Friday, October 2, 2015

இனியும் தயக்கம் வேண்டாம்!..dinamani


By ஆசிரியர்

First Published : 02 October 2015 12:58 AM IST


இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற சட்டம் ஏற்கெனவே உள்ளது. அதை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றுதான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மக்கள் அனைவரும் தலைக்கவசம் வாங்குவதில் ஆர்வம் காட்டியபோது, இந்தத் தீர்ப்புக்கு வழக்குரைஞர்களில் சிலர் தலைவணங்க மறுத்தனர். மதுரையில் தலைக்கவசத்தைத் தீயிட்டுக் கொளுத்தித் தீர்ப்பை விமர்சனம் செய்தனர். பிரச்னை தலைக்கவசத்தில் தொடங்கியது என்றாலும், உண்மையான காரணம் அதுவல்ல.
ஏற்பில்லாத தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டிய வழக்குரைஞர்களே, தீர்ப்பை விமர்சனம் செய்வதை, போராட்டம் நடத்துவதை நீதிமன்றம் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? மதுரை வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் ஏ.கே.ராமசாமி, தர்மராஜ் இருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் மேற்கொண்டது.
இதைக் கண்டித்து நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம், உயர்நீதிமன்றத்தைக் கண்டிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, மதுரை வழக்குரைஞர்கள் 14 பேரை அகில இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கும் உத்தரவிட்டது. இதனிடையே, நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்குரைஞர் சங்கம் செயல்படும் உரிமை ரத்து செய்யப்பட்டது.
இதற்கெல்லாம் காரணம், சில வழக்குரைஞர்களின் செயல்பாடுகள் பொறுக்க முடியாத அளவுக்குப் போனதும், வழக்குரைஞர்கள் சங்கமே போராட்டத்தில் இறங்கியதும்தான். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால் சென்ற ஆண்டு தனது விடையனுப்பு விழாவில் வழக்குரைஞர்களின் செயல்பாடுகள் குறித்து மனம் வெதும்பி சில கருத்துகளை வெளியிட்டார். "எனது 37 ஆண்டு கால நீதித் துறை அனுபவத்தில் சந்திக்காததையும், கேள்விப்படாததையும் இங்கு எதிர்கொண்டேன். வழக்குரைஞர்கள் ஜாதியரீதியாக நீதிபதிகளைக் கொச்சைப்படுத்திப் பேசும் போக்கினால், சக நீதிபதிகள் என்னை அணுகி வேறு உயர்நீதிமன்றங்களுக்கு இடமாறுதல் கேட்டனர். வெளி மாநிலங்களில் உள்ள சக நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வர மறுத்தனர்' என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.
"போராட்டம் நடத்துவது, நீதிமன்ற விசாரணை அரங்கினுள்ளும், நீதிபதி அறைக்குள்ளும் அத்துமீறி நுழைவது, எதிர்ப்புக்குரல் எழுப்புவது என்று செயல்படுபவர்கள் வழங்குரைஞர்கள்தானா? இதையெல்லாம் சென்னை வழக்குரைஞர்கள் சங்கம் ஏன் மௌனமாக வேடிக்கை பார்க்கிறது?' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் செப்டம்பர் 21-ஆம் தேதி கேள்வி எழுப்பினர். அதுநாள்வரை மெüனம் காத்த தமிழ்நாடு பார் கவுன்சில், அடுத்த நாளே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 2,495 வழக்குரைஞர்கள் செயல்படத் தடை விதித்தது. இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தமிழ்நாடு பார் கவுன்சில் இத்தனைக் காலம் தாமதித்ததுதான், தமிழ்நாட்டில் நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்கே அடிப்படைக் காரணம்.
சட்டப் படிப்பில் இணையான தகுதி இல்லாதவர்கள், பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வு எழுதாதவர்கள் உள்ளிட்ட பலர் வழக்குரைஞர் தொழிலை முறையாகச் செய்யாமலும், சட்ட நுணுக்கம் தெரியாமலும், வாதத்திறமை இல்லாமலும், நீதித் தரகு வேலைகளில் ஈடுபட்டதால்தான் நீதிமன்றங்கள் அன்றாடப் போராட்டக் களங்களாக மாறத் தொடங்கின. தங்களுக்கு இசைவாக இல்லாத நீதிபதிகளை நீதிமன்ற வளாகத்தில் விமர்சிக்கும் போக்கு இவர்களால்தான் அதிகரித்தது. புதுப்புதுக் காரணங்களைக் கண்டுபிடித்து நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர். தங்களை அனுசரிக்காவிட்டால் நீதிமன்றமே நடக்காது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் போக்கு தொடங்கியது. அதன் உச்சக்காட்சிதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு பார் கவுன்சில் 2,495 வழக்குரைஞர்களை செயல்படத் தடை விதித்ததன் விளைவு வெளிப்படையாகவே தெரிகிறது. வழக்குரைஞர்கள் சங்கங்கள் செப்டம்பர் 28-ஆம் தேதி அழைப்பு விடுத்திருந்த நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் வெற்றி பெறவில்லை. 60% வழக்கு விசாரணைகள் நடந்தன. இதிலிருந்து பிரச்னைகளுக்கு யார் காரணம் என்பது தெளிவாகி இருக்கிறது.
நீதிமன்ற வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை, வழக்குரைஞர் விசாரணைக்கு ஆஜராகாவிடில், வழக்குத் தொடுத்தவர் இழப்பீடு கோரலாம் என்று தற்போது உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை, பல ஆண்டுகளுக்கு முன்பே தயக்கமின்றிப் பிறப்பித்திருந்தால், இத்தகைய களங்கமான சூழல் நீதித் துறைக்கு வந்திருக்குமா? வழக்குரைஞர்கள் இந்த அளவுக்கு இறங்கிப் போராடுகிறார்கள் என்றால், சில உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மறைமுக ஆதரவும்தான் அதற்குக் காரணம் என்கிற கசப்பான உண்மையையும் மறுக்க முடியுமா?
நீதிமன்றத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், "சில காலத்துக்கு சென்னையில் வழக்குகளைப் பதிவு செய்யலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை தாற்காலிகமாக சட்டப்படி மூடலாம்' என்றும் பரிந்துரைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. இதற்குக் காரணம், வழக்குரைஞர்கள் சிலர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆதிக்கம் செலுத்தி, சில வழக்குகளைப் பதிவு செய்ய வற்புறுத்துகிறார்கள், மறுத்தால் வேறு காரணங்களை முன்வைத்து பிரச்னை செய்கிறார்கள் என்பதுதான்.
தவறு செய்கிற, தகுதியில்லாத வழக்குரைஞர்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் எடுக்கும் நடவடிக்கைகள்தான் நீதித் துறை களங்கத்தைப் போக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024