Tuesday, October 27, 2015

வேலை வாய்ப்பில் ஊழலுக்கு இடம் இல்லை

logo

பிரதமரோ, முதல்–அமைச்சரோ, சுதந்திர தினத்தன்று ஒரு அறிவிப்பை பிரகடனப்படுத்தினால், அது பரிசீலனை என்ற எல்லையைத்தாண்டி, நிறைவேற்றப்படுவதற்கு தயாராக இருக்கிறது என்ற உறுதி மக்களிடம் இருக்கும். அந்த வகையில், கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தன் உரையின்போது, இளைஞர் சமுதாயத்துக்கு குறிப்பாக வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கித்தவிக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை, உற்சாகம் ஊட்டும் சில முடிவுகளை அறிவித்தார். ‘‘நாட்டில் ஊழல் இருக்கும் இடங்களில் ஒரு இடம் வேலைவாய்ப்புதான். ஏழைகளிலும் ஏழையான பரம ஏழை தன் மகனுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்று தணியாத ஆசைகொண்டு இருக்கிறார். இளைய சமுதாயத்தினர் ரெயில்வேயிலோ, ஆசிரியருக்கோ, பியூன், டிரைவர் போன்று எந்த வேலைக்காகவும் இண்டர்வியூ கார்டு வந்துவிட்டால், யாரை ரெக்கமண்டேஷன் அதாவது, பரிந்துரைக்காக அணுகலாம்? என்று யோசிக்கத்தொடங்கிவிடுவார்கள். அந்த இளைஞரின் விதவைத் தாய்கூட இந்த வேலைக்காக யாரிடம் பரிந்துரைக்கு செல்லலாம்? என்று குழம்புவார். ஏனெனில், நாட்டில் நியாயமும், அநியாயமும் திறமை அடிப்படையில் இல்லாமல், இண்டர்வியூ அடிப்படையில்தான் முடிவாகிறது. இண்டர்வியூவில் தோல்வி அடைந்துவிட்டாய் என்று எளிதாக கூறிவிடுகிறார்கள். ஓரிரு நிமிடங்கள் இண்டர்வியூ நடத்தி ஒருவரை மதிப்பீடு செய்யும் திறன் படைத்த மனோதத்துவ நிபுணரைக்கூட நான் இதுவரையில் பார்த்ததில்லை. ஒரு ஏழை தாயின் மகனோ, மிகச்சிறிய வேலையைத்தேடும் குறைவான படிப்புள்ளவர்களோ இதுபோல இண்டர்வியூவுக்கு செல்லவேண்டுமா?, இணையதளத்தில் தாக்கல் செய்யப்படும் மார்க்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யமுடியாதா?, உடல்தகுதி தேவைப்படும் பதவிகளுக்கு தனிவழி முறைகள் தேவைதான். ஆளுமை மற்றும் தோற்றம் தேவைப்படும் பதவிகளுக்கு இண்டர்வியூ தேவைதான். இளநிலை பதவிகளுக்காக நேர்காணல் தேர்வுகளை விரைவில் நிறுத்திவிட்டு, திறமை அடிப்படையில் வேலைவழங்குமாறு மாநில அரசுகளையும், மத்திய அரசாங்கத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இது ஏழை மக்களை பெரிதும் பாதிக்கும் ஊழலை ஒழிக்க உதவும்’’ என்று முழங்கினார்.

தான் சொன்னதை நிறைவேற்றும் வகையில், மாதந்தோறும் ‘மனதின் குரல்’ என்று வானொலியில் பேசும் உரையில் நேற்று முன்தினம் உரையாற்றும்போது, மத்திய அரசாங்க பணிகளில் ‘கெஜட்டெட்’ பதவிகள் தவிர, மற்ற அனைத்து வகையான டி, சி, பி, பிரிவு பணிகளுக்கான நேர்முகத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இது வருகிற 2016–ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விண்ணப்பதாரர்களை நேரில் பார்க்காமல் தேர்ந்தெடுப்பதில் சில குறைபாடுகள் இருந்தாலும், இனி மத்திய அரசாங்கத்தில் திறமை உள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுக்காமல் வேலைகிடைக்கும். லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருபவர்கள் போட்ட பணத்தை எடுக்க முதல்நாளில் இருந்தே லஞ்சம் வாங்கத்தொடங்கிவிடுவார்கள். லஞ்சம் கொடுப்பவர்களுக்கு வேலை என்று இருக்கும் நிலையில் திறமைக்கு நிச்சயமாக இடம் இருக்காது. ‘‘எதிலும் நேர்மை, எங்கும் நேர்மை’’ என்ற பாதையின் கதவு லஞ்சம் இல்லாத தேர்வுதான். இந்த முறையை உடனடியாக மாநில அரசுகளும் பின்பற்றவேண்டும். இதுமட்டுமல்லாமல், இண்டர்வியூவில் கலந்துகொள்பவர்களுக்கு அவர்களின் விடைத்தாள் நகலையும் கொடுக்கும் முறைவேண்டும். இதன்மூலம் வேலை கிடைக்காதவர்களும் தாங்கள் எந்த இடத்தில் தவறியிருக்கிறோம் என்று பார்த்து அடுத்தமுறை தவறாமல் இருக்க பாடம் புகட்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024