Thursday, October 29, 2015

தூய்மை உணவே முதல் தேவை!

Dinamani

By நெல்லை சு. முத்து

First Published : 29 October 2015 01:24 AM IST


"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற நிலை மாறிவிட்டது. இன்று "கலப்பட' உண்டி கொடுத்தோர் உயிர் பறித்தோரே என்று புது இலக்கியம் எழுதவேண்டி வரும். காரணம், இன்றைக்கு ஒவ்வா உணவினால் வரும் நோய்கள் பற்றிய அக்கறை அதிகரித்து வருகின்றது.
அதிலும், சமீபத்தில் "லிஸ்டிரியா மோனோ சைட்டோஜென்கள்' எனும் நுண்கிருமித் தாக்கத்தினால் பரவும் நோய்கள் படுபிரபலம். "லிஸ்டிரியாசிஸ்' என்கிறார்கள். வேறு ஒன்றுமில்லை. இது ஒருவகை ஹிஸ்டிரியா மாதிரி, மனநோய். குறிப்பாக, இறைச்சி மற்றும் பால் பொருள்களினால் பரவும் ரகம். இது காய்ச்சல், உடல்வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு என்று முன்னும் பின்னும் ஓட ஓட விரட்டும்.
அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், மழலைகள், நோயெதிர்ப்புத் திறன் குன்றிய நோஞ்சான்கள் என்றும் ஆள் பார்த்துத் தாக்கும் நுண்கிருமி.
ஒரே கலப்பட உணவை, ஒரே முறையில் தயாரித்து, ஒரே பந்தியில் அல்லது ஒரே தட்டில் இட்டுப் பரிமாறிச் சாப்பிட்டாலும் இத்தகைய நோய், சிலரைத்தான் குறிவைத்துத் தாக்குமாம். கர்ப்பிணிகள் என்றால் "கன்னிக்குட'த்தில் மிதக்கும் இந்த பாக்டீரியா மண்ணிலும் மனித இரத்தத்திலும் "ஹாய்யாக' வசிக்கும்.
பாலாடைக் கட்டி, சுட்ட மாமிசம் என அதி வெப்ப உணவும், அதிகுளிர் பதனப் பெட்டியும் இவற்றின் சுகவாச ஸ்தலங்கள். அதனால் பொதுவாக, உணவுகளைக் குளிர்பதனப் பெட்டிகளில் பனி உறைநிலை அளவுக்கேனும் பாதுகாக்க வேண்டும் என்கிறோம்.
இன்னொரு கலப்பு நோய், "டோக்சோபிளாஸ்மோசிஸ்'. இதற்கு "டோக்சோபிளாஸ்மா கொண்டாயி' என்ற முகிழ் உயிரி ஒட்டுண்ணியே காரணம். அரைவேக்காட்டு இறைச்சிக் கொழுப்பும், விலங்குகளின் மலம், சிறுநீர்க் கழிவுகளுமே இந்த ஒட்டுண்ணிக்கு வாடகை இல்லாத குடியிருப்புகள்.
பொதுவாக, வெப்ப நகர்ப்புறங்களிலும், ஈரப்பதம் மிக்க சேரிகளிலும் இவற்றின் இனப்பெருக்கம் அதிகம். இந்த நோய் சுண்டெலிகளை எளிதில் தாக்கும். அவற்றைத் தின்னும் பூனைகள் மலத்தின் வழி இந்த ஒட்டுண்ணி மனித உடம்புக்குள் ஏற்றுமதி ஆகும்.
மனித உடலில் முட்டைகளாகி வாழ்நாள் முழுவதும் உடம்புக்குள் பதுங்கியே இருக்கும். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், இந்நோயாளி, தனக்கு இத்தகைய சுகக்கேடு உண்டு என்றே உணர்வதும் கிடையாது. ஊழலுக்குள் மூழ்கி இருப்பதால், உணராமலே வாழும் அரசியல்வாதிகள் போல.
பலரும் தங்களுக்கு புளுக்காய்ச்சல் என்று நினைத்துக்கொண்டு கண்ணில் கண்ட மாத்திரைகளைத் தாங்களே வாங்கிச் சாப்பிடுவார்களாம். குருதிநீரில் "ஐ.ஜி.ஜி.' எனப்படும் "இம்மியுனோ குளோபுலின்-ஜி' என்ற புரதத்தினை ஆராய்ந்தால் நோய் கண்டு அறியலாம்.
ஆனால், நோயின் உக்கிரம் மூளையைப் பாதிக்கும்போதுதான் பித்துப் பிடித்தது தெரியவரும். பாதிப் பேர் தாங்கள் பேசுவது என்னவென்று புரியாமல் மேடையில் உளறுவார்கள். விழித்திரை அழற்சியால் கண்கள் கூசும். உங்கள் கண்ணில் நீர் வடிந்து கொண்டே இருக்கும். அப்புறம் என்ன, பார்வை மங்கும்.
வழக்கம்போல, கர்ப்பிணிகளுக்கான அபாயம் வேறுமாதிரி. இந்நோய் தாக்கினால் கருவில் வளரும் சிசுவைப் பாதிக்கும். பிள்ளை பிறந்து பல மாதங்களுக்குப் பின்னர் கூட கண்பார்வைக் கோளாறு வரலாம். வலிப்பு உண்டாகலாம். புத்தி மந்தம் ஆகலாம்.
