Saturday, October 10, 2015

வாழை உற்பத்தியில், ‘‘உலகின் முதல் இடத்தில் தமிழ்நாடு’’

ஒரு ஒளிமயமான இடத்தை நோக்கி தமிழ்நாடு பயணிக்கும் மகிழ்ச்சியான செய்தி அனைவரின் காதிலும் தேன் வந்து பாய்வதுபோல இருக்கிறது. அதில் ஒன்றாக வாழை உற்பத்தி திகழ்கிறது. உலகிலேயே வாழை உற்பத்தியில் இந்தியாதான் முதல்இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 2 கோடியே 91 லட்சம் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 90 லட்சம் டன் வாழைப்பழங்கள் விளைவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் வாழை சாகுபடி, விளைச்சல் அளவு, வாழை சாகுபடி பரப்பு போன்றவை உயர்ந்துகொண்டேயிருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் 2 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. தேனி, திருச்சி, ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

பொதுவாக ‘‘வாழை வாழவும் வைக்கும், தாழவும் வைக்கும்’’ என்பார்கள். ஆனால், கவனமாக விவசாய பணிகளை கவனித்தால் வாழை வாழத்தான் வைக்கும், தாழவிடாது என்பதுதான் இப்போதைய விவசாயிகளின் எண்ணமாகும். மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மைத்துறைகள் தமிழ்நாட்டு வாழைசாகுபடியில் இன்னும் தீவிர கவனம் செலுத்தினால், உலகிலேயே வாழை உற்பத்தியில் முதல்இடத்துக்கு அடுத்து சில ஆண்டுகளில் தமிழ்நாட்டை கொண்டுவந்துவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள். பொதுவாக வாழை சாகுபடி என்று நினைத்தாலே தட்பவெப்ப நிலையோடு, தண்ணீர் வசதி அதிகமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுதான் விவசாயிகளுக்கு இருக்கிறது. ஆனால், இருக்கும் சொற்ப நீரைக்கொண்டு சொட்டு நீர் பாசனம், இயற்கை வேளாண்மை முறைகள், வித்தியாசமான அதிக விளைச்சல் தரும் ரகங்கள் சாகுபடி, இஸ்ரேல் நாட்டில் பயன்படுத்தும் வேளாண்முறைகள், வாழை சாகுபடிக்கு தேவையான நிதி உதவி போன்றவற்றை அளித்தால், தமிழ்நாட்டில் வாழை உற்பத்தி அபரிமிதமாக பெருகும் என்கிறார், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பரசுராமன்.

வாழையில் அறுவடைக்கு பின்பு ஏற்படும் இழப்புதான் தமிழ்நாட்டில் 40 சதவீதமாக இருக்கிறது. சீக்கிரம் அழுகும் பொருளான வாழையை ஒரே சீராக பழுக்கவைக்கும் வசதிகளும், குளிர்சாதன கிடங்குகளும் சாகுபடி செய்யும் இடங்களின் அருகாமையில் அமைக்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வாழைப்பழம் ஏற்றுமதி அதிகம் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு 150 கண்டெய்னர்கள் மூலமாகத்தான் வாழை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இதுவரையில் மட்டும் 500 கண்டெய்னர்களுக்கு மேல் ஏற்றுமதி நடந்துவிட்டது. வாழையைப் பொறுத்தமட்டில் பழங்கள் மட்டுமல்ல, அதில் உள்ள எதையுமே தூக்கிப்போட்டுவிடமுடியாது. இலை, தண்டு, பூ, நார் என்று ஒவ்வொரு பாகத்துக்கும் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில்தான் வாழையில் பல ரகங்கள் இருக்கின்றன. நாட்டுப்பழம், மோரீஸ், மலைப்பழம், கசலி, நேந்திரம், கற்பூரவல்லி, மொந்தான், பூவன், பேயன், ரஸ்தாளி, செவ்வாழை என்று வாழைப்பழங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேலும், பழமாக மட்டுமல்லாமல், அதைக்கொண்டு ஜூஸ், ஒயின், அல்வா, மில்க்ஷேக், சாக்லெட், ஐஸ்கிரீம் என்று பல பொருட்களை தயாரிக்க முடியும். எனவே, வாழை சாகுபடியை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், பதப்படுத்துவதற்கான வசதி, ஏற்றுமதி செய்வதற்கான வசதி, உபபொருட்களை தயாரிப்பதற்கான வசதிகளை உருவாக்க இதை ஒரு சிறப்பு திட்டமாக செயல்படுத்த மத்திய அரசாங்கம் உதவவேண்டும். அதை மாநில அரசு வலியுறுத்தவேண்டும்.
http://www.dailythanthi.com/Thalayangam

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024