Monday, July 30, 2018

சிகிச்சையில் கருணாநிதி; புகைப்படம் வெளியீடு

Added : ஜூலை 30, 2018 00:27



மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவர் சிகிச்சை பெறும் அறைக்கே சென்று, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பார்த்தார். இதுதொடர்பான புகைப்படத்தை, தி.மு.க., வெளியிட்டுள்ளது. அதில், செயற்கை சுவாசம் இன்றி, கருணாநிதி சிகிச்சை பெறுவது தெரிய வந்துள்ளது. கருணாநிதிக்கு, இம்மாதம், 27ம் தேதி, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கவலைக்கிடமான நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு, 'ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு திரும்பி, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர். ஆனாலும், அவர்கள் யாரும், கருணாநிதியை நேரில் பார்க்கவில்லை. இந்நிலையில், கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நேற்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு சென்றதும், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'கருணாநிதியை பார்த்தேன்' என, பதிவிட்டார். இதைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதியும், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தும், கருணாநிதியை பார்க்கும் புகைப்படத்தை, தி.மு.க., வெளியிட்டது. முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதிக்கு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்ற, சந்தேகம் இருந்தது. நேற்று வெளியான புகைப்படம், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படாமல், சிகிச்சை அளிக்கப்படுவதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அன்று ஜெ., படம் கேட்டார் ; இன்று அவர் படம் வெளியீடு : அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது உடல்நிலை குறித்து, பல்வேறு வதந்திகள் பரவின. அப்போது, கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், 'ஜெ., உடல் நிலை பற்றிய செய்தியை, மூடு மந்திரமாக வைத்திருப்பதால், சிலர் வேண்டுமென்றே, விரும்பத்தகாத செய்திகளை வதந்திகளாக பரப்புகின்றனர். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஜெ., சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட வேண்டும்' என, தெரிவித்திருந்தார். இன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி, நன்றாக இருப்பதை, தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறியும் வகையில், அவரை, துணை ஜனாதிபதி, கவர்னர் ஆகியோர் பார்த்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்ததும், தி.மு.க., தொண்டர்கள் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...