ஆக, இந்தக் "கலாம்' வேறு மாதிரி. (பாருங்கள் அமெரிக்காவில் ஒரு கிருமிக்கு "கலாம்' பெயரை வைத்து மானத்தை வாங்குகிறார்கள்? நிலாத் தரையில் நம் நாட்டுச் சந்திரயானின் "மிப்' மோதுகலன் விழுந்த இடத்திற்கு அல்லவா "கலாம்' பெயரை வைத்து இருக்க வேண்டும்?)
இத்தகைய நச்சு ஒட்டுண்ணியில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமா? உணவை 74 பாகைக்கேனும் சூடாக்கி உண்ணுங்கள். விண்வெளியின் "கிரையோஜெனிக்' பொறிகலன் அளவுக்கு பனி உறைநிலைக்கும் கீழ் உணவைப் பத்திரப்படுத்தவும், பழங்களைத் தோல் உரித்துச் சாப்பிடவும். ஆடு, மாடுகள் மாதிரி அப்படியே தோலோடு விழுங்காதீர்கள்.÷
"இருட்டுக் கடை அல்வா' மகிமை அறிவோம். ஆனால், இருட்டுக் கடைகளாகப் பாதையோரம் வைத்திருக்கும் "தாபா' (இந்தச் சொல்லினைப் புரட்டிப் படியுங்கள் "பாதை' ஆகும்!) மேஜைகளில், வெட்டிக் கிடைப்பதை "வெட்டி' விழுங்குவானேன்?
செக்கச்சிவந்த காதல் பெண்களைப் பிச்சுப் பிச்சுத் தின்னவா என்று சிலர் பாடல் எழுதினாலும் எழுதினார்கள். நம்மூர் இளைஞர்கள் சிலர், செக்கச்செவேல் என்றிருக்கும் சிகப்பான மாமிசத் துண்டுகளையே காதலிக்கிறார்கள். அவற்றைப் பொரித்து எடுக்க இருட்டுக்கடைகளில் கொதிநிலை அதிகமான பன்றிக் கொழுப்பு கையாளப்படுகின்றது. நாடாப் புழுக்களின் கோடை வாசஸ்தலம் அது.
வீட்டுச் சமையல் அறையில் அன்பு அன்னை அல்லது மனைவி (ஆண்களும் சமைக்கலாம், தப்பு இல்லை.) சமைத்த உணவில் எறும்பு கண்டால் கொதிக்கிறோம். ஆனால், கொதிக்கும் வாணலியில் குதூகலிக்கும் பன்றிக்கொழுப்பில் செய்த உணவை விரும்பி உண்ணுவதோ?
உடலில் அதுவும் சிறுகுடலில் ஒட்டினாலும், கத்திரியால் வெட்டினாலும் தலைசாயாத இந்த நாடாப் புழுக்களின் முட்டைகள் நரகத்தில் கொதிக்கும் கொப்பரையிலும் உயிர்வாழக் கூடியவை. பிறகென்ன, உண்டவர் மண்டையிலும் மூளைக்குப் பக்கத்தில் "பிளாட்' போட்டுக் குடியேறும். கண்கள் சிவக்கும். முகம் வலிப்பில் ஒரு பக்கம் கோணல் ஆகும். நாளாவட்டத்தில் பைத்தியம் உத்தரவாதம்.
கலப்பட உணவால் நோய்கள் ஒருபக்கம். நல்ல உணவிலும் ஊட்டச்சத்துக் குறை பலவீனம் இன்னொரு பக்கம். அதிலும் உலகத்தில் ஏழில் ஒருவருக்கு இத்தகைய நுண்ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ளதாம். குறிப்பாக, இந்தியாவில் மூன்று குழந்தைகளில் ஒருவர் இத்தகைய சவலைப் பிள்ளைதானாம்.
குறிப்பாக இரும்புச் சத்து, துத்தநாகம், "வைட்டமின் ஏ மற்றும் அயோடின் ஆகிய சத்துக் குறைபாட்டினர் உலகில் பாதிக்குமேல் இருக்கிறார்களாமே. பிறந்த ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இரும்புச் சத்துக் குறை உடைய குழந்தைகள் ஐந்துக்கு நாலு பேர் என்றால் வேறு என்ன சொல்ல?
ஒரு கிலோ பாசிப் பருப்பில் ஏறத்தாழ 160 மில்லி கிராம் துத்தநாகம் உள்ளது. அதனால் தானிய உணவு நன்று.
ஏ வைட்டமின் குறைபாட்டினால் மழலைப் பிஞ்சுகளில் மூவரில் இரண்டு பேர் சிகிச்சை பெற வேண்டி இருக்கிறதாம். சிகப்பான உணவே சிறந்தது என்று உணவியல் விஞ்ஞானிகளும் பரிந்துரைக்கின்றனர்.
