Sunday, October 11, 2015

விருதுநகரில் 100-வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய முதியவர்

Dinamani





விருதுநகரில் 4 தலைமுறையை கண்ட முதியவர் 100-வது பிறந்த நாளை தனது குடும்பத்தினர், பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்கம் ஆகியவைகளால் வாழ்நாள் 50 வயது முதல், 60 வயதாக சுருங்கி வருகிறது. மேலும், 40 வயது தொடக்கத்திலேயே சர்க்கரை உள்பட பல்வேறு நோயால் அவதிப்படும் நிலையுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாடான உணவு பழக்கம், நடைபயிற்சி ஆகியவைகளால் 100-வயது தொடக்க விழாவை மகிழ்ச்சியுடன் முதியவர் பேரன், பேத்திகளுடன் கொண்டாடியுள்ளார்.

விருதுநகரில் உள்ள இளங்கோவன் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.எ.நடராஜன்(100). வியாபார சங்கத்தின் நிர்வாகியாகவும், பருப்பு வியாபாரமும் செய்து வந்தார். இவருக்கு பன்னீர்ராஜன்(68), ஜெயக்கர்(66), ராமநாதன்(64), தயானந்தம்(62) என 4 மகன்களும், தனலட்சுமி(60) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து சென்னை, விருதுநகர், ஈரோடு, அமெரிக்கா, கலிபோர்னியா போன்ற இடங்களில் தனித்தனியாக வசித்து தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், எஸ்.எ.நடராஜனும், அவரது மனைவி பரமேஸ்வரி(88) ஆகிய 2 பேர் மட்டும் மேற்குறிப்பிட்ட இடத்தில் வசித்து வருகின்றனர். தற்போது, இவருக்கு 100-வது வயது தொடங்கியுள்ளது. இதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அவரது மகன்கள் தனியார் அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு முன்னதாக தங்களது குடும்பத்தினர், சம்பந்திகள், மாமனார் மற்றும் மைத்துனர், பங்காளி நிர்வாகிகள் ஆகியோருக்கு மட்டும் அழைப்பிதல் அனுப்பியிருந்தனர். இதையடுத்து 4 தலைமுறையை கண்ட உறவினர்கள் மற்றும் பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன் பேத்திகள் என 69 பேருடன் தனது 100-வது வயது தொடக்க விழாவை முதியவர் சிறப்பாக கொண்டாடினார்.

இது குறித்து அவரது 3-வது மகனும், கூட்டுறவு துறையில் ஓய்வு பெற்ற அதிகாரியுமான ராமநாதன்(66) கூறுகையில், தந்தையும், தாயாரும் பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழவும், எவ்வித தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக தனியாக வசித்து வருகின்றனர். அவர்களது தேவைகளையும் அவர்களாகவே பூர்த்தி செய்து கொள்வார்கள். நாள்தோறும் காலையில் 2 கி.மீ தூரம் நடைபயிற்சி செய்து, ஊருக்கு வெளியே சென்று குளியலை முடித்து வருவார். எப்போதும் போல் கட்டுப்பாடன சைவ உணவும், இதுவரையில் மழை நீரையே பருகியும் வருகிறார். கால்பந்து விளையாட்டு வீரர். எவ்விதமான கெட்ட பழக்கம் இல்லாத நிலையில் கதராடையை மட்டும் அணிவார். அதோடு, காந்தி, காமராஜர், இந்திராகாந்தி ஆகியோருடன் நெருங்கி பழகியவர். எனது தந்தை கட்டிய வீட்டையும் காமராஜர் முதல்வராக இருந்த போது திறந்து வைத்துள்ளார். மேலும், அப்போது இருந்த வண்ணக்கலர் வாக்கு பெட்டிகள் வைத்த தேர்தல் முதல், வாக்குபதிவு இயந்திரம் பயன்படுத்திய ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024