குகிறது.
மன நோய்க்குக் காரணம் பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவை என்ற தவறான அபிப்ராயம் இன்றளவும் இருந்து வருவது வருந்தத்தக்கது. மன நோய் உள்ளவர்களைப் பைத்தியக்காரன் என்று சொல்லி ஒதுக்குவதும், உறவினர் என்று சொல்லக் கூச்சப்படுவதும் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
மனநலம் பாதித்தவர்கள் இழைக்கும் வன்முறைகளைவிட அவர்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்குப் பலியாவது குறைந்தபட்சம் 14 மடங்கு அதிகமானதாக உள்ளது என்று ஆய்வுகள் உணர்த்துகின்றன.
பெண்கள், குழந்தைகள், சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டோர் மீது இழைக்கப்படும் அநீதிகள், அவர்கள் மனநலத்தைப் படிப்படியாகப் பாதிப்படையச் செய்கிறது.
உலகம் முழுவதும் சுமார் 45 கோடி மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 10 - 15 சதவீதம் பேர் மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடல்நலத்தைப் போல, மனநலத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மன நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் நாட்டில் மன நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிப்புக்கான காரணங்கள்: குடும்பப் பிரச்னை, பாலியல் பிரச்னை, வேலையில்லா நிலை, மரபியல் பிரச்னை, ஏமாற்றம், தோல்வி, சந்தேகம், போட்டி, பொறாமை, போதைப் பழக்கம் போன்றவையாகும்.
மனநலப் பாதிப்பால் சோகம், தொடர் தலைவலி, பசியின்மை, உடல் சோர்வு, ஜீரணக் கோளாறு, பயம், விபரீதக் கற்பனை, நம்பிக்கையற்ற, எதிர்மறையான எண்ணங்கள், குற்ற உணர்வு, தற்கொலை எண்ணம் ஆகியவை தோன்றும்.
உடல் நலம் பாதித்தால் உடனே மருத்துவரைப் பார்க்கிறோம். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்லத் தயங்கும் நிலைதான் காணப்படுகிறது.
அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர். ஆண்டுதோறும் உலகம் முழுவதும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில் 15 முதல் 44 வயதுக்குள்பட்டோரே அதிகம். ஒரு வயது குழந்தைக்குக்கூட மன அழுத்தம், மனச் சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் உணர்த்துகின்றன.
மன நோய் உள்ளவர்கள் சமூகத்தின் ஓர் அங்கமாக உயிர் வாழ்வதற்கு உரிமை உண்டு. சமுதாயப் பராமரிப்பு மையங்கள், இடைக்காலத் தங்கும் விடுதிகள் ஆகியவற்றை அரசு அமைக்க வேண்டும்.
தற்கொலை என்பது குற்றச் செயல்பாடு அல்ல, தற்கொலை முயற்சி செய்பவர்களுக்கு மனநலச் சிகிச்சை அளிக்க வேண்டும். மனித உரிமை சார்ந்த அணுகுமுறையை புதிய மனநலச் சட்டம் மேற்கொண்டுள்ளது.
மனநல நோயாளிகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் மின்சார அதிர்ச்சி சிகிச்சை அளிப்பது, சங்கிலியால் பிணைத்தல், தலையை மொட்டை அடித்தல் போன்ற மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் புதிய மனநலச் சட்டம் தடை விதிக்கிறது. அங்கீகாரமற்ற மனநலச் சேவை மையம் நடத்துபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
தனி நபருக்கான சிகிச்சையை, அவரது குடும்பம் முழுவதையும் கருத்தில் கொண்டு அளிக்கப்படும் குடும்ப சிகிச்சை, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
1992-ஆம் ஆண்டு முதல் உலக மனநல மருத்துவக் கூட்டமைப்பின் சார்பில், அக்டோபர் 10-ஆம் தேதி உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மாண்புடன் மனநலம் காப்போம் (Dignity in Mental Health) என்பது 2015-ஆம் ஆண்டின் உலக மனநல தினத்தின் மையக் கருத்தாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
மனநலம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு அவசியம். மனநலப் பாதிப்பும் உடல் நலப் பாதிப்பைப் போலத்தான். மதுவோ, போதைப் பொருளோ மனக் கவலைக்கு ஏற்ற மருந்தாகாது. எனவே, அவற்றைத் தவிர்ப்போம். மற்றவர்களுடன் பேசி மகிழுவோம்.
மனம் வெறுமையாக இருப்பதுபோல் இருந்தால் மகிழ்ச்சி தரும் நடவடிக்கைகளில் இறங்குவோம். திரைப்படம், விளையாட்டு, உடற்பயிற்சி, இசை, புத்தகம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளுவோம். தனிமையைத் தவிர்த்தாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும்.
பொதுவாக, மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது. மனநலம் பாதித்த ஒவ்வொருவருக்கும் மிகவும் தேவையானது அவரை எந்த நிலையிலும் புரிந்து கொள்ளும் ஒரு நல்ல நண்பனே என உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்டு கூறுகிறார்.
ஆரம்பக் கட்டத்திலேயே மனநலச் சேவை கிடைக்கப் பெற்றால் பெரும்பாலானவர்களுக்குத் தீர்வு ஏற்பட்டுவிடும். நோய் வந்தபின் தடுக்காமல் வருமுன் காப்பதே சிறந்தது.
இன்று உலக மனநல தினம்.
No comments:
Post a Comment