Sunday, October 18, 2015

அரசாங்க வேலையில் நிம்மதி இல்லையா? ....பி.செந்தில்நாயகம்



திருச்செங்கோடு காவல் அதிகாரி விஷ்ணுபிரியாவின் மரணம் பணிச்சூழல் பாதுகாப்பும் பணிச்சூழலும் தொடர்பான விவாதத்தையும் கிளப்புகிறது. அரசாங்க வேலையில் நிம்மதி இல்லை, பணிச்சூழல் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வை அரசாங்க வேலையில் இருப்பவர் களுக்கு இந்த மரணம் ஏற்படுத்தலாம். இனிமேல் அரசாங்க வேலைக்குப் போகலாமா? என்று பயமும் படித்த பட்டதாரிகளுக்கு வரலாம்.

உண்மையில் அரசாங்க வேலை, பணிச்சூழல் பாதுகாப்பு நிறைந்தது மட்டுமல்ல, ஒரு சிறந்த வேலை வாய்ப்பு என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். அந்த அளவுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு, தங்களது பணியாளர்களுக்கு, பணிச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களும், சலுகைகளையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டே இருக்கின்றன என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

பாதுகாக்கும் சட்டம்

அரசாங்க ஊழியர் தன் பணியை செய்யும்போது அந்தப் பணியை செய்யவிடாமல் பலரோ தனி ஒருவரோ இடையூறு செய்தாலோ, பயமுறுத்தினாலோ, அப்படி தடை செய்பவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் வகையில் நம் இந்திய தண்டனைச் சட்டத்தில் பல பாதுகாப்புகள் உள்ளன. பணிசெய்யும் அரசாங்க ஊழியருக்கு, சக அரசாங்க ஊழியரோ, உயர் அதிகாரிகளே கூட தொந்தரவு அல்லது கொடுமை செய்தால், அதே தண்டனைச் சட்டம் மூலம் உயர்அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்ய முடியும். அந்த அளவுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பாதுகாப்பு கொடுக்கிறது.

நீதிமன்றம் செல்லலாம்

நல்லபடியாக, நேர்மையாக பணிசெய்யும் அரசாங்க ஊழியர் ஒருவரை, உயர் அதிகாரி, வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தோடு மிரட்டினாலோ செயல்பட்டாலோ, அதற்கு மேல் உள்ள உயர்அதிகாரியிடம் புகார் செய்யலாம். உதாரணமாக, அரசாங்க வருவாய்த் துறையில், கிராம நிர்வாக அதிகாரியை மேல் அதிகாரியான தாசில்தார் வேண்டுமென்றே பழிவாங்க வேண்டும் என்று பொய்யான காரணங்களைக் கூறி மன உளைச்சலை ஏற்படுத்தினால், உடனே தக்க ஆதாரங்களுடன் தாசில்தாருக்கு அடுத்த மேல்அதிகாரியான மாவட்ட வருவாய் அதிகாரியிடம் புகார் செய்யலாம். அவரும் உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட ஆட்சியர், அதற்குமேல், அரசாங்கத்தின் துறைவாரியான செயலர்கள், அதற்குமேல் அமைச்சர்கள், அவர்களும் உங்கள் புகாருக்குத் தேவையான நீதியை வழங்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்லலாம்.

விதிமுறைகள்

அரசு வரையறை செய்துள்ள விதிகளின்படி தன்னுடைய பணியை அரசாங்க ஊழியர் ஒருவர் செயல்படுத்த எந்தத் தடையும் கிடையாது, சட்டவிதிகளின் படி பணி செய்யக்கூடிய ஊழியரை பழிவாங்குவது, கொடுமைப்படுத்துவது, மன உளைச்சலை ஏற்படுத்துவது அச்சுறுத்துவது போன்ற செயல்களை உயர் அதிகாரிகள் செய்தால் அந்த அதிகாரிகளின் செயல்களில் இருந்து நிவாரணம் மற்றும் பரிகாரங்களைத் தேடிக்கொள்ளலாம். இது தொடர்பாக, தொடர்ந்து அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

மேலும் TamilNadu Government Servants Conduct Rules 1973 (Corrected up to 2010 - 2011) எனும் தமிழக அரசின் விதிமுறைகளில் மிகவும் தெளிவாக அரசாங்கப் பணியாளர் கடைப்பிடிக்கவேண்டியவை விளக்கப்பட்டுள்ளன. இதில் எல்லா விவரங்களும் உள்ளன. இதன்படி நடந்துகொண்டாலே எந்த பிரச்சினைகளும் வராது.

