Thursday, October 1, 2015

ரயில் டிக்கெட் வித்தவுட்!

Return to frontpage


சிந்தனைக் களம் » சிறப்புக் கட்டுரைகள்

பத்ரி சேஷாத்ரி


சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. கிண்டி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் என்னைப் பிடித்துவிட்டார். என்னிடம் சரியான டிக்கெட் இல்லை என்றும் நான் அபராதம் கட்ட வேண்டும் என்றும் சொன்னார்.

என்னிடம் கோவில்பட்டியிலிருந்து சென்னை எழும்பூர் செல்வதற்கான டிக்கெட் இருந்தது. நான் தாம்பரத்தில் இறங்கி, புறநகர் மின்சார ரயிலில் ஏறி, கிண்டி ரயில்நிலையம் வந்து இறங்கியிருந்தேன். என் டிக்கெட் எப்படிச் செல்லுபடியாகாது என்று கேட்டேன். அவர் விதிப் புத்தகத்தை எடுத்துக் காட்டினார். பக்கம் 281-ல், விதி எண் 20-ல் நான் செய்தது தவறு என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரயில் பயணத்தில், ஒரு குறிப்பிட்ட ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் அந்த ரயிலைத் தவிர வேறு எதிலும் பயணம் செய்யக் கூடாது; முக்கியமாகப் புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கு அனுமதியில்லை என்று அந்த விதியில் போடப்பட்டிருந்தது.

இதே நீங்கள் டிக்கெட் கவுண்டரில் மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் என்று சொல்லி டிக்கெட் வாங்கிக்கொண்டு, பதிவு செய்யப்படாத கம்பார்ட் மெண்டில் ஏறி, தாம்பரம் வந்து இறங்கி, புறநகர் மின் ரயிலில் ஏறி கிண்டி வந்தால் நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையாம். ஆனால், முன்பதிவு செய்துவிட்டால் போச்சு. நீங்கள் தனியாக புறநகர் மின்ரயிலுக்கான டிக்கெட் வாங்க வேண்டும்.

எனவே, என் தவறுக்காக, ரூ. 250 அபராதமும், தாம்பரத்திலிருந்து கிண்டி வருவதற்காக ரூ. 5-ம் சேர்த்து ரூ. 255 கட்டினேன். (ரசீதைப் பெற்றுக்கொண்டேன்.) அதேபோல எழும்பூரிலிருந்து மதுரைக்கோ, திருச்சிக்கோ நீங்கள் முன்பதிவு டிக்கெட் வாங்கியிருந்தால், நீங்கள் கிண்டியில் அல்லது பரங்கிமலையில் வசித்தால், தாம்பரம் சென்று ஏறிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தால், கிண்டி-தாம்பரம் தனியாக டிக்கெட் வாங்கிக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்றது அந்த விதி.

ஆனால், இது மிகவும் அபத்தமான விதி என்று தோன்றியது; இதைப் பற்றி ரயில்வே அமைச்சகத்துக்கு எழுதப்போகிறேன் என்று சொன்னேன். இதுதொடர்பாக வலைதளத்தில் எழுதியபோது பலரும் கேலி செய்தனர் என்பது வேறு விஷயம்! என்னைப் போலவே ஏகப்பட்ட பேர் புகார் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

30.7.2015 அன்று ரயில்வே நிர்வாகம் விதியை மாற்றியுள்ளது. இப்போது நீங்கள் திருச்சியிலிருந்து எழும்பூர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, தாம்பரத்தில் இறங்கி, மின்சார ரயிலில் ஏறி மாம்பலம், கோடம்பாக்கம், கிண்டி என்று எழும்பூருக்கு முன்னதாக இருக்கும் எந்த நிலையத்திலும் சட்டபூர்வமாகவே இறங்கிக்கொள்ளலாம். வேறு எந்த டிக்கெட்டும் வாங்க வேண்டியதில்லை.

தகவல் உரிமச் சட்டம் மூலம் தகவல் பெற்றுத்தந்த பாலாஜிக்கு நன்றி. இதுகுறித்து ஃபேஸ்புக்கில் எழுதி என் கவனத்தை ஈர்த்த வலைப்பதிவர் ‘பிச்சைக்காரன்’ அவர்களுக்கும் நன்றி!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024