Tuesday, October 27, 2015

தீபாவளி விற்பனை களை கட்டத்தொடங்கியது தியாகராயநகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்..daily thanthi



சென்னை,

தீபாவளி விற்பனை களை கட்டத்தொடங்கியுள்ளது. தியாகராயநகரில் விடுமுறை தினமான நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.தீபாவளி பண்டிகை

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையன்று மக்கள் புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். அரசு மற்றும் தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக ‘போனஸ்’ வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது இயல்பானது. தீபாவளி பண்டிகையின்போது உறவினர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.அங்காடித் தெரு

அந்தவகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 10–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், சென்னையில் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது.

சென்னை நகரின் முக்கிய வணிகதளமாக விளங்கும் தியாகராய நகர் பகுதியில் நேற்று தீபாவளி பண்டிகைக்கு தேவையான துணிமணிகள் உள்பட பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் நேற்று காலை முதல் இரவு வரை தியாகராய நகர் பகுதி மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. குறிப்பாக அங்காடித்தெரு என்று அழைக்கப்படும் ரெங்கநாதன் தெரு முழுவதும் மனித தலைகளாகவே காட்சியளித்தது.மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், தியாகராயநகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் மக்கள் கூட்டம் இயல்பான நாட்களை விடவும் அதிகமாக காணப்பட்டது.

பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி., மைக்ரோ ஓவன் உள்ளிட்ட பொருட்களை சிறப்பு தள்ளுபடியில் மக்கள் வாங்கிச்சென்றனர். மேலும், நேற்று விடுமுறை தினம் என்பதால், தீபாவளி பொருட்கள் வாங்க வருவோர்களின் எண்ணிக்கை வழக்கமாக வரும் கூட்டத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.அதிநவீன கேமரா

கூட்டநெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி திருட்டு–வழிப்பறி, கொள்ளைகளில் ஈடுபடும் ஆசாமிகளை கண்காணிப்பதற்காக தியாகராய நகர், பாண்டி பஜார், வடக்கு உஸ்மான் சாலை, தெற்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 70 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக பாண்டி பஜார் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துவிட்டன. மற்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதவிர கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, பைனாக்குலர் மூலமும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

பாதுகாப்பு ஏற்பாடுகளை தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் மாம்பலம் போலீசார் மேற்கொண்டுவருகின்றனர். தீபாவளி பொருட்கள் வாங்க வரும் மக்கள் சுமுகமாக நடந்து செல்லும் வகையில் ரங்கநாதன் தெரு, நடேசன் தெரு மார்க்கெட் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரிய கடைகளின் வெளியே இருந்த சுமார் 500–க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளை பாதுகாப்பு கருதி போலீசார் நேற்று அகற்றினார்கள்.

இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த 100 போலீசார் மற்றும் வாகனங்களை ஒழுங்குபடுத்த 50 போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பண்டிகை நெருங்கும் சமயத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.வியாபாரிகள் மகிழ்ச்சி

தியாகராயநகர் பகுதியை போன்று புரசைவாக்கம், என்.எஸ்.சி. போஸ் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள் என தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

பொதுமக்களின் வருகை அதிகரித்து வருவதையடுத்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று பொருட்கள் வாங்க வந்தவர்களை விடவும் அதிக மக்கள் கூட்டம் நவம்பர் 1–ந்தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) காணப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024