Saturday, October 17, 2015

சீர்திருத்தப்படுமா சட்டக் கல்வி?


Dinamani

By இராம. பரணீதரன்

First Published : 17 October 2015 03:20 AM IST


கல்வியின் நோக்கமே ஏன், எதற்கு, எப்படி எனக் கேள்வி கேட்டு அறிவை வளர்த்துக் கொள்வதாகும். அதிலும் சட்டக் கல்வி என்பது கேள்விகள் கேட்பதோடு மட்டுமன்றி, சட்டத்தின் துணையோடு நீதியை நிலைநாட்டுவதாகும்.
இத்தகைய சட்டக் கல்வி சீர்திருத்தப்பட வேண்டுமென சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி தனது ஆலோசனையைத் தெரிவித்திருப்பதை பாராட்ட வேண்டும். மருத்துவம், பொறியியல் போன்று சட்டமும் ஒரு தொழில்கல்வியாகும்.
ஆனால், மருத்துவம், பொறியியல் பயிலும் மாணவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை சட்டக் கல்லூரி மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதேபோல் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் மற்ற தொழில்கல்வி மாணவர்களைப் போல வேலைவாய்ப்போ, வருமானமோ வழக்குரைஞர்களுக்கு கிடைப்பதில்லை.
ஏதேனும் ஒரு மூத்த வழக்குரைஞரிடம் சென்று 5 முதல் 10 ஆண்டுகள் அவரிடம் உதவி வழக்குரைஞராகப் பணிபுரிந்து மெதுமெதுவாக நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கும் முறைகள், வாதாடும் நுணுக்கங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இச்சூழ்நிலையில், குறைந்த காலகட்டத்தில் வருமானம் மற்றும் நற்பெயர் பெறவேண்டி, ஒருசில வழக்குரைஞர்கள் செய்யும் விரும்பத்தகாத காரியங்களால் வழக்குரைஞர் சமுதாயமே அனைவரின் வெறுப்பையும் சம்பாதிக்கும்படியாகிறது.
இத்தகைய சம்பவங்கள்தான் தற்போது தமிழகத்தில் நடைபெற்று நீதிபதிகள் மற்றும் மக்களின் வெறுப்புக்கு வழக்குரைஞர்கள் ஆளாகும்படி செய்துவிட்டது.
உதாரணமாக, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மதுரை வழக்குரைஞர்கள் கட்டாய தலைக்கவசம் உத்தரவை எதிர்த்துப் போராடியது, தமிழை வழக்கு மொழியாக மாற்றக் கோரி போராடியது போன்றவற்றைக் கூறலாம்.
தற்போது 90% சதவீதம் பேர் தலைக்கவசம் அணிந்து பயணிப்பதே நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இந்நிலையில், 10% வழக்குரைஞர்கள் தலைக்கவசம் அணியாமலோ, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோ போராடுவதை நீதிமன்றம் கண்டுகொள்ளாமலோ அல்லது அந்தச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டித்தோ, மன்னித்தோ அனுப்பியிருக்கலாம்.
எத்தனையோ அரசு, காவல் துறை அதிகாரிகள், தலைமைச் செயலர்கள் போன்றோர், நீதிமன்ற உத்தரவை அவமதித்தோ, கடைப்பிடிக்கத் தவறியோ, மீறியோ நடக்கும்போது அவர்களுக்கு அபராதம், பிடியாணை போன்றவற்றை விதிக்கும் நீதிமன்றம், பின் அவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கோருவதைத் தொடர்ந்து தண்டனையை குறைத்தோ, விலக்கியோ விடுவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல, இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்ட வழக்குரைஞர்களையும் நீதிபதிகள் மன்னித்திருக்கலாம்.
