Friday, April 28, 2017

முதுகலை மருத்துவ படிப்பில் சேர்க்கை : 'சிறப்பு பெஞ்ச்' அமைக்க அறிவுறுத்தல்

பதிவு செய்த நாள் 28 ஏப்
2017
00:18 சென்னை: முதுகலை மருத்துவப் படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க, 'சிறப்பு பெஞ்ச்' அமைக்க அல்லது விடுமுறை கால நீதிமன்றத்தை அணுக, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

'முதுகலை மருத்துவப் படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், அரசு பணியில் உள்ள டாக்டர்களை சேர்க்கும் போது, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படியே, ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அரசு டாக்டர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர். மாநில அரசின் விதிமுறைகள், மருத்துவக் கல்விக்கான தேர்வுக் குழு வெளியிட்ட விளக்க குறிப்பின்படி, மாணவர்கள் சேர்க்கையை நடத்த, அனுமதிக்கும்படி கோரப்பட்டது.

இம்மனுக்கள், நீதிபதிகள், எச்.ஜி.ரமேஷ், டீக்காராமன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட பின், டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை குறிப்பிட்டு, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தாலும், உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவு, எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.அதில், 50 சதவீத இடங்களில், மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கு, மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்த வழிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில், வாதங்கள் இன்னும் முடிவடையவில்லை. இப்போதே வழக்கை பைசல் செய்வது, முறையாக இருக்காது.

எனவே, விடுமுறை காலத்தின் போது, இந்த வழக்கை விசாரிக்க, சிறப்பு பெஞ்ச் ஏற்படுத்தும்படி, தலைமை நீதிபதியை வழக்கறிஞர்கள் கேட்டு கொள்ளலாம் அல்லது விடுமுறை கால நீதிமன்றத்தை அணுகலாம்.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
கோகுலம் சிட்ஸ் 'ரெய்டு': ரூ.500 கோடி அபராதம்?

பதிவு செய்த நாள் 28 ஏப்
2017

00:14 கோகுலம் சிட்ஸ் நிறுவனத்தில் நடந்த வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, அபராத வரி வசூலிக்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: கோகுலம் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த போது, ஏதோ தவறு நடப்பது தெரிய வந்தது. அதனால், எட்டு மாதங்களாக, அதன் உரிமையாளர்களின் நடவடிக்கை மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளை கண்காணித்தோம். அதன் உரிமையாளர் கோபாலன், 72 வயதிலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாநிலங்களில் உள்ள, 400 கிளைகளை நேரடியாக சென்று ஆய்வு செய்வதை பார்த்து, ஆச்சரியம் அடைந்தோம். எனினும், தீவிர விசாரணைக்குப் பின், மாதாந்திர சீட்டுப் பணம் பற்றிய உண்மையான தொகையை, பல ஆண்டுகளாக, கணக்கில் காட்டாதது தெரிய வந்தது. மேலும், பல திரைப்படங்களை எடுத்துள்ளனர். தற்போதும், ஒரு திரைப்படத்தை தயாரிக்கின்றனர். ஆனால், திரைத்துறை கணக்கு வழக்குகளை முறையாக பராமரித்து வருகின்றனர். அவர்களது மருத்துவக் கல்லுாரியில், நன்கொடை பெற்றது தொடர்பான கோப்புகளை, கேரள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அதன்பின், விசாரணை துவங்கும். இதுவரை, 1,107 கோடி ரூபாய், வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், அவர்கள் செலுத்த வேண்டிய வரியை, கணக்கிட்டு வருகிறோம். அது, 500 கோடி ரூபாயை உறுதியாக தாண்டும். அதை செலுத்த, அவர்கள் ஒப்புக்கொண்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -
அண்ணாமலை பல்கலையிலிருந்து 2,000 பேர் கூண்டோடு மாற்றம்

பதிவு செய்த நாள் 27 ஏப்
2017

23:39 பல கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்படும், அண்ணாமலை பல்கலையில் இருந்து, பேராசிரியர்கள், ஊழியர்கள் உட்பட, 2,000 பேர், இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், நிர்வாக பிரச்னை ஏற்பட்டு, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 2003ல், தனியார் நிர்வாகத்திலிருந்து, தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில், பல்கலை கொண்டு வரப்பட்டது. தற்போதைய நிலையில், பல்கலையின் பேராசிரியர்கள், ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்காக மாதம், 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனாலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட, பேராசிரியர்கள், ஊழியர்கள் என, 5,000 பேர், கூடுதலாக இருப்பதை, உயர் கல்வித்துறை கண்டறிந்தது. நிலைமையை சமாளிக்க, 2016ல், முதற்கட்டமாக, 367 பேராசிரியர்கள், வேறு அரசு கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர். அதன்பின், பல்கலையில், 1,080 பேராசிரியர்களும், 4,722 ஊழியர்களும், பணியின்றி கூடுதலாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்காக, மாதம் தோறும், சம்பளம் உட்பட பல்வேறு செலவுகளுக்காக, 19 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. எனவே, இவர்களில், 547 பேராசிரியர்கள், 1,500 ஊழியர்கள் என, 2,047 பேர், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பல்கலைகளுக்கு மாற்றப்பட உள்ளனர். ஓரிரு நாளில், இவர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட உள்ளது.

