Sunday, October 18, 2015

பெண் எனும் பகடைக்காய்: மதிப்பிழந்துபோன பெண் உழைப்பு ...............பா.ஜீவசுந்தரி



வீட்டுப் பணிப்பெண்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்கு இடம் பெறாத பத்திரிகைகள் ஏதும் உண்டா? உண்மையில் வீட்டு வேலை செய்யும் இந்தப் பெண்களின் நிலை நகைச்சுவைக்கு உரியது மட்டும்தானா? வேலைக்குச் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை வீட்டுப் பணிப்பெண் ஒருநாள் வேலைக்கு வராவிட்டாலும்கூட அந்த வீடு வீடாக இருக்காது. வீட்டுப்பணி என்பது நச்சரிக்கும் பணி; அதற்கு முடிவென்பதே இல்லை. எவ்வளவு வேலைகள் வளர்ந்தால்தான் என்ன? வீட்டு ஆண்கள் உதவிடவா போகிறார்கள்? அந்த மனமாற்றம் இன்னமும் இங்கு வராதது ஆகப் பெரும் சோகம். விதிவிலக்குகள் எங்கும் உண்டு.

வேலைக்குப் போகும் இல்லத்தரசிகளின் இமாலயப் பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்பவர்கள் வீட்டுப் பணிப்பெண்கள் மட்டும்தான். பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல், வீடு பெருக்கித் துடைத்தல் இவை மூன்றும் மிக அவசியமான, கடினமான பணிகள். சில வீடுகளில் தேவை கருதி சமையலுக்கும் ஆட்களை அமர்த்திக்கொள்கிறார்கள். இன்னும் குழந்தையைக் கவனிப்பது, முதியோரைக் கவனிப்பது போன்றவையும் இதில் அடக்கம்.

இளக்காரமான பணி

இவ்வளவு பணிகளைச் செய்யும் பணிப்பெண்ணுக்கு ‘வேலைக்காரி’என்ற ஏளனமான ஒற்றைச் சொல் தவிர்த்து என்ன மதிப்பு இருக்கிறது? ஆண்டாண்டு காலமாக நம் வீட்டுப் பெண்கள் வீட்டுக்குள் செய்துகொண்டிருக்கும் இந்த வேலைகள் மீது எந்த மதிப்பும் இல்லாததே இதற்கு மூல காரணம். ஊதியம் ஏதுமின்றித் தங்கள் உழைப்பை அவர்கள் செலுத்திக் கொண்டேயிருப்பதால், அது மதிப்பிழந்து போகிறது. அதனால்தான் நாள் முழுதும் சிறுகச் சிறுக வேலைகளைக் கவனித்துக்கொண்டே ‘சும்மா’ இருப்பதாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் மனநிலையை நோக்கி ‘இல்லத்தரசிகள்’ தள்ளப்பட்டிருக்கிறார்கள். தங்கள் பணியைத் தாங்களே மதிக்காத பெண்களால் பணிப்பெண்களின் உழைப்பை எப்படி மதிப்பீடு செய்ய இயலும்? அவர்கள் கனிவோடு அணுகப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை.

கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்த சக மாணவியைப் பார்த்து ‘நீயெல்லாம் கரிச்சட்டி கழுவத்தான் லாயக்கு’ என்று ஆசிரியப் பெருந்தகை இட்ட சாபத்தைக் கேட்டு வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவள் நான்! கரிச்சட்டி கழுவுதல் அவ்வளவு கேவலமா?

வீட்டுப் பணிப் பெண்கள் யார்?

பெரும்பாலும் முறையான பள்ளிக் கல்வியை முடிக்காதவர்கள். கீழ் நடுத்தர வர்க்கம் மற்றும் அடித்தட்டு மக்கள். ஆண்களின் வருமானம் முழுமையாகக் குடும்பத் தேவைகளுக்குச் சென்று சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத குடும்பங்களிலிருந்து வருபவர் கள். ஏனென்றால், வந்தால் வீட்டுக்கு லாபம், இல்லையேல் நாட்டுக்கு என்று ‘டாஸ்மாக்’ கடைக்குச் சென்று சேரும்.

எளிதானதா வீட்டுப் பணி?

விடியும் முன்பே தொடங்கும் இவர்களின் ஒரு நாள் வாழ்க்கை. கணவன், குழந்தைகளுக்கான உணவு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ஆறு, ஆறரை மணிக்குக் கிளம்பினால் நாலு அல்லது ஐந்து வீடுகளை முடித்துவிட்டுத் திரும்புவதற்குப் பிற்பகல் 2 அல்லது 3 மணிகூட ஆகலாம். பணி செய்யும் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு திக்கில் இருக்கும். அதற்கான போக்குவரத்து அல்லது நடை நேரம் பணி நேரமாகக் கணக்கில் வராது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பவும் முடியாது. கொசுறாக அவர்கள் சொல்லும் வேலைகளை முடித்துவிட்டுத்தான் செல்ல முடியும். மாலையிலும் சில வீடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். மொத்தமாக வெளியில் 14 மணிநேரம், தனது வீட்டில் ஐந்து, ஆறு மணிநேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளது.