வழக்குரைஞர்களின் இந்தப் போராட்ட குணத்துக்கு அவர்களின் கல்வியும் ஒரு முக்கியக் காரணம். உதாரணமாக, அனைத்து தொழில்படிப்பு முடித்தவர்களும் தங்களின் கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு தொழிலில் இறங்கிவிடலாம்.
ஆனால், சட்டக் கல்வி பயில்பவர் மட்டும் 3 அல்லது 5 ஆண்டு படிப்புக்குப் பிறகு அனைத்து இந்திய பார் கவுன்சில் நடத்தும் புத்தகத்தைப் பார்த்து எழுதும் வகையிலான தகுதித் தேர்வை எழுதி, சான்றிதழ் பெற்றால் மட்டுமே வழக்குரைஞராகப் பணிபுரியத் தகுதி பெறுவர் என்ற விதியைக் கூறலாம்.
சட்டக் கல்லூரியில் படித்து, சட்டங்களை உருப்போட்டு தேர்வெழுதி, வழக்குரைஞராகப் பதிவு செய்தால், சில மணி நேரம் மட்டும் நடைபெறும் கொள்குறி வகைத் தேர்வை, அதுவும் புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வை, எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வழக்குரைஞராகப் பணியாற்ற முடியும் என்ற விதி எந்தளவுக்கு நியாயமானது எனத் தெரியவில்லை.
அப்படியெனில், ஆண்டுக்கணக்கில் அவர்கள் படித்தது வழக்குரைஞர் எனும் தகுதியைத் தராதா என்ன? இதே போன்ற ஒரு தகுதித் தேர்வை மருத்துவர்களுக்கோ, பொறியாளர்களுக்கோ நடத்த முடியுமா?
வங்கி ஊழியர்களும், ஆசிரியர்களும் கூடத்தான் ஊதியம் போதவில்லை எனப் போராடுகின்றனர். ஆனால், வழக்குரைஞர்கள் போராடுவது மட்டும் தவறா? அனைவரும் அவரவர் பணிபுரியும் இடத்தில் தானே போராட முடியும். வழக்குரைஞர் நீதிமன்றத்தில்தானே போராட முடியும்?
இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு, சட்டக் கல்வி மற்றும் வழக்குரைஞர் சட்டங்களில் மாற்றம் கொண்டு வரவேண்டும். வடமாநில பொம்மை சட்டக் கல்லூரிகளைத் தடை செய்து, தரமான சட்டக் கல்வியை அரசு மட்டுமே வழங்க வேண்டும்.
கல்லூரியில் படித்து பட்டம் பெற்றால் மட்டுமே போதும், அவர் வழக்குரைஞர்தான். மேலும் ஒரு கண்துடைப்பு தகுதித் தேர்வு எதற்கு?
படிப்பு முடித்தவுடன் வழக்குரைஞர்களுக்கு குறைந்தபட்சம் மூன்றாண்டுகளுக்காவது பயிற்சி உதவித்தொகை வழங்கி, அவர்களை முழுமையாக நீதிமன்றப் பணிகளில் ஈடுபடுத்தி, சட்ட வல்லுநர்களாக்கவேண்டும்.
ஏதேனும் மூன்றாண்டு பட்டம் பெற்றவர்களை மட்டுமே சட்டக் கல்வியில் சேர அனுமதிக்க வேண்டும். அதாவது, 3 ஆண்டு சட்டக் கல்விக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் மனப்பக்குவத்தை எதிர்பார்க்க முடியும்.
மேலும், நாட்டின் வேதம் என்று சொல்லப்படும் அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியாவில் தொடக்கக் கல்வியில் இருந்தே பாடமாக வைத்து மாணவர்களுக்கும் சட்ட அறிவை அளிக்க முன்வரவேண்டும்.
சட்டக் கல்வி சீர்திருத்தப்பட்டால்தான் சட்டமும் சரி, நீதியும் சரி சரியான முறையில், சரியானவர்களுக்கு கிடைக்கும். இல்லையெனில், போராட்டங்கள் மட்டுமே தொடர்கதையாகிவிடும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024