கண் நலம் பேணவும், புற்றுநோய் வராமல் காக்கவும் காரோட்டினாய்டுகள் இயற்கைச் சத்து உதவும். இது ஏ வைட்டமின்களின் தாய். கண், சுவாச மண்டலம், சிறுநீர்ப் பாதை, சிறுகுடல் எங்கும் முறையான பாதுகாப்புப் படலம் பூசுவது இந்த வைட்டமினின் தொண்டு. பொதுவாக, இளஞ்சிகப்பு, மஞ்சள் நிறக் காய்கனிகளில் இந்தச் சத்து அடங்கி இருக்கிறது.
இவற்றில் 700}க்கும் மேற்பட்ட திசு வேதிமங்கள் உள்ளன. அவற்றில் வெறும் 24 சத்துகள் மட்டுமே நம் அன்றாட உணவில் இடம்பெறுகின்றன. காரட், தக்காளி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கீரை வகைகள், புதினா போன்ற காய்கறிகள் உடலுக்கு நல்லது.
எப்படியோ, தொழிற்சாலைகளில் லைக்கோப்பீன், பீட்டா - காரோட்டீன், காந்தாக்சந்தைன், சீயாக்சந்தைன், அஸ்டாக்சந்தைன் ஆகிய ஐந்து காரோட்டினாய்டுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதிலும் ஏ வைட்டமின் அளவு மீறினாலும் சில சிரமங்கள் எழும். உடம்பில் தோல் உலரும். தலை அரிப்பு எடுக்கும். தலைமுடி உதிரும். கல்லீரல் பாதிக்கும். பசி எடுக்காது. குமட்டல் வரும்.
அயோடின் குறைவால் முன்கழுத்துக் கழலை நோயாளிகள் இந்தியாவில் 85 சதவீத மாவட்டங்களில் வசிக்கிறார்கள். வீடு கட்டி வாழ வேண்டும். விவசாயத்தையும், காப்பாற்றிப் போற்ற வேண்டும். இயற்கையை மட்டுமே நம்பினால், நவீன மக்கள் பெருக்க உலகினில் வளர்ந்துவரும் இந்த அதீத சூறைநோய்களுக்கு ஈடுகட்ட முடியாது. இதற்காகதான் நுண்ஊட்டச் சத்துகளையும் வலியுறுத்துகிறோம்.
பேய் முக நாய்களையும், ஆனை உயரப் பூனைகளையும் சமூக அந்தஸ்து கருதி வளர்ப்பவர்களுக்கும் ஒரு சொல். வேலைக்கு போகும் முன் நீங்கள் குளிக்கிறீர்களோ இல்லையோ, செல்லப் பிராணிகளை குளிப்பாட்டுங்கள். இல்லையென்றால் சம்பாதித்த பணம், கால்நடை மருத்துவச் செலவுக்கே போதாது. வருமானத்தில் பாதியை நாய் மேனியில் உலா போகும் நாடாக் கிருமி ஒட்டுண்ணிகளை ஒழிப்பதற்காகச் செலவிட வேண்டி வரும்.
சீனாவில் தயாரித்து மலிவான விலையில் பெட்டிக் கடைகளில் விற்பனை ஆகும் 'அஞ்சு ரூபா' பிஸ்கெட்டுகளிடம் கவனம் தேவை. செல்லப் பிராணிகளின் 'நாய் பிஸ்கோத்துகளை' செல்லக் குழந்தைகள் திருடிச் சுவைத்தால் சின்ன வயதிலேயே சிறுநீரகக் கற்கள் உபாதை வருகிறதாம். அயல்நாட்டில் சமீபத்திய உணவியலாளர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இத்தனைக்கும் மத்தியில் அழற்சி அல்லது ஒவ்வாமை என்ற நோய் சர்வ சாதாரணம். மூக்குச்சளி பிடித்து விட்டதோ, மூக்கினுள் "ஃபுளுட்டிக்காசோன் புரொப்பயனேட்', "ட்ரை அம்சினோலோன்', "மொமெட்டாசோன்', "பியுதிசோனாய்டு' என்று சொட்டு மருந்துகள் இருக்கவே இருக்கின்றன.
தூசியும், கரப்பான் பூச்சியும் உண்டாக்கும் அதே அழற்சியை நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகளும் இலவசமாக உங்களுக்கு வழங்கக் கூடும். எச்சரிக்கை. வயதான பிராணிகளின் மாமிசத்தையும் விற்றுப் பணம் பண்ணுகிறார்களாம் சில கடைக்காரர்கள். கன்றுக்குட்டி இறைச்சி என்று கதைக்கிறார்களாமே.
போகட்டும். ஒரு வழியாக, வாய் வழியாக, இத்தனை அழுக்கும் உள்ளே செலுத்துகிறோம்.
முதலில் அளவான தூய்மை உணவு. பின்னர்தான் வளமான தூய்மை இந்தியா.

கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
தூசியும், கரப்பான் பூச்சியும் உண்டாக்கும் அதே அழற்சியை நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகளும் இலவசமாக உங்களுக்கு வழங்கக் கூடும், எச்சரிக்கை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024