Thursday, October 29, 2015

மவுனம் காக்கும் ஜெயலலிதாவும் அதிமுக தேர்தல் வியூகமும் ............... தீபா ஹெச்.ராமகிருஷ்ணன்

Return to frontpage

'வரவிருக்கும் 2016 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் பன்முனைப் போட்டி ஏற்பட்டால் அது எங்களுக்கே சாதகமாக அமையும்' எனக் கூறுகின்றனர் அதிமுக மூத்த தலைவர்கள் சிலர்.

ஒரு பக்கம் ஸ்டாலினின் 'நமக்கு நாமே - விடியல் மீட்புப் பயணம்', 'விஜயகாந்த்தின் மக்களுக்காக மக்கள் பணி' மறுபக்கம் அன்புமணியின் 'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' பிரச்சாரம், இன்னொருபுறம் தமிழகத்தில் தங்கள் கட்சியை வலுப்படுத்தும் பாஜகவின் வியூகம், இவையெல்லாம் போதாது என மக்கள் நல கூட்டு இயக்கம் வலுவான மாற்று சக்தியாக அமையும் என்ற வைகோவின் நம்பிக்கை... இப்படி தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது ஆனால், அதிமுகவோ நிதானமான மவுனத்தை கடைபிடிக்கப்படுகிறது.

பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள இந்த நிதானம், மவுனம் குறித்து அதிமுகவின் ஒரு சில தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

"எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. எதிர்க்கட்சிகள் வலுவானதாக இல்லாததால் வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வெற்றி காணும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு வெற்றி பெற்றுத்தர அரசின் சாதனைகள் மட்டுமே போதும்" எனக் கூறுகின்றனர்.

ஆனால், அரசியல் நோக்கர்கள் பார்வை வேறாக உள்ளது. "கடந்த காலங்களை திரும்பிப் பார்க்கும்போது தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக நிச்சயமாக கூட்டணி அமைக்கும் என்றே சொல்ல வேண்டும். 1996 தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாலர் ஜெயலலிதா தேர்தலுக்கு முன்னதாக வலுவான கூட்டணியை உருவாக்குவதில் திறம்பட செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாகவே 2001, 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்கு வங்கியை அதிமுகவுக்கு சாதகமாக அவரால் திருப்ப முடிந்தது" என்கின்றனர் அவர்கள்.

இப்போதைக்கு, ஆளுங்கட்சியின் ஒரு பகுதி தலைவர்கள், தமிழகத்தில் பன்முனைப் போட்டி ஏற்பட்டால் அது தங்களுக்கே சாதகமாக அமையும் என நம்புகின்றனர். அதேவேளையில், தேர்தல் நெருங்கும் தருவாயில் எதிர்க்கட்சிகள் வலுப்பெறலாம் என்பதையும் அவர்கள் மறுக்கவில்லை என்பதே உண்மை.

அதிமுகவுக்கு நிலவும் சாதகமான சூழல் குறித்து மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆக் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்-ன் இணை பேராசிரியர் சி.லக்‌ஷ்மணன் கூறும்போது, "எதிர்க்கட்சிகள் வலுவான அணியாக திரளவில்லை. அவர்களது எதிர்ப்புக் குரல் ஒன்றுபட்டு ஒலிக்கவில்லை. இது அதிமுகவுக்கு சாதகமே. ஆனால், திமுக தனது உட்கட்சிப் பூசல்களை சீர் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டினால், அது அதிமுகவுக்கு பெரும் சவாலாக அமையும்.

அண்மையில் நடைபெற்ற கவுரவக் கொலைகள் தொடர்பாக அரசு மவுனம் காத்து வருவது தலித்துகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற அரசின் சில சறுக்கல்களில் எதிர்க்கட்சிகள் ஆதாயம் தேடலாம்" என்றார்.

இதை முற்றிலுமாக மறுத்த அதிமுக மூத்த தலைவர் ஒருவர், "எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டாலும்கூட அதிமுகவே தனிப் பெரும்பான்மை உள்ள கட்சியாக வெற்றி பெறும். காரணம், முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்கள். அரசு அமல்படுத்தியுள்ள நலத்திட்டங்களால் மக்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த 2014 மக்களவை தேர்தலில் கட்சிக்குக் கிடைத்த 40% வாக்குகள் மேலும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இதுதவிர அரசு அறிவித்துள்ள விலையில்லா பொருட்கள் திட்டம் பெரும் பலமாக அமையும். அண்மையில், உருவாகியுள்ள மக்கள் நல கூட்டியக்கத்தால் எங்களுக்கு ஆதரவாக வாக்குகள் பிரியும்" என்றார்.

விவசாயிகள், தொழிலாளர்கள் அதிருப்தி:

அதிமுக வட்டாரம் 2016 தேர்தல் வெற்றி தங்கள் வசம் என்று கூறினாலும், பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுகையில், "விவசாயிகள். விவசாயி தொழிலாளர்கள், சிறு, குறுந் தொழிலாளர்கள் மத்தியில் ஆளும் கட்சி மீது அதிருப்தியே நிலவுகிறது.

காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினை தீர்க்கப்படாததாலும்; வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான விலை நிர்ணய கோரிக்கைகளை இன்னும் நிறைவேற்றப்படாததாலும் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்குவது குறைக்கப்பட்டது விவசாய தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டதால் தொழிற்சாலை ஊழியர்கள் பலரும் அதிருப்தியிலேயே இருக்கின்றனர்" என்றார்.

ஆனால், இதை மறுக்கும் அதிமுக ராஜ்யசபா எம்.பி. ரபி பெர்ணாட், "அதிமுக மக்கள் அபிமானத்தைப் பெற்றுள்ளது. இலவச திட்டங்களால் மட்டுமே உருவானது அல்ல அந்த அபிமானம். எனவே, எங்களுக்கு வெற்றி நிச்சயம்" என நம்பிக்கை தெரிவித்தார்.

பெயர் வெளியிட விரும்பாத, அதிமுகவை கூர்ந்து கவனித்து வரும் அரசியல் நோக்கர் ஒருவர் கூறும்போது, "அதிமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது. எனவே, மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது பெற்ற வெற்றியைப் போல் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்" என்றார்.

ஆனால் தேர்தல் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற ரிஸ்க் எடுக்க ஜெயலலிதா துணிந்து நிற்க மாட்டார் என்றே தெரிகிறது. 2001-ல் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி உதவியுடன்; 2011-ல் தேமுதிக, இடது சாரிகள் கூட்டணி உதவியுடனும் ஆட்சியைக் கைப்பாற்றினார் என்பதை மறுக்க முடியாது.

2004 மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும், மதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தி திமுகவை மைனாரிட்டி அரசு என்ற நிலைக்குத் தள்ளினார் ஜெயலலிதா.

இத்தகைய சூழலில் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "நடைபெறும் அரசியல் மாற்றங்களை எல்லாம் தீவிரமாக அலசி ஆராய்ந்த பிறகு கட்சியின் நன்மைக்கு ஏற்றவாறு முதல்வர் ஜெயலலிதா நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார். திமுக என்னதான மெனக்கிட்டு மெகா கூட்டணி அமைக்க அடித்தளம் இட்டாலும், அதை முறியடிக்கும் திட்டங்களை அவர் ஏற்கெனவே நிச்சயம் வகுத்து வைத்திருப்பார்" என்றார்.

தமிழில்: பாரதி ஆனந்த்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024