Monday, October 19, 2015

நுகர்வோரே விழித்திருங்கள்.....dinamani


By எஸ். பாலசுந்தரராஜ்

First Published : 19 October 2015 02:01 AM IST


நாம் கடையில் சென்று ஒரு பொருளை வாங்கும்போது, பெரும்பாலானோர் அதில் ஐ.எஸ்.ஐ. முத்திரை அல்லது அக்மார்க் முத்திரை உள்ளதா என கவனிப்பதில்லை.
மேலும் பலர் தயாரிப்பு தேதி, காலாவதி தேதியையும் பார்ப்பதில்லை. பொதுமக்களின் இந்த அறியாமையை சில வியாபாரிகள் பயன்படுத்தி தங்களது பொருள்களை விற்பனை செய்து விடுகிறார்கள். எனவே, நுகர்வோர் விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியமாகிறது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, பகுதி2(1)(டி) பிரிவின்படி நுகர்வோர் என்பதன் விளக்கம், பணம் கொடுத்து ஒரு பொருளையோ, பணியையோ, சேவையையோ தன் சொந்த உபயோகத்திற்கு பெறும் ஒருவர் நுகர்வோர் ஆவர். பொருளை வணிக நோக்கத்துடன் வாங்கும் நபர் நுகர்வோராக இருக்க முடியாது.
இருப்பினும், தனது சுய வேலைவாய்ப்பிற்காக அல்லது தனது வாழ்வின் ஆதாரத்திற்கான பொருளை வாங்கியிருப்பவர் அவர் நுகர்வோராகக் கருதப்படுவார். பொருளின் தரம், எடை, அளவு, தூய்மை போன்றவற்றில் குறைபாடு இருந்தால் அந்தப் பொருளை தரமற்ற பொருள் என கருத வேண்டும்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, பிரிவு2(1)(ஜி) பிரிவின் படி பணம் கொடுத்து சேவையைப் பெற்றுக்கொள்ளும்போது, வாக்களித்தபடி சேவை கொடுக்கப்படாமல் சேவை பெற்றவரை இன்னல்களுக்கு ஆளாக்குவது சேவை குறைபாடு ஆகும்.
உதாரணமாக, பேருந்து பயணத்தின் போது பணம் கொடுத்து பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர் அல்லது நடத்துநர் நம்மை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினால் அல்லது குறிப்பிட்ட நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாவிட்டால் அது சேவை குறைபாடு ஆகிறது. இது பணம் கொடுத்து வாங்கும் சேவைகள் (சர்வீஸ்) எனப்படும்.
தொலைபேசி சேவை, காப்பீடு சேவை, பணம் கொடுத்துப் பெறும் மருத்துவச் சேவை, வங்கிச் சேவை, ரயில்வே சேவை, உணவு விடுதி உள்ளிட்டவையும் இதுபோன்ற பணம் கொடுத்து வாங்கும் இதர சேவைகள்.
நுகர்வோர் சேவை குறைபாடுகள், பொருள்களின் அளவு, தரம் குறித்து புகாரின் தன்மையைப் பொருத்து மாவட்ட, மாநில, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் புகார் செய்யலாம்.
கோரும் நஷ்டஈட்டுத் தொகை ரூ.20 லட்சம் வரை இருந்தால் மாவட்ட நீதிமன்றத்திலும், ரூ.20 லட்சத்திற்குமேல் ஒரு கோடி ரூபாய் வரை இருந்தால் மாநில நுகர்வோர் நீதிமன்றத்திலும், ரூபாய் ஒரு கோடிக்கு மேற்பட்டு இருந்தால் தேசிய நுகர்வோர் தீர் ஆணையத்திடம் நேரடியாகப் புகார் செய்யலாம்.
பொருள் அல்லது சேவையை விலைகொடுத்து வாங்கிய நபர், பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்பு, மத்திய, மாநில அரசு, ஒத்த நோக்கங்களைக் கொண்ட நுகர்வோரின் சார்பில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நுகர்வோர் கூட்டாக புகார் செய்யலாம்.
நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்யும் முன்னர் வாங்கிய பொருள்களுக்கான ரசீதை அவசியம் வைத்திருக்க வேண்டும்.
அனைத்து மூல ஆவணங்களையும் ஒரு கோப்பில் வைத்திருங்கள். நீதிமன்ற உத்தரவின்றி வேறு எவரிடமும் அதைக் கொடுக்காதீர்கள். தேவைப்படும்போது நகல் எடுத்து பயன்படுத்துங்கள்.
புகார் செய்பவரின் பெயர் மற்றும் முழுமையான முகவரி, எதிர்தரப்பினர் பெயர் மற்றும் முழுமையான முகவரி, பொருள் வாங்கிய மற்றும் சேவை பெற்ற தேதி, செலுத்தப்பட்ட தொகை, பொருள்களின் விவரம், வர்த்தக நடைமுறை, குறையுள்ள பொருள், சேவையில் குறைபாடு, கூடுதல் கட்டணம் வசூலித்தது, இவற்றில் எதைப் பற்றி கூற வேண்டுமோ அது குறித்து தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
பட்டியல், ரசீது நகல்கள், இதுதொடர்பான கடிதப் போக்குவரத்து இருப்பின் அதன் நகல்கள், இந்தச் சட்டத்தின் கீழ் எதிர்நோக்கும் நிவாரணத் தொகை உள்ளிட்ட விவரங்கள் நீங்கள் அளிக்கும் புகாரில் இருக்க வேண்டும்.
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய, ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டஈடு கோரினால் ரூ.100-ம், ஒன்று முதல் ஐந்து லட்சம் வரை ரூ.200-ம், ஐந்து லட்சம் முதல் 10 லட்சம் வரை ரூ.400-ம், 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை ரூ.500-ம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் வரைவு காசோலையாக புகாருடன் இணைக்க வேண்டும்.
மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை ரூ.2,000-ம், 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை ரூ.4,000-ம் வரைவு காசோலை இணைக்க வேண்டும்.
தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரூ.5,000}துக்கு வரைவு காசோலையை இணைக்க வேண்டும்.
தில்லியில் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறி அமர்ந்திருந்த பயணியிடம், திருடன் ஜன்னல் வழியே நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டான். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் ரயில்வே சேவை குறைபாட்டினால்தான் திருட்டு நடைபெற்றது என நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ரயில்வே நிலையத்திற்குள் கட்டணம் செலுத்திய பின்னர்தான் பயணி நிலையத்திற்குள் வருகிறார்.
எனவே, திருட்டு நடைபெற்றது ரயில்வே துறையின் சேவை குறைபாடுதான். உரிய நஷ்டஈட்டை ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, நுகர்வோரே விழித்திருங்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024