Friday, October 23, 2015

பருப்பு விலை என்னாச்சு?

logo

1967–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார கூட்டங்களில், ‘‘பக்தவச்சலம் அண்ணாச்சி, பருப்பு விலை என்னாச்சு?, வெங்கட்ராமன் அண்ணாச்சி, வெங்காயம் விலை என்னாச்சு?’’ என்ற கோஷங்கள்தான் பெரிதும் எழுப்பப்பட்டன. அந்த வகையில்தான், சமீபகாலங்களாக அரிசி விலை கட்டுக்குள் இருந்தாலும், பருப்பு, உளுந்து விலை விண்ணை தொட்டுவிடுவேன் என்று பயங்காட்டிக்கொண்டு இருக்கிறது. வெங்காயம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. இந்தியா முழுவதிலும் பருப்பு விலை மற்றும் உளுந்து விலை உயர்வுதான் மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. நேற்று சென்னையில் துவரம் பருப்பு விலை ஒரு கிலோவுக்கு ரூ.210 ஆகவும், பாக்கெட் துவரம் பருப்பு விலை ரூ.225 ஆகவும், உளுந்தம் பருப்பு ஒரு கிலோ விலை ரூ.180 ஆகவும், பாக்கெட் உளுந்தம் பருப்பு ரூ.200 ஆகவும் இருந்தது.

ஓட்டல்களில் 2 இட்லி வாங்கி நிறைய சாம்பார் ஊற்றி பிசைந்து சாப்பிட்ட காலம் எல்லாம் போயே போய்விட்டது. இப்போது சிறிய ஓட்டல்களில்கூட சாம்பாரை தூக்குவாளியில் கொண்டுவந்து ஊற்றுவதில்லை. சிறிய கிண்ணங்களில் கொண்டுவந்துதான் தருகிறார்கள். பருப்பு வடை, உளுந்த வடையின் அளவெல்லாம் சிறியதாகிவிட்டது. சாம்பார் வடையை ஓட்டல்களில் காணவேயில்லை. வருமானம் குறைந்த வீடுகளில் இப்போதெல்லாம் சமையலில் சாம்பார் என்பது எட்டாக்கனியாகிவிட்டது. இரண்டு சிறிய மீன்களைப்போட்டு குழம்பு வைத்துவிடலாம் என்றே நினைக்கிறார்கள். மீன் விலை குறைந்துவிட்டது. மத்தி மீன் கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும், கெண்டை மீன் கிலோ 30 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரையிலும் என்று தொடங்கி பல மீன்கள் கைக்கு எட்டும் விலையிலேயே இருக்கிறது.

துவரம் பருப்பு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் விளைவதில்லை. மத்திய பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மட்டும்தான் விளைகிறது. பருவமழை பொய்த்ததாலும், சாகுபடி பரப்பு 12.5 லட்சம் ஹெக்டேர் குறைந்ததாலும், சாகுபடி செய்த நிலங்களில் விளைச்சல் குறைந்துவிட்ட காரணத்தாலும், சராசரி உற்பத்தி 10.66 சதவீதம் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டில் ஒரு கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் டன்னாக இருந்த பருப்பு உற்பத்தி, இந்த ஆண்டு ஒரு கோடியே 72 லட்சம் டன்னாக குறைந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் பருப்பின் தேவை ஆண்டுக்கு ஏறத்தாழ 2 கோடியே 30 லட்சம் டன்னாகும். இந்த பற்றாக்குறையை சரிசெய்ய வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யவேண்டும், அல்லது சாகுபடி பரப்பை உயர்த்தவேண்டும். இப்போது 5 ஆயிரம் டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 ஆயிரம் டன் வரப்போகிறது. இன்னும் 10 ஆயிரம் டன் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது என்கிறார்கள். இதெல்லாம் நிச்சயமாக போதாது. இன்னும் இருமாதங்களுக்கு பருப்பு தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். இன்னும் விலை உயர்ந்தால் மக்களால் அதை தாங்கிக்கொள்ளவே முடியாது. கப்பலில் இறக்குமதி செய்வதற்கு பதிலாக, அவசர அத்தியாவசியம் கருதி, விமானம் மூலம் இறக்குமதி செய்ய பரிசீலிக்கவேண்டும். அடுத்த ஆண்டுக்கு இப்போதே திட்டமிடவேண்டும். சாகுபடி பரப்பை உயர்த்தவேண்டும். இந்த மாநிலங்களில்தான் விளையும் என்ற நிலையை மாற்றி, அனைத்து மாநிலங்களிலும் சீனா, இஸ்ரேல் நாடுகளைப்போல, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி துவரை பயிரிடவேண்டும். மொத்தத்தில், ரெயில்வே பட்ஜெட்போல, வேளாண்மைக்கும் தனி பட்ஜெட் போட்டு, அனைத்து பயிர்களையும் திட்டமிட்டு பயிரிடவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024