Friday, October 16, 2015

மீத்தேன் வாயு திட்டத்துக்கு தடை!

logo

காவிரி டெல்டா பிரதேசத்தில் விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்துக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள உத்தரவால் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. இந்தப்பகுதியில், மீத்தேன் வாயு எடுக்க மத்திய அரசாங்கத்தின் முயற்சிக்கு அசைக்கமுடியாத ஒரு முட்டுக்கட்டையை தமிழக அரசு போட்டுவிட்டது. இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தந்த மகாத்மா காந்தி, பூமியை ஒரு தாய் என்றுதான் வர்ணித்தார். பூமித்தாயால் நமது தேவைகளை பூர்த்தி செய்யமுடியும். ஆனால், பேராசைகளை பூர்த்தி செய்யமுடியாது என்றார். பூமித்தாய் நமக்கு பால் ஊட்டத்தான் முடியும். அவளது உதிரத்தை எடுத்து குடிக்க நினைத்தால், அவள் உயிர் போய்விடும் நிலை ஏற்படும். அந்தவகையில் வேளாண் நிலங்களில் விவசாயம் செய்யதான் நினைக்க வேண்டும். வேறு பணிகளை செய்ய நினைக்கக்கூடாது.

இந்த நிலையில், கடந்த 2010–ம் ஆண்டு மத்திய அரசாங்கம் காவிரி டெல்டா பகுதியில் பழுப்பு நிலக்கரியும், அதோடு சேர்ந்து மீத்தேன் எரிவாயும் இருப்பதை கண்டறிந்தது. மீத்தேன் எரிவாயுவை எடுக்க திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் தாலுகாக்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி தாலுகாக்களிலும் சேர்த்து மொத்தம் 691 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் இந்த மீத்தேன் வாயு எடுப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த மீத்தேன் வாயுவுக்காக வெகு ஆழத்திற்கு துளையிடுவதன் மூலம் நெல்சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுவிடும் என்ற கருத்தில் தொடக்ககாலத்தில் இருந்தே விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

மீத்தேன் எரிவாயு தொழில்கள் வளர்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என்றாலும், விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும். வளம் கொழிக்கும் காவிரி பாசன பகுதிகள் பாலைவனமாகிவிடும். விவசாயத்தை இழந்து, அப்படியொரு தொழில் வளர்ச்சி தேவையா? என்பதுதான் வேளாண் பெருங்குடி மக்களின் பெரிய கவலையாகும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் 2011–ல் விவசாயிகளின் இந்த பிரச்சினையை கையில் எடுத்து தீவிரமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். உத்தேசிக்கப்பட்ட மீத்தேன் எரிவாயு திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்நீர் உட்புகுதல், வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படும் விளைவு மற்றும் மாசற்ற எரிசக்தி வளங்களை மேம்படுத்தலின் தேவை ஆகியவை குறித்து ஆராய ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழுவை அமைத்து அறிக்கைதர உத்தரவிட்டார்.

தற்போது, இந்த வல்லுநர் குழு இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, 15 அம்சங்களில் விளக்கங்களை தெளிவாக அளித்துள்ளது. இந்த அறிக்கையை பரிசீலித்து இந்த திட்டத்துக்கு தமிழக அரசால் எந்தவொரு அனுமதியும் வழங்கப்படாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காவிரி டெல்டா பாசனப்பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கோ, மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கோ செய்யப்படும் அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசாங்கம் கைவிடவேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுதொடர்பான எந்த முயற்சிகளையும் தொடங்குவதற்கு முன்னால் தமிழக அரசை கலந்தாலோசிக்கவேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வாழ்வை காத்த அறிவிப்பு மகிழ்ச்சிக்குரியது. அதேநேரத்தில், தொழில் வளர்ச்சிக்காக மீத்தேன் எரிவாயுவை எடுத்திட விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் மாற்றுவழிகள் ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆராய்வதற்கும் மத்திய அரசாங்கம் முயற்சி எடுக்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024