By ஆசிரியர்
First Published : 23 October 2015 12:58 AM IST
புதிய மாநிலத்தை உருவாக்குவதைக் காட்டிலும் மிகக் கடினமான வேலை புதிய தலைநகரம் அமைப்பது. புது தில்லி, சண்டீகர் போன்ற நகரங்களுக்குப் பிறகு, இந்தியாவில் புதிதாக ஒரு தலைநகரை உருவாக்கும் பொறுப்பும், பெருமையும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குக் கிடைத்துள்ளது.
ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டவுடன், ஹைதராபாத் நகரை பத்து ஆண்டுகள் வரைதான் பொதுத்தலைநகராக பயன்படுத்த முடியும் என்ற நிலையில், ஒரு புதிய இடத்தைத் தலைநகராகத் தேர்வு செய்து, வசதிகளை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு ஆந்திர மாநில முதல்வருக்கு ஏற்பட்டது. குண்டூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் என, தற்போதைய நகரங்களில் ஒன்றையே தலைநகராகத் தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பும், அப்பகுதி சார்ந்த மக்களின் அழுத்தமும் இருந்தாலும், புதிய இடத்தைத் தேர்வு செய்தார் சந்திரபாபு நாயுடு.
கிருஷ்ணா நதிக்கரையோரம் குண்டூர்- விஜயவாடாவுக்கு இடையே அமராவதியில் 32 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில் அமையவிருக்கும் தலைநகருக்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. பூமிபூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். பத்து ஆண்டுகளில் இந்த நகரை, அதாவது சந்திரபாபு நாயுடுவின் மொழியில் சொன்னால், இந்தியாவின் சிங்கப்பூரை, அமைத்துவிட வேண்டும் என்ற தீவிரத்துடன் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு இல்லாமல் இல்லை. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. ஒரு தலைநகருக்கான அலுவலகம், சட்டப்பேரவை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான வீடுகள் ஆகியவற்றை அமைக்க அதிகபட்சம் 1,000 ஏக்கர் போதும் என்றார்கள். புதிய இடத்தில் மரங்கள் வெட்டப்படும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்த்தன. நான்கு போகம் காணும் விளைநிலம் பறிக்கப்படுவதாக விவசாய அமைப்புகள் எதிர்த்தன. 58 தாலுகாக்களைச் சேர்ந்த 500 கிராம மக்கள் வெளியேற வேண்டுமா என்று கேள்வி எழுந்தது. எல்லா எதிர்ப்புகளையும் மீறித்தான் இந்த நகரம் இப்போது அடிக்கல் விழாவைக் கண்டுள்ளது.
இதற்கு அடிப்படைக் காரணம், ஆந்திர மாநிலத்தின் தற்போதைய நகரங்கள் எவையுமே, விரிவு செய்யப்பட முடியாதவை. தேவையெனில் ஒரு துணை நகரை, அலுவல் சார்ந்து அமைக்கலாமேயொழிய, ஒரு தலைநகராக மாற்றமடைவது எந்த நகரிலும் சாத்தியமில்லை. ஆகவேதான் சந்திரபாபு நாயுடுவின் இந்த முயற்சி முதல் வெற்றியைக் கண்டுள்ளது. கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மேலதிகமான இழப்பீட்டுத் தொகையை அளிக்க நாயுடு உறுதி அளித்துள்ளார்.
அமராவதி வெறும் அரசு நிர்வாகத்துக்கான நகரமாக மட்டுமே இருக்காது. அது பொருளாதார நகரமாக, மக்கள் நகரமாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன், வணிக வளாகங்கள் மட்டுமன்றி, இயற்கை சார்ந்த நீர்த் தடாகங்களுடன் ஒரு சிங்கப்பூர் போல, ஹாங்காங் போல இருக்கும் என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிடுகிறார். இதற்கான பெருநகரத் திட்டத்தை சிங்கப்பூர் நிறுவனங்கள் அளித்துள்ளன. சந்திரபாபு நாயுடு நினைப்பது போலவே இந்த நகரம் அமைந்துவிட்டால், ஆசியாவிலேயே சிறந்த நகரமாக இது அமையும்.
இந்தியாவின் முக்கிய நகரங்கள், குறிப்பாக, மாநிலத் தலைநகரங்கள் பல நூற்றாண்டு பழைமையானவை. அவற்றில் சாலைகளை விரிவுபடுத்துவது என்றால், தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களின் இருப்பிடங்களை அழிக்க வேண்டியதாக இருக்கும். நூறடிச் சாலைகளையும், அறுபது அடிச் சாலைகளையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இந்த நிலையில் நவீன நகரங்கள் புதிதாக அமைக்கப்படுவது மட்டுமே நடைமுறை சாத்தியமாக இருக்கும்.
அதனால், சந்திரபாபு நாயுடு திட்டமிடுவது போல, புதிதாக உருவாக்கப்படும் நகரங்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்குத் திட்டமிடப்படாமல், அடுத்த 100 ஆண்டுகளுக்கான நகரமாகத் திட்டமிடப்பட வேண்டும். ஏனெனில், இந்தியாவில், எல்லா தலைநகரங்களும் மக்கள் நெரிசலாலும், கட்டட விதிமுறை மீறல்களாலும் சுருங்கிக் கிடக்கின்றன.
சென்னையிலும் இதே நிலைமைதான். சாலைகளை அகலப்படுத்தும் முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஏற்கெனவே இருந்த சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டன. கூவமும் அடையாறும் சுருங்கிப் போய் சாக்கடையாகின. கழிவுநீர் ஓடைகள்கூட ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை.
தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர், தலைநகரைத் திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்று சொன்னபோது, அவரது எண்ணம் காவிரியோரம் ஒரு புதிய தலைநகரை உருவாக்க வேண்டும் என்பதுதான். ஒருவேளை அவரது கனவும்கூட ஒரு சிங்கப்பூர் நகரமாக இருந்திருக்கக்கூடும். குறைந்தபட்சம், பல அலுவலகங்களின் தலைமையிடத்தை திருச்சிக்கு மாற்றுவதாகவும் இருந்திருக்கலாம். ஆனால் ஏளனங்களால் அவர் அதைக் கைவிட நேர்ந்தது.
இன்று இந்தியாவின் அனைத்து தலைநகரங்களின் நிலையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உருவெடுத்துள்ளது. இந்தியாவின் தலைநகரங்கள் அனைத்தும் அதிகார மையங்களின் இருப்பிடமாக வலுப்பெற்ற போதிலும், மக்கள் வாழத் தகுதியற்ற, சுகாதார வசதிகளே இல்லாத நிலைமை உருவாகியுள்ளது.
எல்லா மாநிலங்களிலும் புதிய தலைநகரை உருவாக்குதல் சாத்தியமில்லை என்றாலும், இணையத்தால் அலுவலகங்கள் நடத்த முடியும் எனும் சூழலில், பல அரசுத் துறை அலுவலகங்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்வதன் மூலம் தலைநகரின் இறுக்கத்தைத் தளர்த்த முடியும். ஒரே இடத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் வைத்திருப்பது இனியும் இயலாது.
அமராவதி ஒரு சிங்கப்பூர் ஆக வாழ்த்துகள்.
No comments:
Post a Comment