பணிச் சுமையை மிஞ்சும் மன வலி

தனது நேர்மையை எப்போதுமே நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஏழ்மை நிலைதான் அதற்கும் காரணம்! நம்பிக்கையின்மை, எப்போதும் சந்தேகக் கண் கொண்டு அணுகுவது, வேலைக்குதான் வந்துவிட்டார்களே என்பதற்காக மிகவும் கீழ்த்தரமாக நடத்துவது, அவர்களுக்காகவே ‘ஸ்பெஷலாக’ தயாரித்து அளிக்கப்படும் காபி, டீ, சில வீணாய்ப்போன, எஞ்சிப்போன உணவு வகைகள், ஓயாமல் வேலைகளை ஏவிக்கொண்டே இருப்பது, விடுமுறை அளிக்க மறுப்பது இப்படிப் பல.

பிரச்சினைகளிலேயே மிகவும் சிக்கலானது, வீட்டு எஜமானர்களால் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள். பெரும்பாலும் அதை அவர்கள் வெளியே சொல்வதில்லை; அப்படியே சொன்னாலும், உண்மை என்ன என்பது மனசாட்சிக்குத் தெரிந்தே இருந்தாலும் எந்த வீட்டு எஜமானியும் தங்கள் வீட்டு ஆணை அது கணவனோ, மகனோ, அண்ணன், தம்பியோ யாராக இருந்தாலும் விட்டுத்தரத் தயாராக இருப்பதில்லை. இங்கும் பணிப்பெண்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவாள். அவள் வேலை பறிபோகும் அபாயமும் இருக்கிறது.

பணிப்பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள் என்றால், ஒரு சிலர் கைக்கு அகப்படும் எளிய பொருட்களை எடுத்துக்கொண்டு போவது, முன்னறி விப்பின்றி விடுமுறை எடுத்துக்கொண்டு காலை வாரி விடுதல் போன்றவை சொல்லப்படுகின்றன.

எத்தனை காலத்துக்கு இந்த வேலை?

சரி, ஒரு பெண் எத்தனை காலத்துக்கு வீட்டு வேலைகளைச் செய்து பிழைக்க முடியும்? மேலும் அளவுக்கு அதிகமான வீட்டுப் பணிகளால் ஏற்படும் உடல் பாதிப்புக்கு யார் பாதுகாப்பு? அனைத்து விதமான துணிகளையும் சலவை இயந்திரத்தில் துவைத்துவிட முடியாது. கால் மிதி, குழந்தைகளின் துணிகள், பள்ளிச் சீருடை, அதிலும் குறிப்பாக வெள்ளைத் துணிகள், சாக்ஸ் போன்றவை இவர்களின் ‘கைவண்ண’த்துக்காகவே காத்திருக்கும்.

சோப்புத் தூள், சோப்புக் கட்டிகள், பாத்திரம் துலக்கும் பவுடர், சோப்பு, சோப்பு நீர்க் கரைசல்கள் போன்ற வேதியியல் பொருட்களை நாள் முழுவதும் கையாள்வதால் அவை கைகளைப் பதம் பார்க்கின்றன. கைகள் எப்போதும் ஈரத்தில் ஊறியபடி இருப்பதால் எந்த நேரமும் வலி இருக்கிறது. சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படுகிறது. இவ்வளவு கடினமான பணிகளைச் செய்ய வேண்டுமானால் அதற்கேற்ப நல்ல சத்துள்ள உணவும் வேண்டுமல்லவா? அது இல்லாததனால் உடல்ரீதியாகவும் தளர்ந்து போகிறார்கள்.

எல்லா வீட்டிலும் எல்லா வேலைகளையும் எல்லோரும் ஏற்பதில்லை. ஏதாவது ஒரு வேலையை மட்டும் ஒவ்வொரு வீட்டில் ஏற்பது என்ற நிலையும் இருக்கிறது. அப்படியானால் எந்த வேலைக்கு எவ்வளவு ஊதியம்? வீட்டுப் பணிப்பெண்களுக்கான அமைப்புகள் இருந்தபோதும் அனைவரும் அதில் பங்கேற்பதில்லை. எத்தனையோ முறைசாராத் தொழில்களுக்கு அரசே குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கிறது. அவர்களுக்கு வாரியம் அமைக்கிறது. ஈ.எஸ்.ஐ., காப்பீடு வசதிகள் செய்யப்படுகின்றன. ஆனால் பணிப்பெண்களுக்கு இது எதுவும் இல்லை. ஊதியத்தைப் பொறுத்தவரை குத்துமதிப்பாக ஏதோ கொடுக்கப்படுகிறது.

நடப்பிலுள்ள இந்த நிலையை நாம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பணிப்பெண் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறார். அவர்களின் பாதுகாப்பில் நமக்கும் அக்கறை இருக்கிறது.

கொசுறு



கடந்த 2009-ம் ஆண்டில் வீட்டுப் பணிப்பெண்களுக்கான ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக ஆலோசனைக் குழு ஒன்றை அரசு நியமித்தது. வேலை செய்யக்கூடிய நகரங்களுக்கு ஏற்ப ஒரு மணி நேரத்துக்கு தலா ரூ. 25/- முதல் ரூ. 30/- வரை ஊதியமாக நிர்ணயிக்கலாம் என்று அந்தக் குழு அரசுக்கு அறிக்கை அளித்தது. ஆனால், அரசு அதைச் செயல்படுத்தவில்லை. இப்போது ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50/- ஊதியமாக அளிக்கப்பட வேண்டுமென்று தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர்கள் இயக்கம் மீண்டும் கோரிக்கை வைத்திருப்பதோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வருமா?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024