Monday, July 30, 2018

சீன வாலிபருக்கு அனுமதி மறுப்பு

Added : ஜூலை 30, 2018 00:30

சென்னை: முறையான விசா இல்லாமல், சென்னை வந்த சீன வாலிபரை, குடியுரிமைத்துறை அதிகாரிகள், நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து, மீண்டும் சீனாவிற்கே திருப்பி அனுப்பினர். சிங்கப்பூரில் இருந்து, 'சில்க் ஏர்' விமானம், நேற்று காலை, 10:30 மணிக்கு சென்னை வந்தது. அந்த விமானத்தில், சீனாவில் இருந்து, சிங்கப்பூர் வழியாக, சோயாங், 22, என்ற மாணவர், சென்னை வந்தார். அவரது பாஸ்போர்ட் மற்றும் விசாவை, குடியுரிமைத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர், சுற்றுலா விசாவில், சென்னை வர அனுமதி வாங்கியிருந்தது தெரிய வந்தது. ஆனால், குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணையில், சென்னையில் தங்கி படிக்க வந்ததாக, சோயாங் கூறினார். நம் நாட்டிற்கு படிக்க வருபவர்கள், மாணவர் விசாவில் தான் வரவேண்டும் என்பது சட்டம். இதையடுத்து, தவறான விசாவில் சென்னை வந்த சோயாங்கை, குடியுரிமைத்துறை அதிகாரிகள், நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தனர். சிங்கப்பூர் சென்ற விமானத்தில், அவரை திருப்பி அனுப்பினர்.
சிகிச்சையில் கருணாநிதி; புகைப்படம் வெளியீடு

Added : ஜூலை 30, 2018 00:27



மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவர் சிகிச்சை பெறும் அறைக்கே சென்று, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பார்த்தார். இதுதொடர்பான புகைப்படத்தை, தி.மு.க., வெளியிட்டுள்ளது. அதில், செயற்கை சுவாசம் இன்றி, கருணாநிதி சிகிச்சை பெறுவது தெரிய வந்துள்ளது. கருணாநிதிக்கு, இம்மாதம், 27ம் தேதி, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கவலைக்கிடமான நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு, 'ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு திரும்பி, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர். ஆனாலும், அவர்கள் யாரும், கருணாநிதியை நேரில் பார்க்கவில்லை. இந்நிலையில், கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நேற்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு சென்றதும், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'கருணாநிதியை பார்த்தேன்' என, பதிவிட்டார். இதைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதியும், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தும், கருணாநிதியை பார்க்கும் புகைப்படத்தை, தி.மு.க., வெளியிட்டது. முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதிக்கு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்ற, சந்தேகம் இருந்தது. நேற்று வெளியான புகைப்படம், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படாமல், சிகிச்சை அளிக்கப்படுவதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அன்று ஜெ., படம் கேட்டார் ; இன்று அவர் படம் வெளியீடு : அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது உடல்நிலை குறித்து, பல்வேறு வதந்திகள் பரவின. அப்போது, கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், 'ஜெ., உடல் நிலை பற்றிய செய்தியை, மூடு மந்திரமாக வைத்திருப்பதால், சிலர் வேண்டுமென்றே, விரும்பத்தகாத செய்திகளை வதந்திகளாக பரப்புகின்றனர். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஜெ., சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட வேண்டும்' என, தெரிவித்திருந்தார். இன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி, நன்றாக இருப்பதை, தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறியும் வகையில், அவரை, துணை ஜனாதிபதி, கவர்னர் ஆகியோர் பார்த்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்ததும், தி.மு.க., தொண்டர்கள் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
மகாமக குளத்திற்கு தண்ணீர் திறப்பு

Added : ஜூலை 30, 2018 00:04



தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளத்தில், தண்ணீர் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.தஞ்சாவூர், கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத் திருவிழாவின் போது, மகாமக குளத்தில், லட்சக்கணக்கானோர் புனித நீராடுவது வழக்கம். இரு மாதங்களாக, குளத்தில் தண்ணீர் இல்லாமல், வறண்டு காணப்பட்டது. குளத்தின் நடுவே உள்ள தீர்த்த கிணறுகளும், தண்ணீர் இல்லாமல் வறண்டன. இந்நிலையில், காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், அரசலாறு வழியாக பாய்ந்தோடுகிறது. மகாமக குளத்துக்கு தண்ணீர் வருவதற்காக, அரசலாற்றில் இருந்து, குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் மூலம் நேற்று காலை முதல், குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. மகாமக குளத்துக்கு தண்ணீர் வருவதை கண்ட பொதுமக்கள், ஆர்வத்தோடு பார்த்து போட்டோ, செல்பி எடுத்துக் கொண்டனர்.
பொதுப்பணித் துறையின் உதவி பொறியாளர் பார்த்தசாரதி கூறியதாவது: அரசலாறு மூலம், மகாமக குளத்துக்கு தண்ணீர் விடப்படுகிறது. தற்போது, குறைவான அளவே தண்ணீர் செல்கிறது. அரசலாற்றில் தண்ணீர் அதிகமாக வரும் போது, மகாமக குளத்தில், அதிகளவு தண்ணீர் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆவணம் வழங்க மறுத்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு

