Friday, October 16, 2015

ஆதாரம் இருக்கிறது!..dinamani



By ஆசிரியர்

First Published : 14 October 2015 01:44 AM IST


சமையல் எரிவாயு மானியத்தை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தத் தொடங்கிய பின்னர், கடந்த ஓராண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு எரிவாயு மானியத்தில் ரூ.14,672 கோடி மிச்சமாகியிருக்கிறது என மத்திய எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்த 30 லட்சம் பேரால் ஏற்பட்ட மிச்சத் தொகை அல்ல. முறைகேடுகள் தவிர்க்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள சேமிப்பு.
வீட்டுச் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள் 18 கோடிக்கும் அதிகம். நேரடி மானியம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, 3.34 கோடி இணைப்புகள் போலியானவை அல்லது ஒரே நபர் இரண்டு இணைப்பு பெற்ற சம்பவங்கள் தெரிய வந்தது. தற்போது கட்டுப்படுத்தப்பட்ட விநியோக நடைமுறைப்படி, ஓர் இணைப்புக்கு ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள்; ஓர் உருளைக்கு ரூ.336 மானியம். இந்த அடிப்படையில் கணக்கிட்டபோது, இதற்கு முந்தைய ஆண்டில் மானியமாக அளிக்கப்பட்ட தொகையில் ரூ.14,672 கோடி மிச்சமாகி இருக்கிறது.
இது மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் போடும் திட்டத்தால் மட்டுமே ஏற்பட்டதல்ல. போலி இணைப்புகள் களையப்படக் காரணம் ஆதார் அட்டை என்பதுதான் உண்மை நேரடி மானியம் பெறுவதற்கு, எரிவாயு இணைப்பு உள்ள ஒவ்வொருவரும் தங்கள் வங்கிக் கணக்கு எண் மட்டும் தெரிவித்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தால், இந்நேரம், இந்த போலியான 3.34 கோடி இணைப்பு பெற்றவர்களும் வங்கிக் கணக்கு எண் கொடுத்திருப்பார்கள். ஆனால், ஆதார் அடையாள அட்டை இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்ட ஒரே காரணத்தால், போலிகள் வேறு வழியில்லாமல் கழிந்துபோயின. ஆதார் அட்டைக்கு கைரேகை, கண்பாவை போன்ற உயிரி அடையாளங்கள் அவசியம் என்பதால், போலிகள் இதில் புக முடியவில்லை.
தற்போது கண்டறியப்பட்ட 3.34 கோடி எரிவாயு இணைப்புகளில் மிகச் சில நூறு இணைப்புகள் மட்டுமே ஒரு வீட்டில், ஒரே குடும்பத் தலைவர் இரு முறை பெற்ற இணைப்பாக இருக்கும். மற்ற அனைத்தும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களால் போலியாக சேர்க்கப்பட்டு, எண்ணெய் நிறுவனத்தின் அந்தந்தப் பகுதி மேலாளர் ஆசியுடன் நடத்தப்பட்ட முறைகேடாகவே இருக்கும் என்பது உறுதி. மானியத்துடன் வழங்கப்பட்ட வீட்டு விநியோக எரிவாயு உருளைகளை பொய்க்கணக்கில் ஏற்றி, வணிகப் பயன்பாட்டுக்கு அளித்து, ஆண்டுதோறும் ரூ.14,672 கோடி மக்கள் பணம் கொள்ளை போயிருக்கிறது என்றே இதற்குப் பொருள்.
இப்போது, சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் எரிவாயு உருளைகளை வீட்டுக்கு கொண்டு தரும் ஊழியர்களுக்கு சம்பளமே தருவதில்லை என்றும், அவர்களுக்கு எண்ணெய் நிறுவனம் தரும் கமிஷன் நீங்கலாக, விநியோகக் கட்டணம் என்று ரூ.15 வரை நிர்ணயித்திருந்தாலும், அதை ஊழியர்களுக்கு கொடுப்பதே இல்லை என்றும் எரிவாயு உருளைகளை விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளது. ஆகவேதான், நாங்கள் ரூ.50 வரை நுகர்வோரிடம் வசூலிக்கிறோம் என்றும் அப்பட்டமாக சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், இதற்கு எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கை, இத்தகைய புகார் குறித்து நேரடியாக எண்ணெய் நிறுவனத்துக்குப் புகார் தெரிவிக்கலாம் என்பது மட்டுமே. ஆனால், இந்தப் புகாரைத் தந்த நுகர்வோருக்கு எந்தவிதப் பாதுகாப்பும் அளிக்கத் தயாராக இல்லை. ஆகவே, புகார்களும் வருவதே இல்லை. "அரசாங்கம் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.336 போடுகிறதல்லவா? எங்களுக்கு ரூ.40, 50 கொடுத்தால் என்ன?"" என்று எரிவாயு உருளையைக் கொண்டு தரும் ஊழியர்கள் உரிமையுடன் நுகர்வோரைக் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். மானியத்தை விட்டுக் கொடுத்தவர் என்பதை அவரிடம் நிரூபிக்க வேண்டுமா என்ன?
இந்த முறைகேட்டை தவிர்க்க வீட்டு சமையல் எரிவாயு விநியோகத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் எளிமைப் படுத்தலாம். தற்போது ஐந்து கிலோ எரிவாயு உருளைகள் பெருநகர்களில் பரவலாக விற்பனைக்கு வந்துள்ளன. புதிய உருளை கேட்டு செல்லிடப்பேசியில் பதிவு செய்தவுடன், பதிவு எண் குறுந்தகவலில் வருகிறது. இந்தப் பதிவு எண்ணைக் காட்டி, தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள முகவர்களிடம் இருந்து உருளையைத் தாங்களே எடுத்துச் செல்லும் வசதியை ஏற்படுத்தினால், விருப்பமுள்ள நுகர்வோர் இத்தகைய எளிய நடைமுறைக்கு மாறுவர். இதனால், சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் விநியோகத்துக்காக வழங்கும் கட்டணம் அரசுக்கு மிச்சப்படும்.
ஆதார் அட்டையின் அடிப்படைத் தகவல்கள், கிடைக்கக் கூடாதவர்களுக்கு கிடைத்துவிடும் என்பதும், இது தனிநபர் அந்தரங்கத் தகவல்களை மற்றவர்கள் அறிய வழியேற்படுத்தும் என்பதும்தான் தற்போது ஆதார் அட்டைக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள்.
இருப்பினும், ஆதார் அட்டையின் ஒரேயொரு பயன்பாட்டில் மட்டுமே ரூ.14,672 கோடி மானியம் மிச்சப்படும் என்றால், உர மானியம், பொது விநியோகப் பொருள் மானியம் ஆகியவற்றுக்கும் ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டால் நிச்சயமாக பெருமளவில் போலிகள் தவிர்க்கப்படுவர். ஆகவே, மானியம் பெறும் திட்டங்களுக்கு மட்டும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டால், மக்கள் பணம் முறைகேடுகளால் யாருக்கோ போய்ச் சேருவது தடுக்கப்படும்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட "ஆதார்' திட்டத்தை அப்போது எதிர்த்த பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தவுடன் அதைக் கைவிடவில்லை. மாறாக, அந்தத் திட்டத்தின் நன்மையை உணர்ந்து நரேந்திர மோடி அரசு அதை முன்னெடுத்துச் செல்ல முற்பட்டிருக்கிறது. இதற்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை போடாமல் இருப்பதுதான் சரியாக இருக்கும்.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024