Sunday, July 29, 2018

கர்ப்பம் என தவறான சிகிச்சை டாக்டர்கள் மீது பெண் வழக்கு

Added : ஜூலை 28, 2018 22:49 |

சென்னை, வயிற்றில் இருந்த கட்டியை, கர்ப்பம் எனக்கூறி சிகிச்சை அளித்த, அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மருத்துவ அறிக்கை குறித்து, நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு, விளக்கம் பெற அவகாசம் அளித்து, விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.சென்னையை அடுத்த ஒக்கியம் - துரைப்பாக்கத்தைச் சேர்ந்த, அசினா பேகம் தாக்கல் செய்த மனு:எனக்கு, 2009ல், திருமணம் நடந்தது. குழந்தைபேறு இல்லாமல் இருந்தது. 2016 ல், மாதவிடாய் பிரச்னை வந்தது.திருவல்லிக்கேணி, கஸ்துாரிபாய் அரசுமருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக சென்றேன். என்னை பரிசோதித்த டாக்டர்கள், நான் கர்ப்பம் அடைந்திருப்பதாக தெரிவித்தனர்.ஆறு ஆண்டுகளாக குழந்தை இல்லாத நான், கர்ப்பம் தரித்திருப்பதாக டாக்டர்கள் கூறியவுடன், மகிழ்ச்சி அடைந்தேன்; குடும்பத்தினரும் மகிழ்ந்தனர். ௨௦௧௬ நவம்பரில், பிரசவ தேதி இருக்கும் என்றும் தெரிவித்தனர்.குழந்தை பேறுக்கான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்தது.வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனைக்கு சென்றேன். 'ஸ்கேன்' எடுத்து பார்த்தனர். குழந்தை, ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இரண்டு நாட்களுக்கு பின், அடி வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது.மருத்துவமனை சென்று, மீண்டும், ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது தான், வயிற்றில் குழந்தை இல்லை; கட்டி இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், நானும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தோம்.இதையடுத்து, மருத்துவ குறிப்புகள், அறிக்கைகள் அனைத்தையும், டாக்டர்களும், ஊழியர்களும் எடுத்து கொண்டனர்.எனக்கு முறையான மருத்துவ சிகிச்சை தரப்படவில்லை. கர்ப்பம் தரித்திருப்பதாக கூறி, தவறாக டாக்டர்கள் கணித்துள்ளனர்.டாக்டர்களின் அஜாக்கிரதை குறித்து, அதிகாரிகளுக்கு மனு அளித்தேன்; உரிய நஷ்டஈடு தரும்படி கோரினேன். அவர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நான் அடைந்த மன உளைச்சல், கஷ்டத்துக்கு, இழப்பீடு வழங்க வேண்டும். தவறு செய்த கஸ்துாரிபாய் அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் கே.பாலாஜி, அரசு தரப்பில், கூடுதல் பிளீடர் பி.ராஜலட்சுமி ஆஜராகினர்.மருத்துவ அறிக்கை தொடர்பாக கேள்விகள் எழுப்பிய நீதிபதி, அதுகுறித்து, டாக்டர்களிடம் விளக்கம் பெற உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024