Thursday, October 8, 2015

பாவம் மாடுகள்... அவற்றை விட்டுவிடுங்கள்!

Return to frontpage

பிராணிகளில் சாதுவானது மாடு. தவிர, மனித இனத்துக்கு மிக நெருக்கமானதும்கூட. வயல்களில் உழவுக்கு உதவும் காளைகளாகட்டும், நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட பாலைத் தரும் பசுக்கள், எருமைகளாகட்டும்; இதில் விதிவிலக்கு இல்லை. அப்படிப்பட்ட மாடுகள் இப்போது வகுப்புவாத அரசியலின் மையப் பொருளாக மாற்றப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.

சாலையில் பஸ்ஸில் ஒரு ஆடோ, மாடோ அடிபட நேரும்போது, மனிதத்தன்மையுள்ள யாரும் அதை வேடிக்கை பார்ப்பதில்லை. உத்தரப் பிரதேசத்தின் முஹம்மது ஜகி ஒரு உதாரணம். கிணற்றில் விழுந்த ஒரு பசுங்கன்றுக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து இறங்கி மீட்டிருக்கிறார். கிணற்றில் விழுந்து தவிப்பது ஒரு பசு, கோமாதா, தெய்வம் என்றெல்லாம் இல்லை. அடிப்படையில் அது ஒரு உயிர். அது பரிதவிக்கிறது. நம்மால் முடிந்த வரை காப்பாற்ற வேண்டும் என்கிற மனிதாபிமானம்; அக்கறை. பசுங்கன்று விழுந்த இடத்தில் ஆட்டுக்குட்டி விழுந்திருந்தாலும் முஹம்மது ஜகி அப்படித்தான் நடந்துகொண்டிருப்பார் என்பது தெளிவு. அதேசமயம், பிரியாணி சாப்பிடும்போது அவர் ஆட்டையோ, மாட்டையோ நினைத்துக்கொண்டிருக்க மாட்டார். அது தேவையும் இல்லை.

உலகம் முழுவதும் வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறு நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒரு சமூகத்துக்குப் பசு மாமிசம் ஆகாது. ஒரு சமூகத்துக்குப் பன்றி மாமிசம் ஆகாது. ஒரு சமூகத்துக்குக் குதிரை மாமிசம் ஆகாது. எல்லோர் நம்பிக்கைகளும் முக்கியம். ஆனால், இந்த நம்பிக்கைகளுக்கான மதிப்புக்கு ஒரு எல்லை இருக்கிறது. நமக்குப் பிடிக்காததை நாம் சாப்பிடாமல் இருக்கலாம்; அடுத்தவரும் சாப்பிடக் கூடாது என்பது அநாகரிகம் மட்டும் அல்ல; அத்துமீறலும்கூட.

எப்படியும் மக்களின் உணவுப் பழக்கவழக்கத்தில், அவர்களுடைய உணவுக் கலாச்சாரத்தில் தலையிடவும் நிர்ப்பந்திக்கவும் எவருக்கும் உரிமை கிடையாது; முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு. அதிலும் இந்தியாவில், ‘இந்துக்களுக்கு எதிரானது’, ‘இந்துக்களின் மனங்களைப் புண்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவது’ என்றெல்லாம் சொல்லி மாட்டுக்கறிக்குத் தடைச்சூழலைக் கொண்டுவர சங்கப் பரிவாரங்கள் முற்படுவது அபத்தத்திலும் அபத்தம். கேரளத்தில் மாட்டுக்கறி நுகர்வில் பேதங்கள் இல்லை; முஸ்லிம்களைப் போலவே தலித்துகளும் தங்கள் பண்பாட்டுக்கூறுடன் ஒட்டியதாக அதைக் கருதுகின்றனர். அப்படியென்றால், இவர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லையா? இந்து மதம் என்பதே எல்லையற்ற கலாச்சாரங்களை உள்ளடக்கியது அல்லவா?

