Thursday, October 8, 2015

நெறிமுறை வேண்டும்

Dinamani


By ஜெ. ராகவன்

First Published : 08 October 2015 02:35 AM IST


நாடாளுமன்ற உறுப்பினர்களின் (எம்.பி.க்கள்) ஊதியம் மற்றும் இதர படிகளை மாற்றியமைப்பது தொடர்பாக மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு நிறுவியுள்ளது வரவேற்கத்தக்கது.
இந்த யோசனை ஒன்றும் புதிது அல்ல. 2005-ஆம் ஆண்டு அப்போது மக்களவைத் தலைவராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி, எம்.பி.க்களின் ஊதியம், இதர படிகளை உயர்த்துவது குறித்து பரிந்துரை செய்ய ஒரு குழுவை ஏற்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு எம்.பி.க்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை அவ்வளவுதான்.
எம்.பி.க்களின் ஊதியம் கடைசியாக 2010-இல் உயர்த்தப்பட்டது. அதாவது, எம்.பி.க்களுக்கு ஊதியமாக ரூ.50 ஆயிரம், தொகுதிப் படி மற்றும் அலுவலகப் படி தலா ரூ.45 ஆயிரம் என மொத்தம் ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை இரண்டு மடங்காக அதாவது, ரூ.2.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.
இதுதவிர, அவர்களுக்கு தங்குமிடம், விமானம், ரயில் பயணம், மூன்று தொலைபேசி இணைப்பு, இரண்டு செல்லிடப்பேசி இவற்றுக்கான செலவுகளும் சலுகைகளாக வழங்கப்படுகின்றன.
இது இப்படியிருக்க, மக்களின் பிரச்னைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காதவர்கள், நாடாளுமன்றத்தை சரிவரச் செயல்படவிடாமல் செய்பவர்கள், தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்யாத மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த அளவு ஊதிய உயர்வு தேவையா என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எம்.பி., எம்.எல்.ஏ. பதவிக்குப் போட்டியிடும் ஒருவர், தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வந்தவுடன் மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
இந்தநிலையில், அவர்களது ஊதியம் மற்றும் இதர படிகளை கணிசமாக உயர்த்தித்தர வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சொல்லப்போனால், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் நேர்மையாகச் செயல்படும் எம்.பி.க்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
தற்போது வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர படிகள் மற்றும் சலுகைகளே போதுமானது. எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மட்டும் அவ்வப்போது உயர்த்தினால் போதும் என்ற கருத்தும் சில எம்.பி.க்களிடம் உள்ளது.
முன்பு ஊதியத்தைப் பற்றி கவலைப்படாமல், மக்கள் சேவையைக் கருத்தில் கொண்டே அரசியல் மற்றும் அரசியல் சாராத பிரமுகர்கள் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டனர்.
ஆனால், இன்று எப்படியாவது எம்.பி.யாகிவிட்டால் நல்ல சம்பளம், படிகள் கிடைக்கும். அதிகாரமும் கைக்கு வந்துவிடும் என்ற எண்ணத்தில் பலரும் எம்.பி. பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.
நமது நாட்டில் எம்.பி.க்களுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம், மற்றும் இதர படிகள் மற்ற நாடுகளில் வழங்கப்படுவதைவிட குறைவாக இருக்கலாம். அவர்களின் பதவிக்கு ஏற்ப ஊதியம் இருக்க வேண்டும் என்பதும் நியாயமானதாக இருக்கலாம்.
அதற்காக அவர்களாகவே தங்களது ஊதியத்தை இரட்டிப்பாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது ஏற்புடையதல்ல. எம்.பி.க்களின் ஊதியத்தை நிர்ணயிப்பதில் ஒரு நெறிமுறை வேண்டும்.
ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் அரசில் உயர் அதிகாரியாக பதவி வகிப்பவர்களின் ஊதியத்தை தொடர்புபடுத்தி எம்.பி.க்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
மெக்ஸிகோவில் எம்.பி.க்களுக்கு கணிசமான தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் வேறு எந்த தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்பது அந்த நாட்டு விதி. அமெரிக்காவில் எம்.பி.க்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அவர்களின் வெளி வருமானம் வாங்கும் சம்பளத்தில் 15 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது.
ஆனால், நமது நாட்டில் மட்டும்தான் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஊதியம் பெறும் விஷயத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
நம் நாட்டில் மொத்தம் உள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 60 சதவீதத்துக்கும் மேலானவர்கள் கோடீஸ்வரர்கள். மாநிலங்களவை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் கோடீஸ்வரர்கள்.
ஒருமுறை எம்.பி.யானவர் மீண்டும் எம்.பி. தேர்தலில் போட்டியிடும்போது அவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 300 சதவீதம் உயர்ந்திருப்பதாக தோராயமான கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அதிகாரிகளும், ஊழியர்களும் வேலைக்கு வராவிட்டால் ஊதியம் பிடித்தம் செய்வதுபோல, எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வராத நாள்களிலும் அப்படியே வந்து நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் தடுத்தாலும் அதை வேலை செய்யாத நாள்களாக கருத்தில் கொண்டு அவர்களின் ஊதியம் மற்றும் படிகளை பிடித்தம் செய்ய வேண்டும் என்ற யோசனையும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
நாடாளுமன்றம் என்பது மதிப்பு மிக்க இடம். அங்கு மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசவும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு குரல் கொடுக்கவும்தான் மக்கள் பிரதிநிதிகளாக எம்.பி.க்கள் செல்கின்றனர். ஆனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்படுத்துவதும், அவையைச் செயல்படவிடாமல் செய்வதும் அவர்களுக்கு அழகல்ல.
எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வை வழங்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதையும், அவர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு கிடைக்க வேண்டும் என்பதையும் வரவேற்கும் அதேசமயத்தில், அவைக்கு ஒழுங்காக வராத எம்.பி.க்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்யவேண்டும், நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுக்கும் எம்.பி.க்களை திரும்ப அழைக்க வேண்டும் போன்ற யோசனைகளையும் விவாதித்துப் பரிசீலிக்க வேண்டும்.
எம்.பி.க்கள் விஷயத்தில் இது சாத்தியமா என்று சிலர் கேட்கலாம். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால்தான் நாடாளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024