Friday, October 9, 2015

தேசிய பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தினால் தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்க்கும்: மோடிக்கு முதல்வர் கடிதம்



தேசிய அளவில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை மீண்டும் அறிமுகப்படுத்தினால், தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்க்கும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வை (என்இஇடி) ஏற்கனவே மத்திய அரசு அறிமுகப்படுத்த முயன்றது. அப்போது தமிழக அரசு அதை கடுமையாக எதிர்த்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு குறித்த இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம் அறிவிப்பை ரத்து செய்தது.

இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும்படி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை வாபஸ் பெற வேண்டும் என கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி அப்போதைய பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன்.

கடந்தாண்டு ஜூன் 3-ம் தேதி தங்களை நான் சந்தித்து அளித்த மனுவிலும் இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளேன்.

இந்நிலையில், தற்போது பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசிற்கு இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தமிழக மாணவர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே வெளிப்படையான கொள்கை உருவாக்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை சிறப்பாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் தொழிற்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு இருந்த போது நகர்ப்புற வசதிபடைத்த மாணவர்களுக்கே சாதகமாக இருந்தது. கிராமப்புற மற்றும் எழை மாணவர்களால் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியவில்லை.

இதை கவனத்துடன் பரிசீலித்த தமிழக அரசு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. இதனால். கிராமப்புற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

முதுநிலை மருத்துவ படிப்புகளை பொறுத்தவரை, மாணவர் சேர்க்கையின் போது, கிராமங்களில் குறிப்பாக மலை மற்றும் பழங்குடியின பகுதிகளில் பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இதுதவிர, தமிழகத்தில் முதுநிலை மருத்துவம் முடிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட காலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி, மருத்துவ நிபுணர்கள் தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றனர்.

தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டால், தமிழக அரசின் மாணவர்கள் சேர்க்கை கொள்கை மற்றும் சமூக -பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளையும் செல்லாததாக்கிவிடும்.

எனவே எங்கள் கடும் எதிர்ப்பையும் தாண்டி, தேசிய நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த முயற்சித்தால், அதை தடுக்க தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கைகளில் இறங்கும்.

தமிழகம் சார்பில் மத்திய அரசின் மறுபரிசீலனை மனுவிற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும்.

எனவே தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வை மீண்டும் அறிமுகப்படுத்துவது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதுடன், மருத்துவ கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை கொள்கையையும் பாதிக்கும் என்பதால் தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024