- நமது நிருபர் -
டாக்டர்களுடன் அரசு நடத்திய பேச்சு தோல்வி : தொடர்கிறது போராட்டம்
பதிவு செய்த நாள்
27 ஏப்
2017
23:02

'அரசு நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்ததால், போராட்டம் தொடரும்' என, அரசு டாக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனால், நோயாளிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பில், ௫௦ சதவீத இட ஒதுக்கீடு கோரி, புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து, அரசு டாக்டர்கள் நடத்தி வரும் போராட்டம், நேற்று, ஒன்பதாவது நாளாக நீடித்தது. இந்நிலையில், டாக்டர்களுடன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், நேற்று தலைமை செயலகத்தில், பேச்சு நடத்தினர். அப்போது, 'அமைச்சரவையை உடனே கூட்டி, இட ஒதுக்கீட்டுக்கான சட்ட முன்வடிவை கொண்டு வர வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தினர். 'உங்கள் கோரிக்கையை, முதல்வரிடம் கூறுகிறோம். இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளோம்; உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்வு காண்போம்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை, டாக்டர்கள் ஏற்காததால், பேச்சு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, 'உடனே சட்ட சபையில், சட்ட முன்வடிவு கொண்டு வர வேண்டும் என்ற, எங்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. எனவே, போராட்டம் தொடரும்' என, அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதனால், அரசு மருத்துவ மனைகளில், புறநோயாளி கள் பிரிவிற்கு சிகிச்சைக்கு வருவோர், திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

நோயாளிகளை அல்லாட வைப்பது சரியா? : 'டாக்டர்களின் போராட்டம் நியாயமானது என்பதில், மாற்று கருத்து இல்லை. ஆனால், அரசு மருத்துவமனைகளுக்கு, சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, அவர்கள் அல்லாட வைப்பது சரியா' என, சமூக ஆர்வலர்களின் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு டாக்டர்கள் அளித்த பதில்: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில்: தமிழகத்தில், ௧௮ ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் போராடவில்லை; மிக குறைவானோர், உரிமைக்காக போராடுகின்றனர். புறநோயாளிகள் பிரிவில், சிகிச்சை பாதிக்கக் கூடாது என்பதில், உறுதியாக உள்ளோம். போராட்டத்திற்கு வராத டாக்டர்கள், சிறப்புக்கவனம் செலுத்துகின்றனர். நோயாளிகள் அல்லாடுவதாக கூறுவது சரியல்ல. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்க நிர்வாகி ராமலிங்கம்: நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி, போராட்டம் நடத்துகிறோம். எங்கள் போராட்டம், நீதிமன்றத்துக்கு எதிரானது இல்லை. எங்களின் உரிமைகளை இழந்துவிடக் கூடாது என்பதற்காவே போராடுகிறோம். நோயாளிகள் பாதிக்கப்படுவதாக, தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

- நமது நிருபர் -
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்

பதிவு செய்த நாள்
ஏப் 27,2017 23:00

சென்னை: உடல்நலக் குறைவால், நடிகர் வினுசக்கரவர்த்தி, நேற்று இறந்தார்.

மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்தவர் வினுசக்கரவர்த்தி,71. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர், நேற்று உடல் நலக்குறைவால் இறந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கரகர குரலுடன் ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற இவர், கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவை, வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். வில்லன், குணச்சித்திர வேடம் ஏற்றுள்ள இவர், அந்த படத்திற்கு கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு, கர்ணப்பூ என்ற மனைவியும், சரவணன் என்ற மகனும், சண்முகப்ரியா என்ற மகளும் உள்ளனர்.

