Saturday, October 17, 2015

வேண்டாம், இணைய மருந்து விற்பனை!


Dinamani

By ஆசிரியர்

First Published : 17 October 2015 03:14 AM IST


சில போராட்டங்கள் எந்தவிதப் பாதிப்பையும் மற்றவர்களுக்கு ஏற்படுத்தாமல் தாங்கள் வலியுறுத்த விரும்பிய கோரிக்கையை மக்களுக்கு சரியாகப் புரியவும் வைக்காமல் அமைந்துவிடும். அத்தகைய போராட்டங்களில் ஒன்றாக அமைந்தது, அக்டோபர் 14-ஆம் தேதி நாடு முழுவதும் மருந்துக் கடைகள் அமைதியாக நடத்திய கடையடைப்புப் போராட்டம். கடையடைப்பு முழுமையான வெற்றி என்றாலும், அதன் நோக்கம் மக்களிடையே கொண்டு செல்லப்படவில்லை என்பதே இதன் தோல்வி.
இந்தியா முழுவதிலும் எட்டு லட்சம் மருந்துக் கடைகளும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை 40 ஆயிரம் மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாடு முழுவதிலும் அம்மா மருந்தகம் மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த மருந்துக் கடைகள் செயல்பட்டதாலும், பெரும்பாலும் எல்லா மருத்துவமனைகளிலும் மருந்தகம் இருப்பதாலும், இப்போராட்டம் பொதுமக்களிடையே எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் பல கோடி ரூபாய்க்கான மருந்து விற்பனை நடைபெறவில்லை என்று சொல்லலாமே தவிர, தொழிற்சாலையின் உற்பத்தி பாதிப்பு போன்றவற்றை நஷ்டமாகக் கணக்கிட முடியாது. இன்று வாங்க இயலாத மாத்திரை, மருந்துகளை வாடிக்கையாளர்கள் முந்தைய நாளோ அல்லது அடுத்த நாளோ வாங்கிக் கொள்வார்கள்.
இந்தியா முழுவதும் தனியார் மருந்துக் கடைகள் எதற்காக அடைக்கப்பட்டன என்கிற காரணம் பொதுமக்களுக்கு தகுந்த முறையில் தெளிவுபடுத்தப்பட்டதா என்றால், இல்லை. இந்தியாவில் இணையத்தின் மூலம் மருந்துகள் விற்பனை நடத்தப்படக் கூடாது என்பதுதான் இந்தப் போரட்டத்தின் நோக்கம்.
இணையதளத்தின் மூலமாக மருந்துகளை விற்பனை செய்யும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான சாத்தியங்களை ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் தங்களது விற்பனை பாதிக்கப்படும் என்கிற அச்சத்தால் அல்ல. போலி மருந்துகள், தடை செய்யப்பட்ட மருந்துகள் இணையத்தின் மூலம் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் கிடைப்பது பொதுநலனுக்கு பெரும் கேடு விளைவிக்கும் என்ற விழிப்புணர்வுக்கான போராட்டம் இது.
இப்போதும்கூட இணையதளத்தின் மூலம் மருந்து விற்பனை இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. வெளிநாட்டு முகவரி கொண்ட இணையதளங்களில் நமக்குத் தேவைப்படும் மருந்துகளின் பெயரைப் பதிவு செய்து, பணத்தை செலுத்தினால், அவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் முகவர்கள் மூலம் கூரியரில் அனுப்பி வைக்கிறார்கள். இந்தியாவுக்குள் அனுப்பப்படும் கூரியர் கடிதம் அல்லது சிறு பார்சல்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்பதால், இத்தகைய இணைய வர்த்தகம் இப்போதும் நடைபெறவே செய்கிறது.
இவ்வாறு முறைகேடாக இணையதளம் மூலம் மருந்துகள் வாங்கிய நபர்கள், வாங்கி மற்றவர்களுக்கு விற்பனை செய்தவர் என பலர் பல ஊர்களில் கைதாகியுள்ளனர். இவர்கள் வாங்கும் மருந்துகள் அனைத்தும் மூன்று வகைகளில் அடங்கிவிடக் கூடியவை: 1. போதை அல்லது மனவெழுச்சி தரும் மாத்திரைகள், 2. மனச்சிதைவு நோயாளிகளுக்குத் தரப்படும் செயல்பாட்டை மந்தப்படுத்தும் மாத்திரைகள், 3. ஆண்மைக் குறைவுக்காக பயன்படுத்தப்படும் வயகரா போன்ற பல்வேறு மாத்திரைகள்.
இவை அனைத்தும் மருத்துவர்களால், குறிப்பிட்ட நோயாளிகளுக்கு அவர்களது உடல்திறன் மற்றும் அப்போதைய உடல்நிலைக்கேற்ப பரிந்துரைக்கப்பட வேண்டிய மாத்திரைகள். ஆனால், சட்ட விரோதமாக இவற்றை வாங்கத்தான் இந்தியாவில் இணையதள மருந்து வணிகம் பயன்படுகிறது. இந்த மாத்திரை, மருந்துகளின் அளவும் மிகச் சிறியதாக இருக்கும்வரை இதுபற்றி போதை மருந்து கட்டுப்பாட்டுத் துறையும் கவலைப்படுவதில்லை.
"மருத்துவர் பரிந்துரைக் கடிதம் கட்டாயமல்ல' என்று வெளிப்படையாகச் சொல்லும் இணைய மருந்து விற்பனை முகவர்களிடம் இத்தகைய தடை செய்யப்பட்ட மருந்துகளே வாங்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் நுகர்வோருக்கு வந்து சேரும்போது, போலியானதாக, தரமற்றதாக இருக்கின்றன. பலர் இவற்றை உள்கொண்டு பக்கவிளைவுக்கு பலியாகிறார்கள். அல்லது சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சிலர் இதை வெளியில் சொல்லக் கூச்சப்பட்டு, நஷ்டத்தை மெüனமாக சகித்துக் கொள்கிறார்கள்.
போதை மற்றும் மனவெழுச்சி தரும் மாத்திரைகளை இவ்வாறு இணையத்தின் மூலம் வாங்கிப் பயன்படுத்துவோரில் பெரும்பாலோர் இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள். ஆகவே, இணையத்தின் மூலம் மருந்து வணிகத்தை அனுமதிப்பதால் தற்போதைய மருந்துக் கடைகளுக்கு நஷ்டம் ஏற்படாது. வழக்கம்போல விற்பனை நடக்கும்.
இன்றைய உலகளாவிய இணைய வணிக நடைமுறைக்கு மாறாக, இணையத்தின் மூலம் மருந்துகள் வாங்குவதைத் தடை செய்ய முடியாது என்பது நிதர்சனம் என்றாலும்கூட, அதைக் கட்டுப்படுத்துவதும், போலி மருந்துகளின் ஆபத்துகளை இளைஞர்கள் மற்றும் பெற்றோரிடம் எடுத்துச் சொல்வதும் இயலக்கூடியதே.
"நாடு முழுவதும் எட்டு லட்சம் மருந்துக் கடைகள் இருக்கும்போது, மருத்துவமனைகளிலேயே இணைந்துள்ள மருந்தகம் இருக்கும்போது, இணையத்தின் மூலம் மருந்துகளை வாங்கி ஏமாறாதீர்கள். உடல்நலப் பாதிப்பை நீங்களே வரவழைத்துக் கொள்ளாதீர்கள்' என்ற விழிப்புணர்வுதான் இன்றைய தேவை. இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவர்களாக மருந்துக் கடைகள் இருந்தாலே போதும், நாட்டுக்கு நன்மை செய்தவர்களாவார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024