இன்று பெரும்பாலான துறைகளில் ஆண்களோடு பெண்களும் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் திறமையை நிரூபித்துவருகிறார்கள். வீடு, அலுவலகம் என்று இரட்டைக் குதிரை சவாரி செய்வதில் பெண்களே பெரும்பாலும் திறமைசாலிகள். ஆனால் இப்படி இரண்டு இடங்களிலும் அளவுக்கதிகமாக வேலை செய்வது ஆண் - பெண் இருபாலருக்குமே நல்லதல்ல என்றாலும் ஆண்களைவிட பெண்களே அதிக அளவு ஆபத்தைச் சந்திக்கிறார்கள்.
அதுவும் வேலைக்குப் போகும் பெண்களில் 25 முதல் 34 வயதுக்குட்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் அதிகபட்ச மன அழுத்தத்துக்கு ஆளாவதாகச் சொல்கிறது ஒன்டூஒன்ஹெல்ப் நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 150-க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கிவருகிறது. அதன் அடிப்படையில் முப்பது நகரங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் இந்த நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
திருமணம் மற்றும் உறவுகளைக் கையாள்வதில் ஏற்படுகிற சிக்கல், வேலை சார்ந்த மன அழுத்தம் மற்றும் தனிப்பட்ட காரணிகளை முன்வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
“எங்கள் ஆய்வின்படி உறவுச் சிக்கல்களால் கிட்டத்தட்ட 37 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தூண்டப்படுவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். திருமண உறவால் ஏற்படுகிற சிக்கலால் 33 சதவீதம் பேர் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகச் சொல்லியிருக்கிறார்கள். 13 சதவீத பணியாளர்கள் தனிப்பட்ட காரணிகளாலும் 12 சதவீத பணியாளார்கள் வேலை சார்ந்த சிக்கல்களாலும் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்” என்கிறார் ஒன்டூஒன்ஹெல்ப் நிறுவனத்தின் இயக்குநர் கருணா பாஸ்கர்.
பல்வேறு காரணிகளால் இப்படி மன அழுத்தத்துக்கு ஆளாகும் பணியாளர்களின் எண்ணிக்கை கவலை தருவதாகச் சொல்லும் கருணா, “இவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வருவதில்லை. நன்கு படித்து, நல்ல பதவியில் இருக்கிறவர்கள்கூட இதற்காக யாருடைய உதவியையும் நாடுவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதுவும் இள வயது பணியாளர்களே எளிதில் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்” என்கிறார்.
ஒருவரை ஆட்டிப்படைக்கிற இந்த மன அழுத்தம் அவர்களது தனிப்பட்ட ஆளுமையை மட்டுமல்லாமல் குடும்பத்திலும் பணியிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மிகப் பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஏற்படுகிற மன அழுத்தத்தால் உற்பத்தியும் அதிக அளவில் பாதிப்படைகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நிறுவனத்தில் ஒரு பணியாளர் இறந்துவிட்டால் அந்த இறப்பு அவருடன் பணிபுரிந்தவர்களையும் அவருடைய மேலதிகாரிகளையும் அதிக அளவில் பாதிக்கிறது. அந்தப் பணியாளரின் மரணத்துக்கு நாமும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்திருப்போமோ என்ற குற்றவுணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறதாம்.
தேசிய அளவில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் தென் மாநிலங்களான கர்நாடகமும் தமிழகமும் முக்கிய இடத்தில் இருக்கின்றன.
“காரணம் இந்த மாநிலங்களில் இது போன்ற இறப்புகள் முறைப்படி பதிவுசெய்யப்படுகின்றன. தவிர மன அழுத்தச் சிக்கல்கள் குறித்து இங்கு ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தலைதூக்கியதாகவும் சில வழிகளில் முயன்றதாகவும் சென்னையில் மட்டும் 209 பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதில் அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் அவர்களில் 58 சதவீதம் பேர் பெண்கள். அவர்கள் அனைவரும் 25 வயது முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள்” என்கிறார் கருணா.
சமூகத்தின் ஆதரவு இருந்தால் இதுபோன்ற பணியாளர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்டுவிடலாம் என்று நம்பிக்கை தருகிறார் கருணா.
“பல அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற நலப் பணிகளைச் செய்துவருகின்றன. ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை. சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் இந்தப் பிரச்சினையைக் கருத்தில்கொள்ள வேண்டும். தங்கள் பணியாளர்களின் வேதனையைப் புரிந்துகொண்டு அவர்கள் அதிலிருந்து மீண்டு வர உதவ வேண்டும்” என்கிறார் மெரிட்டிராக் திறன் மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் மேனன். ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் உளவியல் மதிப்பீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே பணி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.
“ஒரு நிறுவனத்தின் உற்பத்தித் திறனிலும் வெற்றியிலும் பணியாளர்களின் மனநலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான மனநலப் பராமரிப்பு இல்லாத இடத்தில் பணியாளர்களுக்கிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றி பிரச்சினை உருவாகலாம். சமயத்தில் இதுபோன்ற மனநலப் பாதிப்புகள், நிறுவனத்தில் உற்பத்தியைப் பாதிப்பதுடன் அவர்களின் பணித்திறனையும் பாதிக்கும். ஒரு பணியாளரின் மனநலம் மற்றும் ஆளுமை குறித்த முழுமையான மதிப்பீடு அவசியம். அப்போதுதான் பணிச் சூழலுக்கு அவர் பொருந்திப் போவாரா என்பதை அனுமானிக்க முடியும்.
முழுமையான உளவியல் மதிப்பீட்டுச் சோதனை மூலம் ஒருவர் எளிதில் மன அழுத்தத்துக்கு ஆளாவாரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல குறிப்பிட்ட இடைவேளையில் தொடர்ந்து பணியாளர்களின் உளவியலை மதிப்பிடுவதன் மூலம் அவர்களின் மனநலம் சார்ந்து அறிந்துகொள்ள முடியும். பணியாளர்களின் மனநலத்தில் ஏதேனும் தொய்வு ஏற்படுவதாகத் தோன்றினால் அவர்களை உற்சாகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்க இதுபோன்ற ஆய்வுகள் வழிவகுக்கும்” என்கிறார் ராஜீவ் மேனன்.
© தி இந்து, சுருக்கமாகத் தமிழில்: ப்ரதிமா
No comments:
Post a Comment