Monday, October 26, 2015

பழக பழகத்தான் பிடிக்கும்............தினகரன்



நன்றி குங்குமம் டாக்டர்

சுகர் ஸ்மார்ட் தாஸ்

வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் லிஃப்ட் வேலை செய்யவில்லை. நாம்தான் படி ஏறி செல்ல வேண்டும்... ஒவ்வொரு படியாக!- ஜோ ஜிரார்ட் (அமெரிக்க விற்பனையாளர் / கின்னஸ் சாதனையாளர்)

வயிற்றுப் பகுதியில் அதிக எடையை ஆசையோடு வைத்திருக்கும் ஆப்பிள் வடிவ நபர்களும், இடுப்பில் அதிக சுற்றளவை இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் பேரிக்காய் வடிவ நபர்களும் கவனத்தில் கொள்ள வேண்டியது இதுதான்... எடையோடு வடிவமும் சேர்ந்து வினையாற்றும் என்பதால், சராசரி வடிவத்துக்கு மாற வேண்டியது முழுமுதல் கட்டாயம்.சரி... டயட்டில் இருப்பதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள்.

அப்போது உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் எப்படி மாறுகின்றன?

ஒருவித கையறு நிலையை உணர்கிறீர்களோ? எல்லோரும் பிரமாதமான உணவு வகைகளை இஷ்டம் போல வெட்டும்போது, நாம் மட்டும் ஏன் இப்படி பட்டினியும் பத்தியமுமாகக் கிடக்கிறோம் எனத் தோன்றுகிறதோ? இந்த தாழ்வு மனப்பான்மையே அதிகமாக சாப்பிட வைத்து விடும்... நல்ல நிலைக்கு மாறுவதற்கு எதிரான முடிவை எடுக்கச் செய்து விடும்... ஜாக்கிரதை! இப்படிச் சொல்லிப் பார்க்கலாமே... ‘நான் ஹெல்த்தியான லைஃப்ஸ்டைலுக்குள் நுழைகிறேன். விரைவிலேயே பொருத்தமான உடல் நலத்துடன், ஸ்லிம் ஆக, ஆற்றல் மிக்கவராக ஆகப் போகிறேன்!’

எந்த ஒரு எடை குறைப்புத் திட்டத்துக்கும் பின்னடைவாக இருப்பது ஊக்கக் குறைவுதான். நம் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என நாமே நம்பத் தொடங்கும் போதுதான், அந்தச் செயலில் இயல்பூக்கம் உருவாகும்.

அப்படியானால் நம் மனத்திண்மையை எப்படி மேம்படுத்துவது?

எது முக்கியம் என முடிவெடுங்கள் தோற்றம், உடல் நலம், குடும்பம், சமூகத்தில் நன்மதிப்பு... இவையெல்லாம் முக்கியமா என நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். வாழ்க்கையில் நமக்கு என்னவெல்லாம் வேண்டும் என முடிவெடுத்தாலே, அதை அடைவது எளிதாகி விடும். ஒரு பழத்துண்டுக்கும் ஒரு சாக்லெட்டுக்கும் இடையேயான ஒரு சாய்ஸ் உங்கள் கையில் உள்ளது. சில நொடி சபலங்களைத் தாண்டி, புத்திசாலித்தனமாக முடிவெடுக்க நம்மால் நிச்சயம் முடியும்!

ஹெல்த்தியாக சிந்தித்தால் ஹெல்த்தியாக மாறலாம்

நம்மை ஆற்றல்மிக்க ஆரோக்கிய மனிதராக நினைக்கத் தொடங்குவது அவசியம். அதுவே அந்தப் பாதையில் நாம் தொடர்ந்து பயணிப்பதற்கு வழிகாட்டும். நாம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது ஜீரா வழியும் ஜிலேபியால் நம்மை வென்று விட
முடியாது. அந்த வெற்றியை ஆப்பிளுக்கு வேண்டுமானால் வழங்கலாம்!

சுறுசுறுப்பாக நடை போடுவோம்

முகத்தில் புன்னகையோடு நிமிர்ந்த நெஞ்சோடு, எப்போதும் தன்னம்பிக்கை கொண்டு, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வோமே. இது பழகப் பழக இனிதாகும். ஆம்... ஹெல்த்தியான வாழ்க்கை முறையும் பழகப் பழகத்தான் பிடிக்கும்!

எதிர் சிந்தனையை எகிறச் செய்வோம் அவ்வப்போது எதிர் எண்ணங்கள், தன்னம்பிக்கையைக் குறைக்கும் சிந்தனைகள் தோன்றக்கூடும். மண்டைக்குள் ‘எப்படி இருந்தே நீ... இப்போ இப்படியெல்லாம் கஷ்டப்படணுமா?’என்றெல்லாம் குரல்கள் இழுக்கும். ‘வா வா வா’ என வம்புக்கு இழுத்து, கடத்திப் போய் கிட்னி திருடும் வடிவேலு பட காமெடி போன்றதுதான் அது. அதற்கெல்லாம் செவி சாயக்க வேண்டியதே இல்லை.

