Friday, October 30, 2015

ஆம்புலன்சுக்கு வழிவிடுங்கள்

logo

சாலையில் போக்குவரத்து நெரிசலிலும், சுழல்விளக்கு எரிய ஒரு ஆம்புலன்சு வந்தால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நோயாளிதான் மனதுக்கு தெரியும். அத்தனை வண்டிகளும் ஒதுங்கி, அந்த ஆம்புலன்சுக்கு வழிவிடவேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இது சட்டபூர்வமான விதி என்று சொல்வதைவிட, மனிதாபிமான அடிப்படையில் உயிரைக்காப்பாற்ற செய்யப்படும் கருணை செயல் என்பதே பொருத்தமானதாகும். பொதுவாக, ஏதாவது விபத்து ஏற்பட்டு ஒருவரோ, பலரோ காயம் பட்டுக்கிடந்தால், உடனடியாக 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்சு அங்குசென்று அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றால், நிச்சயமாக உயிர்பிழைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான், இந்த 10 நிமிடங்கள் பிளாட்டினம் நிமிடங்கள் என்று அழைக்கப்படுகிறது. முதல் ஒருமணி நேரம் தங்க நேரம் என்று கருதப்படுகிறது.

ஆக, எந்த ஒரு நோயாளியாக இருந்தாலும், அவரை பிளாட்டினம் நேரத்துக்குள் அதிகபட்சம் தங்க நேரத்துக்குள் அவர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் இடத்தில் இருந்து, மருத்துவமனைக்கு கொண்டுசென்று உரிய சிகிச்சை அளித்தால் எமனிடம் இருந்து தப்பிவிடலாம். அந்த வகையில், உயிரைக்காப்பாற்ற முக்கியபங்கு வகிப்பது ஆம்புலன்சுதான். நோயாளி இருக்கும் இடத்துக்கும், அங்கிருந்து மருத்துவமனைக்கும் மின்னல் வேகத்தில் சென்றாகவேண்டும். அதற்குரிய வழியை விடவேண்டியது சமுதாயத்தின் கடமையாகும். ஆம்புலன்சு என்பது விபத்தில் சிக்கியவர்களை மட்டுமல்லாமல், திடீரென்று பிரசவம், மாரடைப்பு போன்ற நோய்களால் அவதிப்பட்டு சீரியசாக இருப்பவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வாகனமாகும்.

தமிழ்நாட்டில் 2008–ம் ஆண்டுக்கு முன்பு ஆம்புலன்சு என்பது கிராமப்புறங்களிலும், ஏழைகளுக்கும் எட்டாக்கனியாக இருந்தது. ஆனால், 2008–ம் ஆண்டு 108 ஆம்புலன்சு சேவை தொடங்கப்பட்டவுடன், பரம ஏழைகள் வீட்டில் யாராவது சுகமில்லாமல் இருந்தால்கூட உடனடியாக 108–க்கு போன் செய்து அரசு மருத்துவமனையில் சேர்த்துவிடலாம் என்றும், சாலையில் ஏதாவது விபத்து நடந்தால் அந்த வழியாக செல்பவர்கள் 108–க்கு தகவல் தெரிவித்து அந்த உயிரைக்காப்பாற்ற உதவும் எண்ணமும் மக்களிடம் வந்துவிட்டது. 108 சேவை தொடங்கப்பட்டு கடந்த வாரம்வரை தமிழ்நாட்டில் 11 லட்சத்து 41 ஆயிரத்து 492 பேர்கள் ஆம்புலன்சு மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். நிச்சயமாக இதில் பெரும்பாலானோர் உயிர்பிழைத்திருப்பார்கள், 108–ஐ மனதில் நிறுத்தி நன்றி சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ஆனால், சமீபகாலங்களாக ஆம்புலன்சுக்கு சிலர் வழிவிடாமல், ஆம்புலன்சு அபயக்குரல் எழுப்பும் நிலையும், சிறிதும் இரக்கமில்லாமல் ஆம்புலன்சு பின்னால் சென்றால் சீக்கிரம் சென்றுவிடலாம் என்று அதன் பின்னால் செல்லும் வாகனங்களையும் பார்த்தால் நெஞ்சம் கொதிக்கிறது. இந்த அலட்சியப்போக்கு பல உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கிறது. இந்த ஆண்டு கடந்த ஆகஸ்டு மாதம் வரையில் மட்டும் சாலை விபத்துகளில் 10 ஆயிரத்து 583 பேர்கள் உயிரிழந்துள்ளனர். ஆம்புலன்சுக்கு வழிவிடும் உணர்வை வளர்க்க தேவையான விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் ஆம்புலன்சுகளை ஓவர்டேக் செய்பவர்கள் மற்றும் ஆம்புலன்சுகளுக்கு வழிவிடாதவர்களின் லைசன்சுகளை ரத்து செய்வதற்கான உத்தரவுகளை போக்குவரத்து மற்றும் காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி ஒரு உத்தரவை தமிழ்நாட்டிலும் பிறப்பிக்கவேண்டும். 108 ஆம்புலன்சு ஊழியர்களும் இந்த சேவை தங்களுக்கு கிடைத்த தெய்வீக கடமையாக நினைக்கவேண்டும். ஆம்புலன்சில் அனைத்து உயிர்காக்கும் வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள ஊழியர்களுக்கு உயர் பயிற்சி அளிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024