By ஆசிரியர்
First Published : 24 October 2015 01:40 AM IST
தமிழக நெடுஞ்சாலை விபத்துகளில் கொத்துக் கொத்தாக மனித உயிரிழப்பு ஏற்படுவதற்கு இரண்டு விதமான விபத்துகள்தான் காரணம். ஒன்று, டயர் வெடித்து வாகனம் கட்டுப்பாட்டை இழப்பதால், சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்கிறது. இரண்டாவதாக, நின்று கொண்டிருக்கும் வாகனத்தின் மீது விரைந்து வரும் வாகனம் மோதுவதால் ஏற்படும் விபத்து.
இந்த இரண்டு விபத்துகளுமே மனிதத் தவறுகளால் நடைபெறுபவை. ஆனால், இதுவரை நெடுஞ்சாலைத் துறையோ, வாகன உற்பத்தியாளர்களோ, நெடுஞ்சாலைக் கண்காணிப்பு காவலர்களோ இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்ச முயற்சியைக்கூட மேற்கொள்ளவில்லை.
ஆயுதபூஜைக்கு முன் தினம் இருங்களூர் அருகே நடந்த விபத்தில் 10 பேர் இறந்தனர். இதற்காக டிரெய்லர் லாரி, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் இருவருமே கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகமிக இயந்திரத்தனமான அரசு நடைமுறை. விபத்துக்கான காரணம் வெறும் கவனக்குறைவு மட்டுமல்ல.
லாரியில், அதன் உடல்பகுதிக்குள் அடங்காமல் வெளியே அகன்று இருந்த இரும்புத் தகடுகள்தான் பேருந்தின் ஒரு பகுதியை வெட்டிக் கிழித்துள்ளன. இருக்கையில் இருந்தவர்களின் வயிற்றுப் பகுதியை வெட்டி இரண்டு கூறாக்கியதால் வாகனத்தின் வலது பக்க இருக்கைகளில் ஜன்னல் ஓரம் அமர்ந்தவர்கள் மட்டும் இறக்கவும், மற்றவர்கள் காயமடையவும் நேர்ந்தது. இதேபோன்ற சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் அருகே நடந்தது. இரும்புத் தகடு பேருந்தின் வலப்புறத்தைக் கிழித்துச் சென்றதில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகளின் கால்கள் துண்டாகின.
ஒரு லாரியின் உடல்பகுதியைத் தாண்டிச்செல்லும் இரும்புத் தகடுகளை ஏற்றிச் செல்ல எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது? அதுவும் இரவு நேரத்தில்? அதிலும் குறிப்பாக, இந்த இரும்புப் பலகைகளின் கடைசி முனைப் பகுதியில் சிகப்பு விளக்குகளால் எச்சரிக்கை செய்யப்படாமல்? வாகனம் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டுவிட்டால், எச்சரிக்கை விளக்குகளையும் லாரி ஓட்டுநர் அணைத்துவிடுவதா? நாற்கரச் சாலையில் வாகனங்களை நிறுத்தத் தனி இடங்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டுள்ளபோது, ஏன் நெடுஞ்சாலையில் நிறுத்துகிறார்கள்? இது குற்றமில்லையா?
இத்தகைய வாகனங்களை அந்த நாற்கரச் சாலையில் இயங்க அனுமதித்ததற்காக அந்த பகுதிக்குரிய போக்குவரத்து கண்காணிப்பு அதிகாரிகள் அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். போக்குவரத்து காவல் துறை வழக்கு மட்டும்தான் பதிவு செய்யுமா? அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்களா?
அண்மையில் புகழ்பெற்ற தனியார் ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் குடிபோதையில் ஓட்டியதைக் கண்டு பயணிகள் எதிர்த்தனர். முசிறி அருகே பேருந்து நிறுத்தப்பட்டது. அந்த ஓட்டுநரைக் காவல் துறையிடம் ஒப்படைத்தார்கள். அவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், மாற்று ஓட்டுநரை அனுப்ப அந்த நிறுவனம் ஏழு மணி நேரம் எடுத்துக்கொண்டது. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதற்காக அந்த நிறுவனத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பயணிகள் பேருந்தின் ஓட்டுநர் குடித்துவிட்டு ஓட்டினால் அதற்கு அந்த நிறுவனத்துக்குப் பொறுப்பு கிடையாதா? ஒருவேளை இந்த ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளாகிப் பலர் இறந்திருந்தாலும், ஓட்டுநர் குடித்திருந்தது மறைக்கப்பட்டிருக்கக்கூட வாய்ப்பு உள்ளது. பயணிகளுக்கு என்னதான் பாதுகாப்பு என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி.
அடுத்ததாக, டயர் வெடிப்பு விவகாரம். டயர்கள் ஏன் வெடிக்கின்றன? இந்தக் கேள்வியைப் போக்குவரத்துத் துறையோ அல்லது வாகன உற்பத்தியில், டயர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களோ சட்டை செய்வதே இல்லை.
டயர்களில், டியுப்களில் மிகச் சிறு குமிழ் போன்ற இடைவெளிகள், வெற்றிடங்கள் உற்பத்தி நிலையிலேயே ஏற்பட்டுவிடும் என்றும், வாகனம் அதிவேகத்தில் செல்லும்போது வெப்பத்தால் அந்தக் குமிழியில் சிக்கியுள்ள காற்று வெப்பமடைந்து விரிந்து வெடிக்கும்போது, அது அளவில் சிறியதாக இருந்தாலும், அவை மிகச் சிறு மாற்றத்தையே ஏற்படுத்தினாலும், அதிவேகம் காரணமாக வாகனம் நிலைகுலைகிறது என்றும் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இதுகுறித்து குறைந்தபட்சம் கார், லாரி ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்துவதும்கூட கிடையாது.
எந்தெந்த டயர்கள் பூட்டப்பட்ட, எத்தனை எடையுள்ள வாகனங்கள், எத்தனை கிலோ மீட்டர் தூரம் சென்றதும் சற்று ஓய்வுக்காக நிறுத்தப்பட வேண்டும் என்பதை ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினாலே டயர்வெடிப்புகளை தவிர்த்துவிட முடியும். இந்தப் பொறுப்பு டயர் உற்பத்தி நிறுவனங்களுக்கு இருக்கிறது. அவர்கள் இதுகுறித்துக் கவலைப்படுவதில்லை.÷
டயர் வெடித்ததால் விபத்து என்று பதிவு செய்யும் காவல் துறை, அந்த டயர் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு, அது வெடிக்கக் காரணம் என்ன என்பதை ஆய்வுக்கு அனுப்புகிறதா? குறைந்தபட்சம் இத்தகைய நடவடிக்கைகளை ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படிப்பு சார்ந்த கல்லூரி மாணவர்களின் பொறுப்பில் ஒப்படைத்தால்கூட அவர்கள் இதுகுறித்து ஆய்வு செய்வார்கள்.
வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறை வெறும் இயந்திரத்தனமாக, ஊழல் நிறைந்ததாக இருப்பதும் இத்தகைய விழிப்புணர்வு ஏற்படாமல் போனதற்குக் காரணம். ஏதாவது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்குப் பணம் கட்டிவிட்டு, அரைகுறையாக ஓட்டத் தெரிந்தாலும் போதும், எந்த வாகனத்துக்கான ஓட்டுநர் உரிமம் என்றாலும் கிடைத்துவிடும் என்ற நிலைதான் இந்தியா முழுவதிலும் இருக்கிறது.
இந்தியாவில் உயிர் - விலைமதிக்கவியலாத ஒன்றா, விலைமதிப்பில்லாத ஒன்றா?
No comments:
Post a Comment