நிவாரணம் உண்டு

நேர்மையாகச் செயல்படும் அரசாங்க ஊழியரை, மேல் அதிகாரி பழிவாங்க வேண்டும் என்று தவறான, பொய்யான புகார்களின் மீது நடவடிக்கை எடுத்தாலும், அதாவது முதலில் மெமோ கொடுத்தால், பாதிக்கப்பட்ட ஊழியர் தான் தவறு செய்யவில்லை என்று முழு விவரத்துடன் தக்க ஆதாரத்துடன் சுய விளக்கம் கொடுக்க வேண்டும், அப்படி சரியானபடி பாதிக்கப்பட்ட ஊழியர் சுயவிளக்கம் கொடுத்தும், திருப்தி இல்லை என்று மீண்டும் தற்காலிகப் பணிநீக்கம் கொடுத்தாலும், அப்போது கொடுப்பட்ட தற்காலிகப் பணிநீக்கம், உங்களது பதவி உயர்வை பாதிக்கும் என்றோ, சம்பளம் நிறுத்தப்படும் என்றோ, பணிஇடமாற்றம் செய்யப்படும் என்றோ பயம் நிச்சயம் ஏற்படும். ஆனால் அது அவசியமில்லை.

தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு விசாரணை முடியும் வரை 6 மாத காலத்துக்குப் பாதி சம்பளம் கிடைக்கும், விசாரணை, 1 வருடம் வரை தொடர்ந்து அதற்கு மேல் (75%) முக்கால் சம்பளம் கிடைக்கும். புகார் மீதான குற்ற விசாரணை தொடர்ந்து 1 வருடத்துக்கு மேல் முடிக்கப்படாவிட்டால் மீண்டும், 100 சதவீதம் முழுச்சம்பளம் கிடைக்கும். விசாரணை முடிந்து வரும் தீர்ப்பில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் மேல் முறையீடு சென்று நிவாரணம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

புத்திசாலித்தனம்

தற்காலிகப் பணிநீக்கமோ, நீக்கமோ செய்யப்படும் உங்கள் மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், உங்களிடம் பிடிக்கப்பட்ட சம்பளம் அனைத்தும் திருப்பிக் கொடுக்கப்படும். பணியில் உள்ள அரசு ஊழியரை மேலதிகாரி வேண்டுமென்றே தகாத முறையில் நடத்தினாலோ, அல்லது மரியாதைக் குறைவாகப் பேசினாலோ, அவர் மீது மேல் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். பயப்படவேண்டியது இல்லை.

பெண் ஊழியர்களிடம் தகாத வகையில் இரட்டை அர்த்தங்களுடன் ஆபாசமாகப் பேசினாலும் நடந்து கொண்டாலும் அவர்களுக்கு பணிச்சூழல் பாதுகாப்பு அரசாணைகள் உள்ளன. இந்திய தண்டனைச் சட்டம், பாலியல் கொடுமை சட்டங்கள் மூலமும் நிவாரணம் கிடைக்கும்.

மேலும் அந்த குறிப்பிட்ட அதிகாரியிடமிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக்கொள்ள விடுப்பில் செல்லாம் அல்லது பணி இடமாற்றம் கேட்டுப் பெறலாம்.

அரசாங்க அதிகாரிகள் சிலர்தான் தவறாக நடந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. அவர்களிடமிருந்து சமயோசிதமாகத் தப்பிக்க முயல வேண்டும். முடியாவிட்டால், அவர்மீது புகார், விடுப்பு எடுத்துக்கொள்ளுதல், அல்லது பணி இடமாற்றம், என்றவகையில் செயல்படுவது புத்திசாலித்தனமான செயல் என்கிறார்கள் அனுபவசாலியான ஊழியர்கள்.

அரசாங்கமே பாதுகாப்பு

பொதுவாகவே, அரசு ஊழியர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி முடிந்ததும், அரசு அலுவலக வேலை நேரம் முடிந்ததும், வீட்டுக்குச் செல்லலாம். இரவு 9 மணி வரை கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. அதுவும் பெண் ஊழியர்களை, இரவு நேரத்தில் பணி செய்யச்சொல்லிக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அரசு ஆணைகள் இருக்கின்றன.

பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 180 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல பணி இடமாற்றங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பணியில் இருக்கும்போது, இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புகள் தரப்படுகிறது.

ஆகவே, படித்த பட்டதாரிகள் அரசுப் பணியில் பாதுகாப்பு இல்லை என்று பயப்பட வேண்டியது இல்லை. தனியார் வேலைகளைவிட அதிகமான பணிச்சூழல் பாதுகாப்பு அரசாங்கப் பணியில் உண்டு.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024