நடிப்பு உலகின் 'சக்கரவர்த்தி' : கதாசிரியராக சினிமாவில் நுழைந்து நடிகர், இயக்குநராக விளங்கிய வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் நேற்று மறைந்தார். 1945, டிச.15ம் தேதி மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வினுசக்ரவர்த்தி பிறந்தார். ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லே பள்ளியிலும், சென்னையில் உள்ள கல்லுாரியிலும் அவர் படித்தார். கல்லுாரி நாள்களில் நாடகம் எழுதி நடித்துள்ளார். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், படகா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதிகபட்சம் காமெடி, குணச்சித்திரம் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளார். 2007ல் வெளியான 'முனி' திரைப்படம் இவரது 1000மாவது படமாக அமைந்தது. படிப்பை முடித்ததும் காவல்துறை பணியில் சேர்ந்தார். பின் தெற்கு ரயில்வேயில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

முதன்முதலில் கன்னட இயக்குநர் ஒருவரிடம் கதாசிரியராக பணியாற்றினார். இதில் 'பரசக்கே கண்ட தின்மா' என்ற படம் வெற்றி பெற்றது. இதை தமிழில் 'ரோசாப்பூ ரவிக்கைகாரி' என ரீமேக் செய்தனர். சிவக்குமார் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் இவர் தமிழில் அறிமுகமானார். தமிழில் குரு சிஷ்யன், நாட்டாமை, அருணாச்சலம், மாப்பிள்ளை கவுண்டர், சிவப்பு நிலா, நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத் தேடி, அமர்க்களம், பாண்டவர் பூமி, தென்காசி பட்டனம், ஜெமினி, சுந்தரா டிராவல்ஸ், கிரி, முனி, தேசிங்கு ராஜா,வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி, ராமராஜன், ரஜினி, கமல், விஜய், அஜித், அர்ஜூன், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இறுதியாக 2014ல் 'வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் 900 படங்களும், மலையாளத்தில் 30 படங்களும், தெலுங்கில் 5 படங்களும், ஒரே ஒரு திரைப்படம் படகா மொழியிலும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியுள்ளார். பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளார்.

சில்க் ஸ்மிதா அறிமுகம் : 1979ல் இவர் கதை எழுதி வெளியான 'வண்டிசக்கரம்' என்ற படத்தில், மறைந்த நடிகை 'சில்க் ஸ்மிதா'வை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் சாராயக் கடையில் 'சிலுக்கு' என்ற கேரக்டரில் ஸ்மிதா நடித்திருப்பார். இதன்பின் சில்க் ஸ்மிதா என்ற அடைமொழியால் அறியப்பட்டார்.

விருதுகள் : மாநில அரசின் கலைமாமணி விருது, மலேசியா, சிங்கப்பூர், கனடா தமிழ் சங்கம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, காஞ்சி சங்கர மடத்தின் ஆஸ்தான வித்வான் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

'லக்கி' நடிகர் : ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வினுசக்கரவர்த்தி பேசும்போது, 'நான் ரஜினிக்கு லக்கியான நடிகர் என அறியப்படுகிறேன். ரஜினியும் இதனை ஒத்துக்கொள்வார். நான் அவருடன் நடித்த படங்கள் அனைத்தும் 'ஹிட்' அடித்துள்ளன' என்றார். ரஜினியுடன் தம்பிக்கு எந்த ஊரு, குரு சிஷ்யன், மனிதன், சிவா, ராஜாதி ராஜா, அண்ணாமலை, அருணாச்சலம் என 25 'ஹிட்' படங்களில் நடித்துள்ளார்.
இ - சேவைக்கு மொபைல் எண் கட்டாயம்

பதிவு செய்த நாள் 27 ஏப்
2017
22:10

சென்னை: இ - சேவை மையங்களில், மே, 2 முதல், மொபைல் போன் எண் கட்டாயமாகிறது.

அரசின் சேவைகளை, பொதுமக்கள் விரைவில் பெற வசதியாக, இ -சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் சேவை பெற, மே, 2 முதல், மொபைல் போன் எண் கட்டாயமாகிறது. முதல் முறையாக செல்வோர், தங்கள் மொபைல் போன் எண்ணை, கம்ப்யூட்டர் பொறுப்பாளர்களிடம் கொடுத்து, பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணிற்கு, சேவைக்கான விண்ணப்ப எண், சேவை கட்டணங்கள் குறித்த விபரங்கள், எஸ்.எம்.எஸ்.,சில் அனுப்பப்படும்.

விண்ணப்பத்தின் நிலையை, 155250 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், சந்தேகங்கள் மற்றும் விபரங்களை, 1800 425 1333 என்ற, கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அறிந்து கொள்ளலாம்.விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, சான்றிதழ் தயாரானதும், பதிவு செய்யப்பட்ட, மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். அதன் மூலம், இணையம் வழியாக, பொதுமக்கள் தங்கள் சான்றிதழ்களை பார்வையிடலாம்.
ஏப்ரல் 28, 02:00 AM

தலையங்கம்
டெல்லி மாநகராட்சிகளில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி

