Tuesday, October 6, 2015

எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, இது தேவையில்லையே

logo


மத்திய அரசாங்கம் திடீரென இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உருவம் பொறித்த தபால் தலைகளை வெளியிடுவதில்லை என்று எடுத்த முடிவு, நாட்டில் பொதுவாக இந்த வீண் சர்ச்சை எதற்கு?, இது தேவையில்லையே? என்ற உணர்வுகளைத்தான் ஏற்படுத்துகிறது. ஆதிகாலத்தில் இருந்து மனிதனுக்கு தகவல் தொடர்பு மிக முக்கியமாக இருந்தது. தபால் மூலம் கடிதம் அனுப்பும் சீரியமுறை மனிதனின் தகவல் தொடர்பை வலுப்படுத்துவதற்காக வந்தது. அதன்பிறகு, டெலிபோன், தந்தி என்று எத்தனையோ வந்தாலும், சாதாரண மனிதனுக்கு தகவல் தொடர்பில் ஆபத்பாந்தவனாக தபால்தான் விளங்கியது. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், முதல் தபால் தலை 1947–ம் ஆண்டு நவம்பர் 21–ந் தேதி வெளியிடப்பட்டது. இப்படி நீண்டநெடிய வரலாறு கொண்ட தபால் தலைகளில், தொடர்ந்து பல தலைவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் அவர்களின் உருவம் பொறித்த தபால் தலைகள் இப்போது வெளியிடப்பட்டுகொண்டு வருகிறது. சிலருக்கு ஒருமுறை மட்டும் அச்சடிக்கும் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும். சிலருக்கு தொடர்ந்து அவர்கள் உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுவரும்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மத்திய தகவல் தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத், ‘‘இத்தகைய சிறப்பு தபால் தலையில் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உருவம் பொறித்த அஞ்சல் தலைகள் இனி நிறுத்தப்படும். தபால் தலைகள் பற்றி முடிவெடுப்பதற்காக ஒரு ஆலோசனை குழு இருக்கிறது. அதில் பலதரப்பட்ட நிபுணர்கள் இருப்பார்கள். அந்த குழுதான் இந்த முடிவை எடுத்துள்ளது’’ என்று கூறியுள்ளார். தபால்தலை மட்டுமல்லாமல், இன்லேன்ட் கடிதத்தில் இந்திராகாந்தியின் உருவத்திற்கு பதிலாக இனி யோகா படம் இருக்கப்போகிறதாம். இந்த ஆலோசனைக்குழு இனி 24 தலைவர்களின் உருவம் பொறித்த தபால் தலைகள்தான் வெளியிடப்படும் என்று பட்டியலிட்டுள்ளது. அதில், ஏற்கனவே இருந்த பட்டியலில் உள்ள மகாத்மா காந்தி, ஜவஹர்லால்நேரு, டாக்டர் அம்பேத்கர், அன்னை தெரசா படங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் என்று அறிவித்துள்ளது. மற்ற தலைவர்களை பொறுத்தமட்டில், இந்த புதுப்பட்டியலில் சர்தார் வல்லபாய்படேல், மவுலானா ஆசாத், சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ராஜேந்திரபிரசாத், ஜெயபிரகாஷ் நாராயண், பகத்சிங், தீனதயாள் உபாத்யாயா, ஷியாமா பிரசாத் முகர்ஜி, ராம் மனோகர் லோகியா, விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், பாலகங்காதர திலகர், மகாராணா பிரசாத், சிவாஜி போன்றோர் படங்கள் இடம்பெற்றிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரு குடும்பமே இடம்பெற வேண்டுமா? என்று கேட்கிறார்கள். நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், இந்திராகாந்தியும், ராஜீவ்காந்தியும் பிரதமர்களாக இருந்தவர்கள். என்னதான் கருத்துவேறுபாடு இருந்தாலும், அவர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. மேலும், இப்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்தில் யாரும் தபாலை பெரிதாக பயன்படுத்துவதில்லை. மிகக்குறைந்தபட்ச பயன்பாடுதான் இருக்கிறது. அப்படியிருக்க, இதை எடுப்பதில் என்ன வந்துவிடப்போகிறது. இருந்துவிட்டு போகட்டுமே என்று நினைப்பதே நல்லது. நாட்டில் தொழில்வளர்ச்சி போன்ற எத்தனையோ முன்னேற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மத்திய அரசாங்கம், இதைப்போன்ற சிறிய விஷயங்களை ஒரு பொருட்டாக நினைக்கவேண்டாமே. மேலும், இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற பெரும்பங்காற்றிய தலைவர்களின் பெயர்கள் விட்டுப்போய்விட்டதே, அதையும் இந்த பட்டியலில் சேர்க்கலாமே என்ற உணர்வுதான் மக்களிடம் இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024