Sunday, October 11, 2015

5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசியின் வாழ்க்கை வரலாறு!

vikatan.com
மிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்போடு "ஆச்சி' என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமா ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் சினிமாவில் இவர் நடிக்காத கேரக்டேரே கிடையாது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1937, மே 26 ஆம் தேதி  காசி குலோகுடையார் - ராமாமிதம் தம்பதிக்கு  மகளாக மனோரமா பிறந்தார். இயற்பெயர் கோவிந்தம்மாள் . குடும்பத்தில் வறுமை சூழல்.இதனால் காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு வந்து சேர்ந்தது மனோரமா குடும்பம். யார் மகன்? என்ற நாடகத்தில் மனோரமா நடிக்கும் போது அவரது வயது வெறும் 12 .

நாடக இயக்குநர் திருவேங்கடம்தான்   இவருக்கு "மனோரமா' என பெயர் சூட்டினார்.  முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய "வேலைக்காரி' உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய "உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும் நடிக்க மனோரமா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து 1958ல் "மாலையிட்ட மங்கை' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். கவிஞர் கண்ணதாசன்தான் இவரை சினிமாவுக்கு அழைத்து வந்தார். முதல் படமே காமெடி ரோலில் கலக்கினார். அந்த காலக்கட்டத்தில் நகைச்சுவை நடிகர் நாகேசுடன் மனோரமா தோன்றினார் தியேட்டரை சிரிப்பலையில் மூழ்கி கிடக்கும். 

தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமாராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார். ஆயிரத்திற்கு மேற்பட்ட நாடகங்களில் மனோரமா நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்துள்ளார். எத்தனை பக்கம் வசனமென்றாலும் காட்சிக்கு ஏற்றவாறு பேசி அசத்தி விடும் தனித்திறமை மனோராமாவுக்கு உண்டு.

தில்லானா மோகனம்பாள் படத்தில்  சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோருடன் மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் "ஜில் ஜில் ரமாமணி' என்ற கேரக்டர் அந்த காலத்திலேயே மிக பிரபலமாக இருந்தது. 

"கண் திறந்தது' படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமாநாதனை  மனோராமா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார். கடைசியாக மனோரமா நடித்த படம் பொன்னர் சங்கர் ஆகும்.100 க்கு மேற்பட்ட பின்னணி பாடல்களையும் மனோரமா பாடியுள்ளார். 
 
1989ம் ஆண்டு "புதிய பாதை' என்ற படத்தில் நடித்தற்காக, "சிறந்த துணை நடிகைக்கான' தேசிய விருது மனோரமாவுக்கு வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான "பத்ம ஸ்ரீ' விருதை மனோரமா பெற்றார்.
இவரது நடிப்பை அங்கீகரிக்கும் வகையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கியது. ஆயிரம் படத்திற்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் நடிகை மனோரமா இடம் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024