By ஆசிரியர்
First Published : 29 October 2015 01:22 AM IST
தமிழ்நாட்டில் சீனப் பட்டாசுகளை விற்பனை செய்தால், அந்தக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு அனுமதி வழங்கும் தீயணைப்புத் துறையிடம், ஒவ்வொருவரும் தாங்கள் சீனப் பட்டாசுகளை விற்கவில்லை என்ற உறுதிமொழிப் படிவத்தை அளிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புடன் நிற்காமல், பல ஊர்களில் பட்டாசுக் கடைகளில் திடீர் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய திடீர் சோதனைகள் தொடர்ந்து தீபாவளி வரை நடத்தப்படுமேயானால், சீனப் பட்டாசுகள் விற்பனையைப் பெருமளவு குறைத்துவிட முடியும். ஆனால், இது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியமாகும். மற்ற மாநிலங்களில் இதே போன்ற கண்டிப்பும், கறாரான நடவடிக்கையும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
தமிழகத்தையொட்டிய ஆந்திரம், கர்நாடகம், கேரள எல்லைப் பகுதிகளில் பட்டாசுக் கடை நடத்துவதும், தமிழக மக்கள் இங்கு பட்டாசுகள் வாங்குவதும் மிகப்பெரும் வணிகமாக இருந்துவருகிறது. தமிழக அரசின் கடும் நடவடிக்கைகள் இத்தகைய எல்லை தாண்டிய கடைகளில் சாத்தியமில்லை. மக்களை அங்கே போய் வாங்காதீர்கள் என்று தடுக்கவும் முடியாது.
சீனப் பட்டாசுகள் இந்தியாவுக்குள் கடத்தப்பட்டு வருவதை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்தே சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை தலையிட்டு, சீனப் பட்டாசுகள் விற்பனைக்கு 2014 அக்டோபரில் தடை விதித்தது. ஆனால், அது வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் இல்லை. இதன் விளைவாக, மொத்த உற்பத்தியில் 35% சிவகாசி பட்டாசுகள், கடந்த தீபாவளியின் போது விற்பனையின்றித் தேங்கின.
ஆண்டுக்கு ரூபாய் ஐந்தாயிரம் கோடி அளவுக்கு விற்பனையாகும் சிவகாசியின் பட்டாசுகளில், 70% இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இவற்றில் மொத்தம் 35% விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தது என்றால், சென்ற ஆண்டு இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு எத்தகையது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்த ஆண்டிலும் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து சீனப் பட்டாசு குறித்த எச்சரிக்கையை அரசுக்குத் தெரிவித்து வந்த போதிலும், அகில இந்திய அளவில் குறிப்பிடும்படியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சீனப் பட்டாசுகள் அரசு அனுமதியுடன் இறக்குமதி செய்யப்படுவதில்லை. இவை இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகின்றன. ஆகவேதான், இவை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஜூன் மாதம், மும்பை துறைமுகத்தில் வந்து இறங்கிய 15 சரக்குப் பெட்டகங்களைச் சோதித்துப் பார்த்ததில் ரூ.17 கோடி மதிப்புள்ள சீனப் பட்டாசுகள் இருப்பதைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். இந்த சரக்குப் பெட்டகங்களில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள சீனக் கண்ணாடிக் குவளைகள் இருப்பதாகக் கணக்குக் காட்டப்பட்டிருந்தாலும், அதன் உள்ளே இருந்தவை பட்டாசுகள். இதுபோன்று பல துறைமுகங்கள் வழியாக, பல வகையிலும் சீனப் பட்டாசுகள் உள்ளே நுழைந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்தியா முழுவதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, இந்த முறைகேடான விற்பனையைத் தடுக்க முடியும்.
சீனப் பட்டாசுகள் மிகக் குறைந்த கூலியில் தயாரிக்கப்படுவதாலும், எந்தவிதமான அரசுக் கட்டுப்பாடும் இல்லாமல் தயாரிக்கப்படுவதாலும், அவற்றைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய இயலுகிறது என்று சிவகாசிப் பட்டாசுத் தயாரிப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். விலை சற்றுக் குறைவு என்பது உண்மையே. என்றாலும், மக்களை சீனப் பட்டாசை வாங்க வைத்ததில் சிவகாசிப் பட்டாசுத் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு இருக்கிறது.
பட்டாசு பாக்கெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச விலையைக் காட்டிலும் குறைந்த விலையில்தான் உள்ளூர்க் கடைகளில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்ச கழிவு (கமிஷன்) தருவதாகக் காட்டுவதற்கும், சில்லறை விற்பனையாளர்கள் கூடுதல் லாபம் அடைந்துகொள்ளவும் கையாளப்படும் உத்தி இது. இவ்வாறான விற்பனை நுகர்வோரிடம் நம்பகமின்மையை ஏற்படுத்துகிறது. ஆகவே, அவர்கள் இந்தியத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பற்றிய எண்ணமே இல்லாமல், சீனப் பட்டாசுக்கு மாறுகிறார்கள்.
ஒரு பொருளின் அதிகபட்ச விலைக்கும், கடைக்காரர்கள் கொடுக்கும் விலைக்கும் மிகப்பெரும் இடைவெளி ஏற்படும்போது, அந்தப் பொருளைத் தயாரிப்போர் மீதான நம்பகத்தன்மை குறைகிறது. நாம் கொடுக்கும் பணத்தின் பெரும்பகுதி கமிஷனாக அல்லது தனிநபர் லாபமாகப் போகிறது என்கிறபோது, நுகர்வோர் அந்தப் பொருளை வாங்குவதைக் குறைக்க அல்லது தவிர்க்க முனைகிறார்கள். நியாயமான விலை நிர்ணயம் மட்டுமே இந்தியர்கள் அனைவரையும் சிவகாசி தயாரிப்புகளை மட்டுமே வாங்கிடச் செய்யும்.
தடை செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைடு மருந்து சீனப் பட்டாசுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வெளிப்படும் புகை அதிக நச்சுத்தன்மை கொண்டது. உடல் நலனுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் கேடு விளைவிக்கும். ஆகவே, இது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
நிகழாண்டில் சிவகாசி பட்டாசுகள் தேக்கமடையாமல், குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக்குள் சீனப் பட்டாசு இல்லாமல் இருக்க, தமிழக அரசு தொடர்ந்து அதிரடி வெடிச் சோதனைகளை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். எல்லா மாநிலங்களும் தமிழகத்தை பின்பற்ற வேண்டும்.
No comments:
Post a Comment