Thursday, October 1, 2015

கழிவறையில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய்க்கு ரிசார்ஜ்!

vikatan.com
பொது  இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் சென்னையில் கழிவறையில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் ரிசார்ஜ் செய்வோம் என்று அறிவிப்பு வைத்து இருக்கிறார்கள்.
இந்த அறிவிப்பைப் பார்த்தால் வித்தியாசமாக இருக்கத்தான் செய்கிறது..... இது உண்மை தாங்க. அதுவும் நம்ம சென்னையில் தான் இதை அறிமுகப்படுத்தி இருக்காங்க... பிரதமர் மோடியின் 'க்ளீன் இந்தியா' என்ற இயக்கத்துக்கு போட்டியா என்று கூட நீங்கள் நினைக்க கூடும்.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 214 இடுகாடுகள் உள்ளன. இங்கு இறந்தவர்களை இலவசமாக எரிக்கும் வசதியை மாநகராட்சி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆனாலும் சில இடங்களில் பணம் வசூலிக்கப்படுவதை தடுக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும், சென்னையில் உள்ள பெரும்பாலான இடுகாடுகள் பராமரிப்பு இன்றி பாழடைந்து காணப்படுகின்றன. இதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம், சில இடுகாடுகளை என்.ஜி.ஓக்களிடம் ஒப்படைத்து அவற்றை செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி முதல் அண்ணாநகர் வேலங்காடு நியூ ஆவடி சாலையில் உள்ள மாநகராட்சி இடுகாடு,  ஐ.சி.டபுள்யூ.ஓ என்ற என்.ஜி.ஓ.விடம் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக புதர்மண்டி கிடந்த இந்த இடுகாட்டுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது. அதோடு இடுகாடு பணிகளில் பெண்களையும் பணிக்கு அமர்த்தி புரட்சியை ஏற்படுத்தியது ஐ.சி.டபுள்யூ.ஓ.

இதுகுறித்து ஐ.சி.டபுள்யூஓ என்ற என்.ஜி.ஓ.வின் நிறுவன செயலாளர் ஹரிகரன் கூறுகையில், "அண்ணாநகர் வேலங்காடு இடுகாடு நான்கரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை எங்களிடம் மாநகராட்சி ஒப்படைத்தவுடன் புனரமைப்பு பணிகளை செய்தோம். இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 4 முதல் 5 பிணங்கள் வரும். மொத்தம் 12 பேர் பணியில் உள்ளனர். அதில் 4 பெண்கள். இவர்களுக்கு அலுவல் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக இடுகாட்டில் அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. கழிவறைகள் இருந்தாலும் கூட அதை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும். அனைவரும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி மூலம் அங்கு இருந்த இரண்டு கழிவறைகளை சீரமைத்தோம். அதில் ஆண்களுக்கு ஒன்றும், பெண்களுக்கு ஒன்றும் என பயன்பாட்டுக்கு விட்டோம். தினமும் கழிவறையை பராமரித்து சுத்தமாக வைத்திருந்தாலும் அவற்றை இடுகாட்டுக்கு வருபவர்கள் பயன்படுத்தாமல் பொது இடங்களிலேயே சிறுநீர் கழித்து வந்தனர். இதனால் கழிவறையை பயன்படுத்த மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு பரிசு திட்டத்தை அறிவித்தோம்.

கழிவறைக்கு செல்லும் வழி என்று குறிப்பிட்டு 'தயவு செய்து கழிவறையை பயன்படுத்துங்கள். பயன்படுத்தினால் மாபெரும் பரிசு உங்களுக்கு காத்திருக்கிறது' என்ற அறிவிப்பு பலகையை வைத்தோம். அதன்பிறகு மக்கள் கழிவறையை பயன்படுத்தத் தொடங்கினார்கள். சிலர் கழிவறையைப் பயன்படுத்தி விட்டு எங்களிடம் பரிசையும் மறக்காமல் கேட்கத் தொடங்கினார்கள். அவர்களுக்கு எல்லாம் பேனாவை பரிசாக கொடுத்தோம். மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பரிசு வாங்குபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தது. இதன்பிறகு குலுக்கல் முறையில் தேர்வு செய்து பேனாவை வழங்கி வந்தோம்.
அடுத்தப்படியாக அக்டோபர் 1ஆம் தேதி (இன்று) முதல் பரிசு வழங்குவதில் சில மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்தோம். ரோட்டரி கிளப் ஆப் மீனம்பாக்கமும், ஐ.சி.டபுள்யூ.ஓ ஆகியவை இணைந்து மொபைல் போனுக்கு ரிசார்ஜ் செய்யலாம் என்று முடிவு செய்தோம். வேலங்காடு இடுகாட்டில் உள்ள கழிவறையை பயன்படுத்துபவர்களின் செல்போன் நம்பர்கள் பெறப்பட்டு அதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50 ரூபாய்க்காக ரிசார்ஜ் செய்ய உள்ளோம். இது இன்று தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும்" என்றார்.

நல்லதொரு முயற்சி!

-எஸ்.மகேஷ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024