உதாரணமாக... நாம் சாப்பிட வேண்டிய அளவு முடிந்த பிறகும், அதன் சுவை ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடேன்’ என ஆசை காட்டும். அந்த ஆசைக்கு மயங்கினால், நம்மை நாமே தண்டிப்பதாகத்தானே அர்த்தம். ஆகவே, ‘நோ தேங்க்ஸ்’ சொல்லி, அவ்விடம் விட்டு அகன்று விட வேண்டும் அக்கணமே. இதுபோன்ற எதிர் எண்ணங்களும் சுய பச்சாதாபங்களும் நம்மை பின்னடைவுக்குள் தள்ளிவிடும் என்பதை மறக்க வேண்டாம். எதிர் எண்ணங்களுக்கு எதிரான எண்ணங்களை அதற்குப் பதிலாகக் கூறி, அதை ஓட ஓட விரட்டுவோம். நல்ல சாய்ஸ் நம் சாய்ஸ் என்கிற நிலையில் நெகட்டிவ் எண்ணங்களுக்கு என்ன வேலை இருக்கிறது. அவை தொலையட்டும்!

மற்றவர்களையும் வண்டியில் ஏற்றுவோம் தனக்கு நீரிழிவு இருக்கிறது என்கிற விஷயத்தைக்கூட ரகசியமாக வைத்திருக்கிற நபர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இது ஒரு மோசமான நிலை. இந்த விஷயத்தை வெளியில் சொல்லாத போது, ஆரோக்கியமற்ற உணவுகளை விரும்பியோ, விரும்பாமலோ அதிக அளவில் சாப்பிடும் நிலை ஏற்படும். ‘சுகர் இல்லாத காபி’ என்று கேட்டு வாங்கக்கூட கூச்சப்படுகிறவர்களை நாம் பார்க்கிறோம். ஹோட்டலில் தவறுதலாக சுகர் சேர்க்கப்பட்ட காபி அளிக்கப்பட்டாலும் கூட, அதை மாற்றித்தரும் படி கேட்காமல், அப்படியே பருகுபவர்கள் பலர் உண்டு.

அதற்கு அவர்கள் கூறும் காரணம்... ‘பரவாயில்லை’. நம் உடல் நம் உணவு நம் உரிமை. இதில் ‘பரவாயில்லை’ என்ற விட்டுக் கொடுத்தலுக்கு அவசியமே இல்லை. ஆதலால், உணவு விஷயத்தில் எந்த இடத்திலும் தயக்கமே வேண்டாம். ‘இதுதான் வேண்டும்... இப்படித்தான் வேண்டும்’ என உறுதியாகக் கேட்டு வாங்கியே சாப்பிடலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. வீட்டிலும் அப்படித்தான். நாமே உணவு மற்றும் உடற்பயிற்சி விஷயங்களில் அக்கறை காட்டாத போது, வீட்டில் உள்ளவர்களும் காலப்போக்கில் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இதன் முக்கியத்துவமும் புரியாமல் போகும். அதன் பிறகுநாம் தனிமைப்படுத்தப்படுவோம். நீரிழிவு கட்டுப்பாடு கையை விட்டுப் போய் விடும். நாம் தினசரி வாழ்வில் எடுக்கிற சிறுசிறு முடிவுகள் கூட, நம் வாழ்க்கையை ஆரோக்கியமாக மாற்றி அமைக்கிற பணியைச் செய்யும். இதில் நம் குடும்பத்தினரையும் நண்பர்களையும் இயல்பாக ஈடுபடுத்தும் போது, நம் பணி எளிதாகி விடும். அதோடு, அறிந்தோ அறியாமலோ அவர்களும் ஆரோக்கிய கப்பலில் ஏறி நம்மோடு பயணிப்பார்கள். நம்முடைய திட்டத்தில் பலவித சமூக, கலாசார காரணிகள் தடங்கல் விளைவிக்கக் கூடும். இருப்பினும், நம் உறுதியும் குடும்பத்தினரின் ஆதரவும் இருக்கும் போது, இந்தப் பயணம் நிச்சயம் இனிமையாகவே அமையும்!

ஸ்வீட் டேட்டா

உலக நீரிழிவாளர்களில் 46.3 சதவிகிதத்தினருக்கு, தங்களுக்கு நீரிழிவு இருப்பதே தெரியாது!

(கட்டுப்படுவோம்...கட்டுப்படுத்துவோம்!)

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024