Added : ஜூலை 29, 2018 23:54

சென்னை: அசல் ஆவணம் வழங்க மறுத்த தனியார் வங்கி, வாடிக்கையாளருக்கு, 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், சாந்தோமை சேர்ந்த, சுதா தாக்கல் செய்த மனு: சாந்தோமில் உள்ள தனியார் வங்கியில், 2008ம் ஆண்டு, வீட்டு கடன், 2.75 லட்சம் ரூபாய் வாங்கினேன். இதற்காக, சொத்துக்கான அசல் ஆவணங்களை அடமானமாக கொடுத்திருந்தேன். தவணை தொகை முழுவதும் செலுத்தி, கடன் கணக்கு முடித்த பின்னும், அசல் ஆவணங்களை வங்கி தர மறுக்கிறது. இதனால், என் இடத்தை, எதிர்பார்த்த விலைக்கு விற்க முடியாத நிலை உள்ளது. அசல் ஆவணங்களை திருப்பி தருவதுடன், ஐந்து லட்சம் லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில், கோரியிருந்தார். வழக்கு விசாரணையில், 'அசல் ஆவணங்கள், எங்களிடம் இல்லை. முறைப்படி, உரிய துறைக்கு விண்ணப்பித்து, ஆவணங்கள் வாங்கி கொள்ள ஏற்பாடு செய்தும், மனுதாரர் ஒப்புக்கொள்ளவில்லை. எங்கள் சேவையில் குறைபாடு இல்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, வங்கி நிர்வாகம் தெரிவித்தது.இந்த வழக்கில் நீதிபதி மோனி, நீதித்துறை உறுப்பினர் அமலா பிறப்பித்த உத்தரவு:வங்கியின் சேவையில் குறைபாடு உள்ளது. வங்கி நிர்வாகம், அசல் ஆவணத்தை, மனுதாரருக்கு வழங்குவதுடன், 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 5,000 ரூபாய் வழக்கு செலவும் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
குற்றாலம் மலர் கண்காட்சி : சுற்றுலா பயணியர் ஆர்வம்

Added : ஜூலை 30, 2018 00:41

திருநெல்வேலி : நெல்லை மாவட்டம், குற்றாலம் சாரல் விழாவில், நேற்று மலர் கண்காட்சி துவங்கியது.குற்றாலத்தில் இந்த ஆண்டு, காலநிலை ரம்யமாக உள்ளது. பயணியரை மகிழ்விப்பதற்காக, ஐந்தருவி அருகே சுற்றுச்சூழல் பூங்காவில், மலர்க் கண்காட்சி நடக்கிறது.நேற்று இக்கண்காட்சியை, செய்தி துறை அமைச்சர் ராஜு, சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கலெக்டர் ஷில்பா தலைமை வகித்தார்.வாசனை பொருட்களால் ஆன தாஜ்மகால், மலர்களால் செய்யப்பட்ட டிராக்டர், ஜல்லிகட்டுக் காளை, நடன மங்கையர், வாத்திய இசைப் பெண்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் உள்ளன. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக அறிவியல் மையம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ராக்கெட் அணிவகுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. கண்காட்சி ஆக., 4 வரை நடக்கிறது.
விடுமுறையா?: அண்ணா பல்கலை மறுப்பு

Added : ஜூலை 30, 2018 00:37 |


  சென்னை : கருணாநிதியின் உடல்நலத்தில் ஏற்பட்ட திடீர் பின்னடைவால் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை விடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. இந்நிலையில், இதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும், இது வெறும் வதந்தி தான் எனவும் அண்ணா பல்கலை.,யின் பதிவாளர் கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை

Added : ஜூலை 30, 2018 01:45

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள், எல்.டி.சி., எனப்படும் விடுமுறையுடன் கூடிய சுற்றுலா பயண சலுகையில், வெளிநாடுகளுக்குச் சென்று வர அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

பரிசீலனை : மத்திய அரசு ஊழியர்களுக்கு, சுற்றுலா செல்வதற்கு, விடுமுறையுடன், பயணக் கட்டணமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஊழியர்கள் வெளிநாடு செல்லவும் அனுமதி அளிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பாக, ஆசிய நாடுகளுக்கு செல்ல, அனுமதி அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கு பயண சலுகை அளிப்பது தொடர்பாக, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம், மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது.கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல, விடுமுறையுடன் கூடிய பயணச் செலவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய ஆசிய நாடுகளில், இந்தியாவின் பங்களிப்பை அதிகப் படுத்துவதற்காக, இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி : இந்நிலையில், 'சார்க்' எனப்படும், தெற்காசிய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு செல்ல, மத்திய அரசு ஊழியர்களுக்கு, எல்.டி.சி., திட்டத்தில் அனுமதி அளிக்க, கடந்த மார்ச் மாதமே மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. ஆனால், முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர்.

OpenAI Releases New GPT-4o, A Faster And Free AI Model For All Users

OpenAI Releases New GPT-4o, A Faster And Free AI Model For All Users The new model GPT-4o -- the "O" stands for omni -- will be ro...