Wednesday, October 28, 2015

இப்படியும் பார்க்கலாம்: பிரச்சினை வேணுமா, வேண்டாமா? .......ஷங்கர்பாபு

Return to frontpage



என் குடும்பத்தில் நடந்த உரையாடல்: “தம்பீ...” ---- “என்னவாம்?”

“தம்பி, நேத்திக்கு நான் பேச வந்தப்ப, இன்னிக்குக் காலைல ஃப்ரீயா இருப்பேன்னீங்க...அதான்,பேச வந்தேன்...” ---- “சொல்லுங்க...”

“ எட்டு மாசம் ஆச்சு...” ---- “அதுக்கு என்னவாம்?”

இதில் பணிவான குரலுக்குச் சொந்தக்காரர் என் தாத்தா. அவர் வாடகை கேட்கும் பாணி இது. பணப் பிரச்சினை காரணமாக பாதி வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தார். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் உகந்த நல்ல பையன் ஒருவன் அளித்த அட்வான்ஸால் தற்காலிகமாகப் பணப் பிரச்னை தீர்ந்தது.

அப்புறம்தான் தெரிந்தது ஏற்கெனவே அவன் குடியிருந்த வீட்டைக் காலிசெய்த அன்று அந்த வீட்டார் ஆடு வெட்டி நேர்த்திக்கடனைச் செலுத்தியிருக்கிறார்கள் என்பது. தாத்தாவுக்கு அவனை எப்படி வீட்டைக் காலிசெய்ய வைப்பது என்ற பிரச்சினை தொடங்கியது.

எல்லோருக்கும் இப்படி ஏதாவது நேர்கிறது. வேலை இல்லாதவருக்கு வேலை கிடைத்தபோது, மகளுக்கோ-மகனுக்கோ திருமணம் ஆனபோது, கஷ்டப்பட்டு ஒரு வீட்டைக் கட்டியபோது... அத்துடன் அந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாக மகிழ்ச்சி அடைகிறோம். விரைவிலேயே உங்கள் சந்தோஷம் துக்கமாக மாறுகிறது.

ஏன் ? வேலையில் கசப்பு அடைகிறோம்; செல்லமாய் வளர்த்த மகள் கல்யாண உறவில் ஏமாற்றம் அடையும்போது வருந்துகிறோம்; கட்டிய வீட்டில் கடன் புகும்போது கலங்குகிறோம்.

ஆனால், நாம் பிரச்சினைகளைத் தீர்த்து விட்டதாக அவசரப்பட்டு நினைத்துக்கொள்கிறோம். பிற்பாடு அந்தப் பிரச்சினை வேறு வடிவத்தில் நம்மிடம் கை குலுக்கும்போது அதிர்ச்சி அடைகிறோம்.

நியாயப்படி நீங்கள் எதை பிரச்சினை என்று நினைத்தீர்களோ, அந்தப் பிரச்சினைக்கு நீங்கள் தீர்வு கண்டுவிட்டீர்கள் எனக் கருதினால் அதன்பிறகு அந்தப் பிரச்சினையினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கவே கூடாது.

பின் என்னதான் நடக்கிறது? நாம் எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதில்லை. இடம் மாற்றி வைக்கிறோம்; ஒளித்து வைக்கிறோம்; அதன் வடிவத்தை மாற்றி வைக்கிறோம்.

வேலையின்மை என்னும் பிரச்சினைதான் வேலையில் கசப்பாக மாறி இருக்கிறது. உங்கள் பெண்ணின் எதிர்காலம் பற்றிய பொறுப்புகளை இன்னொருவருக்கு மாற்றிவிட்டீர்கள். அந்தக் கணக்கின் தலைப்பு (Head of account) தான் மாறி உள்ளதே தவிர, மகள் மீதான உங்கள் அக்கறை இல்லாமல் போய்விடவில்லை. அது அந்த அக்கவுண்ட் ஷீட்டிலேயேதான் வேறு இடத்தில் உள்ளது. சொந்த வீடு இல்லை என்ற பிரச்சினைதான் புதிய வீட்டில் கடன் சுமையாக புகுந்துள்ளது.

