Monday, October 26, 2015

குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு ஆண்மை அகற்ற பரிந்துரை..dinamalar


சென்னை:குழந்தைகளிடம், பாலியல் தொந்தரவு செய்யும் குற்றவாளிகளுக்கு, ஆண்மை அகற்ற சட்டம் கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் வில்லியம்ஸ், தமிழகத்தில் ஏழை மாணவர்கள் காப்பகம் ஒன்றுக்கு, 2011ல் வந்தார். அந்த காப்பகத்தில் இருந்த, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை, படிக்க வைப்பதாக கூறி, டில்லிக்கு அழைத்துச் சென்றார். மேலும், மாணவனின் தாய்க்கு, பண உதவியும் செய்துள்ளார்.

டில்லி, ஒய்.எம்.சி.ஏ., விடுதியில், தங்கியிருந்த போது, மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, இயற்கைக்கு மாறாக உறவு கொண்டார். பின்னர், மாணவனை அங்கேயே விட்டு விட்டு, லண்டனுக்கு சென்று விட்டார்.பிறகு, அந்த மாணவன், சிலர் செய்த பண உதவியால், சென்னைக்கு திரும்பினான். மாணவனுக்கு நடந்த கொடுமையை அறிந்த, குழந்தைகள் நல அமைப்பு ஒன்று, போலீசில் புகார் செய்தது.

புகாரை பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், வில்லியம்ஸ் மீது குற்றம்சாட்டி, குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

வில்லியம்ஸ் மீது, கோர்ட், பிடிவாரன்ட் பிறப்பித்தது . இதன் அடிப்படையில், வில்லியம்சை, தேடப்படும் குற்றவாளி என, இன்டர்போல் என்கிற சர்வதேச போலீஸ் அறிவித்தது.

தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரன்டையும், தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதையும், ரத்து செய்ய கோரி, சென்னை ஐகோர்ட்டில், வில்லியம்ஸ் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'டில்லியில் நடந்த சம்பவத்துக்கு, தமிழக போலீசார், வழக்கு பதிவு செய்ய முடியாது, தமிழக கோர்ட்டுக்கு விசாரிக்கவும் அதிகாரம் இல்லை.

மாணவனிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை. குழந்தைகள் நல அமைப்பு உள்நோக்கத்துடன், எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது' என கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:

நாட்டில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதிகரித்து வருகிறது, 2012ல், 38 ஆயிரத்து 172 வழக்குகளும், 2014ல், 89 ஆயிரத்து 423 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்க பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், பள்ளி நிர்வாகமும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம், ஆண்மை அகற்றும், தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024