By வ.செ. நடராசன்
First Published : 01 October 2015 01:17 AM IST
முதுமையில் மிகவும் கொடியது என்ன தெரியுமா? அதுதான் முதுமையில் ஏற்படும் இயலாமை. அதாவது, வயதான காலத்தில் தனது தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது.
உதாரணம்: குளிப்பதற்கு, உடை உடுத்துவதற்கு, சாப்பிடுவதற்கு, நடப்பதற்கு இப்படி தன்னுடைய ஒவ்வொறு தேவைகளுக்கும் மற்றவர்களைச் சார்ந்திருப்பது தான் மிகவும் கொடுமையானது.
இந்த இயலாமையைத் தடுத்து, தன் சொந்தக் காலிலேயே நிற்க ஏதாவது வழிகள் உண்டா?
உடல் நோய்கள்: பக்கவாதம், உதறுவாதம் (பார்க்கின்சன்ஸ்), மூட்டு வலி, உடல் பருமன், கண் பார்வைக் குறைவு, காது கேளாமை, ஆஸ்துமா.
மனநோய்கள்: மனச்சோர்வு, மறதி நோய் எனும் டிமென்சியா.
குடும்பம், நிதி சார்ந்தவைகள்: நிதி வசதியின்மை, மனைவி இழந்தவர்கள், விதவைகள், குழந்தைப்பேறு இல்லாதவர்கள்.
முதுமையில் எந்த உபாதையும் தராமல், எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் போல பல நோய்கள் தொல்லையின்றி மறைந்திருக்கும்.
ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதின் மூலம் மறைந்திருக்கும் பல நோய்களைக் கண்டுகொள்ள முடியும் மற்றும் அதற்குத் தக்க சிகிச்சை அளிக்க முடியும்.
இயலாமை இன்றி வாழ, வருமுன் காக்க, கால முறைப்படி பரிசோதனை செய்ய வேண்டும்.
முதியவர்கள் இறப்பிற்கு முக்கியக் காரணம் நுரையீரல் சார்ந்த நோய்களாகும். இதைத் தவிர்க்க தடுப்பூசிகள் உள்ளன.
உ.ம். நிமோனியாவுக்கு ஒரே ஒரு தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஆயுள் முழுவதும் இந்நோயிலிருந்து விடுபடலாம். முதியவர்கள் அடிக்கடி கீழே விழ வாய்ப்புகள் அதிகம் இருப்பதினால், டெட்டனஸ் தடுப்பூசி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டுக் கொள்வது நல்லது.
குளிர்காலத்தில் வரும் ப்ளூ காய்ச்சலைத் தடுக்க ஆண்டுக்கு ஒரு முறை ப்ளூ தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
முதுமைப் பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டும் சக்தி உடற்பயிற்சிக்கு உண்டு. வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.
நாள்தோறும் மூன்றிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவு நடப்பது நல்லது அல்லது 30 முதல் 45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிதறி ஓடும் எண்ணங்களை ஒரு நிலைப்படுத்துவதே தியானம். தியானத்தால் மனம் அமைதி அடைகிறது.
தெளிவான சிந்தனை கிடைக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தி, நாம் நினைத்ததைச் சாதிக்கக்கூடிய தெளிவு பிறக்கிறது.
சமீப காலமாக நமது உணவுப் பழக்கத்தில் பழைமையை நோக்கிப் புறப்பட வேண்டியதாயிற்று. அதுதான் மில்லட்ஸ் என்னும் சிறுதானியங்கள் அடங்கிய உணவுகள்.
முதுமைக் காலத்திற்கு வேண்டிய எல்லா வகையான சத்துகளும் சிறுதானியங்களில் இருப்பதால், அதை முடிந்தவரையில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அரிசி மற்றும் உணவில் உப்பைக் குறைக்க வேண்டும், நீரை அதிகம் அருந்த வேண்டும்.
எவ்வளவு வயதானாலும் குழந்தை மனநிலையில் இருக்கவே பலரும் விரும்புவார்கள். நம்மை மற்றவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும். அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், நீங்கள் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாய நிலையே உருவாகும்.
அதனால், உங்கள் மீது மற்றவர்களுக்கு வெறுப்பும் வந்துவிடும். எந்தவொரு சின்ன வேலையாக இருந்தாலும் அதை யாருடைய துணையும் இல்லாமல் நீங்களாகவே செய்யப் பழகுங்கள்.
முதுமைக் காலத்தை நிம்மதியாக நகர்த்துவதற்கு பணம் மிக மிக அவசியம். வேகமான வாழ்க்கைமுறை மாற்றங்களைக் கண்டுவரும் இன்றைய உலகில் உண்மையான அன்பிற்கோ, பாசத்திற்கோ மதிப்பு இல்லை. முதுமையில் ஏற்படும் இயலாமையைத் தடுக்க, நடுத்தர வயதிலிருந்தே முயற்சியைத் தொடங்க வேண்டும்.
கால முறைப்படி பரிசோதனை, தினமும் செய்யும் உடற்பயிற்சி, சிறுதானியங்கள் அடங்கிய உணவுப் பழக்கம், தடுப்பூசி போட்டுக் கொள்வது, தினமும் தியானம் செய்வது, முடிந்தளவிற்கு சொந்தக்காலில் நிற்பது அவசியம்.
இத்துடன் தேவையான நிதி வசதியை வைத்துக் கொண்டால், முதுமையில் ஏற்படும் இயலாமை எனும் அரக்கனை கண்டிப்பாக விரட்ட முடியும்.
பிறர் உதவியின்றி சொந்தக்காலில் நிற்க முடியும்.
இன்று உலக முதியோர் நாள்.
கட்டுரையாளர்:
முதியோர் நல மருத்துவர்.
முதுமைப் பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டும் சக்தி உடற்பயிற்சிக்கு உண்டு. வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.
No comments:
Post a Comment