இவை மட்டுமல்ல உலகில் எந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் அப்படித்தான். ஒரு பிரச்சினையை நீங்கள் எடுத்துக் கொண்டு அதைப் பகுத்துக் கொண்டே போனீர்கள் என்றால் அதன் மாறு வேடங்களை உணர்வீர்கள். எந்தப் பிரச்சினைக்குமே நிரந்தரத் தீர்வு சாத்தியமே இல்லை.

அப்படியானால் பிரச்சினைகள் தீராதா? கண்டிப்பாகத் தீராது.அதை ஒழித்துவிட்டதாய் நினைக்கவே நினைக்காதீர்கள்.பிரச்சினைகளின்போது நாம் செய்வதெல்லாம் பிரச்சினைகளுக்கு வேறு ஒப்பனைகள் போடும் வேலைதான். அதன் மூலம் பிரச்சினைகள் தீர்ந்த ‘மாதிரி’ உணர்வைப் பெறத்தான் இவ்வளவு முயற்சிகளும் பாடுகளும்.

இது புரியாமல் அவசரப்பட்டு பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று நினைப்பதால்தான் பின்னால் புலம்புகிறோம். சாம்பலிலிருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல அது வேறு விதத்தில் முளைத்து நிற்பதை ஏற்க முடியாமல் இன்னும் டென்ஷன் ஆகிறோம்.

பிரச்சினைகள் ஏற்படுவது என்பது நமக்குப் பசிப்பது போல. ஒருவேளை உணவு சாப்பிட்டால் போதும். ஆயுளுக்கும் பசிக்காது என்று யாரும் நினைப்பதில்லை. பிரச்சினைகளை மட்டும் ஏன் இனி வராது என்று நினைக்க வேண்டும்? பிற்பாடு அது வரும் போது ஏன் துவள வேண்டும்?

நியூட்டன் பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லியிருந்தால் இப்படித்தான் சொல்லியிருப்பார். “பிரச்சினைகளை ஆக்கவும் அழிக்கவும் முடியாது. ஆனால் பிரச்சினைகளை மற்றொரு வகைப் பிரச்சினைகளாக மாற்றி வைக்க முடியும். இதுவே பிரச்சினை அழிவின்மை விதி ..”

அலுவலகத் தோழி சொல்லுவாள். “இருபது ஃபைல்களை வச்சுக்கிட்டு வேலையை ஓட்டிக்கிட்டு இருக்கேன்...” உண்மையில் அதே போல்தான் எல்லோரும் மொத்தமே நான்கைந்து பிரச்சினைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

மசாலா தோசை, மைசூர் மசால், ஸ்பெஷல் மசால், ஆனியன், நெய் தோசை, மட்டன் தோசை என ஒரே மாவு மாறுவது போல், ஒரே பிரச்சினைதான் ‘ஒன்றே என்னின் ஒன்றே யாம், பல என்று உரைக்கின் பலவே யாம்’ என்று மாறுகிறது. அதை உணராது நாம் பிரச்சினைகளால் சூழப்பட்டிருப்பதுபோல் மயக்கம் கொள்கிறோம்.

பிரச்சினைகள் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. அது புதிய சட்டைகளை அணிந்து வருகிறது.

இங்கிலாந்தில் “மன்னர் இறந்து விட்டார்; மன்னர் வாழ்க” என்பார்கள். இறந்தவர் எப்படி வாழ முடியும் என்று குழம்ப வேண்டாம். ஒரு மன்னர் இறந்தவுடன் அடுத்த மன்னர் பதவிக்கு உடனடியாக வந்துவிடுவார். இதைக் குறிக்க “ஹென்றிகளும், ஜார்ஜ்களும் வருவார்கள் போவார்கள்...மணிமகுடம் மட்டும் என்றும் நிலைத்திருக்கும்” என்று சொல்வது பிரச்சினைகளுக்கும் பொருந்தும்.

பிரச்சினை முடிந்துவிட்டது; பிரச்சினை தயாராக இருக்கிறது!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024