சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்ற கஸ்தூரி என்ற பெண், அவர் வேலைபார்த்த வீட்டு பெண்ணால் வலது கை வெட்டி துண்டிக்கப்பட்டதாகக்கூறி, அங்கு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அந்த பெண்ணோ, ‘நான் வெட்டவில்லை, கஸ்தூரி 3–வது மாடியில் இருந்து சேலையைக்கட்டி தப்பித்துச்செல்ல கீழே இறங்கும்போது, ஜெனரேட்டர் மீது விழுந்ததால் கை துண்டிக்கப்பட்டுவிட்டது’ என்கிறார். விசாரணையில், கஸ்தூரியும் முறையான அனுமதிபெற்று சவுதிக்கு வேலைக்கு செல்லவில்லை என்கிறார்கள். அதாவது, வீட்டுவேலைக்கு செல்லும் அனுமதி இல்லாமல் சென்றிருக்கிறார் என்று தகவல்கள் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சவுதி அரேபியாவில் வீட்டுவேலைகள் செய்வதற்காக இந்தியாவில் இருந்து ஆட்கள் அனுப்புவதற்காக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், 5 லட்சத்துக்கும்மேல் அங்கு பணியாற்ற இந்தியாவில் இருந்து செல்லமுடியும். அரசின் நிறுவனங்கள் அல்லது அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலமாக வேலைக்கு செல்பவர்களுக்கு, தூதரகம் மூலமாக அனைத்து பாதுகாப்பும் இருக்கும். ஆனால், போலி ஏஜெண்டுகள் அல்லது அரசின் அங்கீகாரம் இல்லாத ஏஜென்சிகள் மூலமாக முறையான விசா இல்லாமல் செல்லும்போதுதான் அனைத்து பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டு வேலைக்காக செல்ல விரும்பும் தமிழர்கள், போலி ஏஜெண்டுகளிடம் ஏமாறாமல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறவேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசால் 30–11–1978 அன்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால், தொடங்கி இத்தனை ஆண்டுகளாகியும், இந்த நிறுவனத்தின் மூலமாக 2014–2015 வரை 8,469 பேர்களே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கேரளாபோல, தமிழ்நாட்டிலும் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அல்லது அரசின் அங்கீகாரம்பெற்ற நிறுவனங்கள் மூலம்தான் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பவேண்டும். அவர்களின் பாதுகாப்பான பணிக்கு இந்த நிறுவனங்கள்தான் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்ற நிலையை தமிழக அரசு உருவாக்கவேண்டும். அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இன்னும் தீவிரமாக இயங்கவேண்டும். இந்த ஆண்டில் ஏராளமானவர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி முத்திரை பதிக்கவேண்டும்.
No comments:
Post a Comment