By அ. கோவிந்தராஜூ
First Published : 06 October 2015 01:27 AM IST
அன்பு ஆற்றல் மிக்கது. ஒரு குழந்தையின் அன்பால் பிளவுபட்ட குடும்பம் ஒன்று சேர்வது உண்டு. காதலனுக்கு மண்ணில் மாமலையும் ஒரு சிறு கடுகாய் தோன்றக் காரணம், காதலி காட்டும் அன்பின் வலிமைதான்.
மனைவி காட்டும் தன்னலமற்ற அன்பு, நெறி கெட்டுச் செல்லும் கணவனை நல்வழிப்படுத்தும் ஆற்றல் மிக்கது.
இன்றளவும் குடும்பம் என்னும் கட்டுக்கோப்பு குலையாமல் இருப்பதற்குக் காரணம், அன்னை பொழியும் அன்பின் வலிமைதான். குடும்பத் தலைவனாய் விளங்கும் தந்தை ஓய்வின்றி உழைப்பதும் ஆழ்மனதில் கிடக்கும் அன்பின் பேராற்றலால்தான்.
சாதி, மதம், இனம் பாராமல் அன்பு காட்ட வேண்டும். மற்ற எல்லா உயிர்களிடத்தும் அன்பைப் பொழிய வேண்டும். பகைவரையும் மன்னித்து அன்பு செய்ய வேண்டும்.
இந்த அன்பு நெறியைத்தான் நின்னோடு ஐவரானோம் என்று குகனையும், நின்னோடு அறுவரானோம் என்று அனுமனையும், நின்னோடு எழுவரானோம் என்று விபீடணனையும் இராமன் தம்பியராக்கிக் கொள்வதாய் கம்பன் படைத்துக் காட்டுகிறான்.
இவ்வன்பு நெறி தழைக்குமாயின் உலகமாந்தர் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழலாம்.
அளவுக்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சே. இக்கூற்று அன்புக்கும் பொருந்தும். தாயும் தந்தையும் தம் குழந்தைகளிடத்து அளவுக்கு அதிகமான அன்பைச் செலுத்தி, அதாவது செல்லம் கொடுத்து, குழந்தையின் போக்குக்கு விட்டு, பின்னர் துன்பப்படுவதுண்டு.
கண்மூடித்தனமான அன்பு என்று ஒரு வகையும் உண்டு. இது மிகவும் ஆபத்தானது. இது காலப்போக்கில் வெறியாக மாறிவிடும்.
மொழியின் மீது அன்பு இருக்க வேண்டும். மொழி வெறியாக மாறக் கூடாது. மதத்தின் மீது அன்பு இருக்க வேண்டும். ஒரு போதும் மதவெறியாக மாறுதல் கூடாது.
நம் நாட்டில் இல்லறம் என்பது வற்றாத அன்பின் அடிப்படையில் அமைவது. ஆயினும், அவ்வற்றாத ஊற்று வரதட்சணைச் சிக்கல்களால் வறண்டு போவதைப் பார்க்கிறோம்.
செல்வ மகளையும் கொடுத்து, செல்வத்தையும் கொடுக்க ஏழைத் தந்தையால் இயலுமா? பாரதியார் கண்ணம்மாவை நோக்கி, "அன்பொழுக செல்லமடி நீ எனக்கு சேமநிதி நானுனக்கு' என்று கூறுவதைப்போல, அன்பு காட்டி மணம் புரியும் இளைஞர் கூட்டம் பெருக வேண்டும்.
வள்ளுவர் கூறுவது போல், அன்பு பண்பாகவும், அறம் பயனாகவும் உள்ள இல்லங்கள் பெருகின், நாட்டில் நலம் பெருகும், அமைதி நிலவும்.
கிணற்று நீர் இறைக்க இறைக்கத்தான் ஊறும். அதுபோல், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டினால் அன்பு பெருகும்.
பிற உயிர்களிடத்து அன்பு காட்டி, அதனால் கிடைக்கும் இன்பத்தைச் சுவைக்க வேண்டும். இவ்வின்பத்தைச் சுவைத்தவர் தாயுமானவர். "அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே' என்று கூறுகிறார்.
காக்கை குருவிகள் எங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று அஃறிணைப் பொருள்களிடத்தும் அன்பு காட்டியவர் பாரதியார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அன்பின் மிகுதியால் நெஞ்சு நெக்குருகப் பாடியவர் வள்ளலார்.
ஒரு முறை காந்தியடிகளின் சீடர்கள் சிலர், இரவு நேரத்தில் பசுந் தழையைக் கொத்துக் கொத்தாகப் பறித்து வந்தனர். அதைக் கண்ட காந்தியடிகள், மரங்களும் நம்மைப்போல் உயிருடையன. நம்மைப்போலவே வளர்கின்றன, முகர்கின்றன, உண்கின்றன, பருகுகின்றன, உறங்குகின்றன; அவை இரவில் ஓய்வு பெற்று உறங்கும்போது தழைகளைப் பறித்தல் தவறு என்று கூறினார்.
முன்னர் ஒருசமயம், அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ மத மாநாட்டில் சுவாமி விவேகானந்தர், சகோதர அன்போடு, "அமெரிக்க நாட்டுச் சகோதரர்களே, சகோதரிகளே' என்று தொடங்கி உரையாற்றியபோது, அங்கிருந்தோர் தம் மெய்மறந்து செவிமடுத்தார்கள்.
நாடு, மொழி, இனம் கடந்து எல்லா நாட்டினரும் நம் உடன் பிறந்தார் என ஒவ்வொருவரும் எண்ணி வாழத் தொடங்கினால், உலகில் போர் ஏது, பூசல் ஏது?
அண்மைக் காலமாக மனித மனங்கள் பாலைவனங்களாக மாறி வருகின்றன. இறைவன் அன்பு மயமானவன் என எல்லா மதங்களும் போதிக்கின்றன.
மனித நேயமும் அன்பும் மீண்டும் பெருக்கெடுக்க வேண்டும், அதற்கான வழிகளைச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போது உள்ளோம்.
கண்மூடித்தனமான அன்பு என்று ஒரு வகை உண்டு. இது மிகவும் ஆபத்தானது. மொழியின் மீது அன்பு இருக்க வேண்டும். மொழி வெறியாக மாறக் கூடாது.
No comments:
Post a Comment