By எம்.மார்க்நெல்சன், சென்னை,
First Published : 26 October 2015 04:07 AM IST
ஆம்னி பேருந்துகளில் அடையாள அட்டையுடன்தான் இனி பயணிக்க முடியும். மேலும், இவற்றில் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ஆம்னி பேருந்துகளில் அண்மைக்காலமாக பயணிகளின் உடைமைகள் திருடப்படுகின்றன; பேருந்துகளும் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதனால், இவற்றில் பயணிப்போர் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் தமிழகத்தில் 1,200 பேருந்துகள், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் 800 பேருந்துகள் என மொத்தம் 2 ஆயிரம் பேருந்துகள் பாதுகாப்பு நடைமுறைகள் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பாண்டியன், பொதுச் செயலர் இளங்கோவன், செயலர் அன்பழகன் ஆகியோர் கூறியதாவது:
அடையாள அட்டை இருந்தால்தான், ஆம்னி பேருந்துகளில் இனி பயணிக்க முடியும்.
ரயில்களில் உள்ளதுபோல் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை பயணிகள் கட்டாயம் காண்பிக்க வேண்டிய வகையில் புதிய நடைமுறையை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன.
தவிர்க்க முடியாத ஒரு சில சூழலில், அடையாள அட்டை இல்லாமல் வரும் பயணியிடம் செல்லிடப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு பின்னரே பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்றனர்.
நவீன தீயணைப்பான்கள்
ஆம்னி பேருந்துகளில், தீ விபத்து ஏற்பட்டால், அதை உடனடியாகக் கட்டுப்படுத்தும் வகையில் நவீன ரக தீயணைப்பான்கள் இடம்பெறும். பாட்டில் வடிவில் இவற்றை திறக்கவோ அல்லது அழுத்தவோ வேண்டியதில்லை. தீப் பிடித்த பகுதியை நோக்கி, தூக்கி எரிந்தால் போதும். தீ கட்டுக்குள் வந்துவிடும். இதைப் பயன்படுத்துவது தொடர்பான செய்முறை பயிற்சி ஆம்னி பேருந்துகளின் ஊழியர்களுக்கும் அண்மையில் வழங்கப்பட்டது. ரூ.2,300 மதிப்பிலான இதில், 3 தீயணைப்பான்கள் பேருந்துக்குள்ளும், 2 ஓட்டுநரிடமும் இருக்கும்.
கண்காணிப்பு கேமரா
பயணிகளின் உடைமைகள் திருடு போவதைத் தடுக்கும் வகையில், கண்காணிப்புக் கேமராக்கள் 10 சதவீத பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பேருந்துகளிலும் விரைவில் பொருத்தப்பட்டு விடும்.
கடந்த ஆண்டு கட்டணமே!
பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது, வசூலிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தையே, இந்த ஆண்டும் வசூலிக்க உள்ளோம் என்று ஆம்னி உரிமையாளர்கள் கூறினர்.
No comments:
Post a Comment