Tuesday, October 27, 2015

சென்னையில் பல இடங்களில் நில அதிர்வு உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் பதறியடித்து கீழே இறங்கினர்

சென்னை,

பதிவு செய்த நாள்:
செவ்வாய், அக்டோபர் 27,2015, 12:16 AM IST


சென்னையில் நேற்று பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்தவர்கள் பதறியடித்து கீழே இறங்கினர்.

சென்னையில் நில அதிர்வு

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று பகல் 2.40 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. அது 7.5 ரிக்டர் அளவு என்று பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக அருகே உள்ள வடஇந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சென்னையிலும் பல இடங்களில் உணரப்பட்டது.

நந்தனம், பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர் உள்பட பல்வேறு இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தகவல்தொழில்நுட்ப அலுவலகம்

கோடம்பாக்கத்தில் உள்ள 9 மாடி கட்டிடம் ஒன்றில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதில் 600–க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கிறார்கள். நேற்று மதியம் 2.40 மணிக்கு திடீர் என்று அந்த கட்டிடத்தில் நில அதிர்வு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் நில அதிர்வை உணர்ந்தனர். உடனே அங்கு வேலையில் இருந்த ஏராளமானவர்கள் பதறியபடி வேகமாக கீழே இறங்கிவந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு நில அதிர்வு ஏற்பட்டதை கூறி, தாங்கள் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். 30 நிமிடங்கள் கீழேயே நின்ற அவர்கள், பின்னர் அலுவலகத்துக்கு சென்று வழக்கமான பணிகளை தொடங்கினார்கள்.

பட்டினப்பாக்கம்

பட்டினப்பாக்கம், நந்தனம், கோயம்பேடு, அம்பத்தூர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள், ஊழியர்களும் இதனை உணர்ந்தனர். குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் தான் இந்த அதிர்வை அதிகம் உணர முடிந்தது.

பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நான் வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்து கம்ப்யூட்டர் இயக்கிக்கொண்டிருந்தேன். பகல் 2.45 மணி அளவில் நான் உட்கார்ந்து இருந்த நாற்காலியை யாரோ தள்ளிவிடுவது போல இருந்தது. பிறகுதான் அது நில அதிர்வு என்பதை உணர்ந்து கீழே இறங்கினேன். அதுபோல எங்கள் குடியிருப்பில் உள்ள ஏராளமானவர்கள் கீழே இறங்கி வந்தனர் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024