சமீபத்தில் நடந்த உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களிலும், அடுத்து நடந்த சில சட்டசபை இடைத்தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடிய பா.ஜ.க. டெல்லியில் வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி மாநகராட்சி தேர்தல்களில் வெற்றி மீது வெற்றி வந்து என்னைசேரும் என்று வெற்றிவாகைச் சூடப்போகிறதா? அல்லது தோல்வியை தழுவப்போகிறதா? என்று ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. கடந்த 2 தேர்தல்களில் பா.ஜ.க. தான் இந்த மாநகராட்சிகளில் வெற்றி பெற்றிருந்தது. எனவே ஆளும்கட்சி மீதுள்ள அதிருப்தி இந்ததேர்தலில் எதிரொலிக்குமா? என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். 2015–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், 67 இடங்களைப்பெற்று ஊழல் ஒழிப்புக்கே நான் தான் இந்த நாட்டின் பிதாமகன் என்பதுபோல மார்தட்டிக்கொண்டிருக்கும் ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்ததேர்தலில் எந்தளவுக்கு ஆளும் கட்சி என்ற தாக்கத்தை மாநகராட்சியில் ஏற்படுத்தியுள்ளார் என்பதும் ஒரு பார்வையாக இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு, டெல்லி மாநகராட்சி தேர்தல்களாவது மறுவாழ்வு அளிக்குமா என்ற ஆவல் அந்தக்கட்சி தொண்டர்களுக்கும் இருந்தது.

டெல்லி மாநகராட்சி என்பது ஏழை–எளிய நடுத்தரமக்களை பெரும்பான்மையாக கொண்டது. ஆக, இந்த மாநகராட்சியில் பெறும் வெற்றி, அடுத்தடுத்து வரப்போகும் தேர்தல்களுக்கு ஒரு ‘டிரெய்லர்’ போல இருக்கும் என்றவகையில், இந்த தேர்தல்முடிவு மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்களுக்கு இணையாக யாரும் இல்லை என்ற வகையில் பா.ஜ.க. 3 மாநகராட்சிகளிலும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. வடக்கு டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 103 இடங்களில், பா.ஜ.க. 64 இடங்களிலும், ஆம்ஆத்மி 21 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தெற்குடெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 104 இடங்களில், பா.ஜ.க. 70 இடங்களிலும், ஆம்ஆத்மி 16 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கிழக்கு டெல்லி மாநகராட்சியில், மொத்தமுள்ள 63 இடங்களில், பா.ஜ.க. 47 இடங்களிலும், ஆம்ஆத்மி 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஆக, ஆளும்கட்சியாக இருப்பதானால், தொடர்ந்து மக்களுக்கு ஒருவிதசலிப்பு ஏற்பட்டு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற தத்துவம் டெல்லியில் தோல்வியடைந்து விட்டது. இவ்வளவுக்கும் ஊழலை ஒழிப்பேன் என்று முழங்கிக்கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் இந்ததேர்தலில் ஆம்ஆத்மி வெற்றிப்பெற்றால் மாநகராட்சிகளில் சொத்துவரி ரத்துசெய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

சொத்துவரி தான் மாநகராட்சியின் முக்கிய வரிவருவாய். அதை ரத்து செய்து விட்டால் என்ன அடிப்படை வசதிகளை டெல்லி மாநகருக்கு, இந்த 3 மாநகராட்சிகளும் செய்துவிடமுடியும் என்று புரிந்துகொண்ட மக்கள், இதற்கு முக்கியத்துவமே கொடுக்கவில்லை. இதுமட்டுமல்லாமல், நரேந்திரமோடி–அமித்ஷாவின், தேர்தல் தந்திரங்கள் மிக சரியாக வேலை பார்த்திருக்கிறது. டெல்லி பா.ஜ.க.வுக்கு யாரை தலைமைப்பொறுப்பில் நியமிக்கலாம் என்றகணிப்பில் பீகார் நடிகர் மனோஜ் திவாரி தலைமையில் பா.ஜ.க.வை வழிநடத்திச்செல்ல வகைசெய்தது மட்டுமல்லாமல், மாநகராட்சி தேர்தல்களில் பழையமுகங்களுக்கு விடைகொடுத்துவிட்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்தது பெரிய பலனை கொடுத்துள்ளது. அடுத்தடுத்து நடக்கும் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் நாட்டில் மோடி அலை வீசுகிறது, அவர் மீதும் அவர் அறிவிக்கும் திட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று தான் எண்ணத்தோன்றுகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள குஜராத், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலையும், 2019–ல் பாராளுமன்ற தேர்தலையும், அடுத்து பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களையும் சந்திக்கஇருக்கும் பா.ஜ.க.வுக்கு டெல்லி தேர்தல் வெற்றி நிச்சயமாக உற்சாக டானிக்தான்.

NEWS TODAY 2.5.2024