அடிப்படையில் உணவு என்பது உணவு. அவ்வளவுதான். இந்தியாவில் மக்களுக்கு இதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், குழப்பத்தையும் பிரிவினையையும் உருவாக்க அரசியல்வாதிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு உச்சகட்ட உதாரணம் ஆகியிருக்கிறது தாத்ரி சம்பவம். உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியில், முகம்மது அக்லக் என்பவர் வீட்டில் மாட்டுக் கறியைச் சாப்பிட்டதாகக் கூறி, அவரை வீடு புகுந்து அடித்துக் கொன்றிருக்கின்றனர்.

இந்துக் கோயிலில் கீர்த்தன் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அப்போது, அங்கேயிருந்த சிலர், ‘நம்மை அவமதிப்பதற்காகவே பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பசுவைக் கொன்று கறி சமைத்திருக்கிறார்கள்’ என்று வெறியூட்டும் விதத்தில் கூறியிருக்கின்றனர். அதன் பிறகு, வெறிகொண்டு கிளம்பிய கும்பல், அக்லக்கின் வீட்டுக்குச் சென்று, அவர்கள் சொன்னது எதையும் காதில் வாங்காமல் அடித்துக் கொன்றிருக்கிறது.

நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்தே ‘உணவுக் கலாச்சாரத்தின் மீதான அடையாள அரசியல் வன்முறைகள்’ பெருகிக்கொண்டே இருக்கின்றன. கடந்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது முதலே, ‘பசுவதையைத் தடை செய்ய தேசிய அளவில் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை வலுப்பெற்றுவருகிறது. இந்தச் சட்டம் இயற்றும் அதிகாரம் இப்போது மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

ஜைனர்களின் பண்டிகையை முன்னிட்டு, ‘யாருமே இறைச்சி சாப்பிடக் கூடாது’என்று தடை விதித்ததும் விநாயக சதுர்த்தியின்போதும் இறைச்சி விற்பனையைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இறைச்சி என்பது சாப்பாட்டு மேஜையிலிருந்து இடம்பெயர்ந்து, ஊடகங்களின் மத்தியில் விவாதப் பொருளானது. பசிக்காகவும் ருசிக்காகவும் உண்ணப்படும் உணவு, இன்னொரு சமூகத்தவரின் மனங்களைப் புண்படுத்துவதற்காகத்தான் என்று அர்த்தப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, சமூகங்களுக்கிடையேயான கசப்புணர்வையும் வெறுப்புணர்வையும் வளர்த்தெடுக்கும் கருவியாக உணவு உருமாற்றப்படுகிறது.

அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் மத அடிப்படையில் மக்களைத் தூண்டிவிடும் செயல்பாடுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இத்தகைய சூழலில், “இந்தச் சம்பவத்துக்கு வகுப்புவாத முலாம் பூசாதீர்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.

வதந்தி ஒரு உயிரைப் பலிவாங்கியிருப்பதோடு மட்டுமல்ல; நாடு முழுவதும் தேவையற்ற சர்ச்சைகளைப் பரப்புகிறது. இதையெல்லாம் எப்படி சாதாரணமானதாகவோ, மதச்சாயங்களுக்கு அப்பாற்பட்டதாகவோ பார்க்க முடியும்? இதுபோன்ற அராஜகங்களுக்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதும், தொடர்ந்து இத்தகைய அடாவடிகள் நடக்காமல் தடுப்பதும்தானே அரசின் கடமையாக இருக்க முடியும்?

அக்லக் கொல்லப்பட்டதற்கு வகுப்புச் சாயம் பூசக் கூடாது என்று கோரிக்கை விடுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உண்மை வெளிவராமல் தடுப்பதுடன், பிரச்சினையைத் திசை திருப்பவும் பார்க்கிறார். எந்தவிதமான அரசியல் சூழலில், எந்தவிதமான சமூகப் பின்னணியில் இது நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புறக்கணிப்பதானது இந்துத்துவாவினால் எழும் வகுப்புவாத வெறுப்புணர்வையும், மதச் சகிப்பற்ற தன்மையையும் புறக்கணிப்பதாகவே ஆகிவிடும். வன்முறைக் கும்பல்களின் வெறியாட்டத்துக்குத் தீனி போடுவோர், அவற்றின் வன்செயல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

அரசாங்கம் மாடுகளை விட்டுவிடட்டும், அவை பாவம்! மாறாக, மக்கள் நலனில் கவனம் திரும்பட்டும். அதற்குத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்!

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024