Tuesday, July 31, 2018

மருத்துவ தேர்வு விடைத்தாளுக்கு மறுமதிப்பீடு இல்லை: ஐகோர்ட்

Added : ஜூலை 30, 2018 23:32

சென்னை : 'மருத்துவ தேர்வு விடைத்தாளுக்கு, மறு மதிப்பீடு கோர, மாணவிக்கு உரிமையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துணை தேர்வை எழுதிக் கொள்ள, மாணவிக்கு, அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை, சேலையூரில், பாரத் நிகர்நிலை மருத்துவ பல்கலை உள்ளது. மருத்துவப் படிப்பில், சோபிகா என்ற மாணவி சேர்ந்தார். இறுதியாண்டு தேர்வில், சில பாடங்களின் விடைத்தாள்களை வழங்கவும், அவற்றை மறு மதிப்பீடு செய்யவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், 'பல்கலைக்கு எதிரான போராட்டத்துக்கு, என் தாய் தலைமை வகித்தார். அதனால், நான் எழுதிய தேர்வில், மதிப்பெண் வழங்காமல், தேர்ச்சி பெறாமல் ஆக்கி விட்டனர். 'எனவே, விடைத்தாள்களை வழங்க வேண்டும். மறு மதிப்பீடு செய்தால், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவேன்' என, கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதி வைத்தியநாதன் முன், விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, பல்கலையின் துணை வேந்தர், டாக்டர் கனகசபை, நீதிமன்றத்தில் ஆஜரானார். பாரத் நிகர்நிலை பல்கலை தரப்பில், 'மாணவர்களுக்கு எதிராக, விரோதம் காட்ட வேண்டிய தேவையில்லை. மறு மதிப்பீட்டுக்கு இடமில்லை' என, கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: பல்கலை விதிகளின்படி, விடைத்தாள்கள் மறு மதிப்பீட்டுக்கு வழி இல்லை; மாணவர்களிடம் விடைத்தாள்களை வழங்கவும், வழி இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி, விடைத்தாள்களை வழங்கினாலும் கூட, விதிகளின்படி மறு மதிப்பீடு செய்ய முடியாது. அதனால், இந்த சலுகையை பெற, மனுதாரருக்கு உரிமை இல்லை. துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், கடைசி தேதி முடிந்து விட்டதாகவும், பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. துணை தேர்வு எழுத தயார் என்றால், நீதிமன்றத்தில் இருக்கும் துணை வேந்தரிடம், விண்ணப்பத்தை ஏற்கும்படி கேட்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, துணை வேந்தரும் சம்மதம் தெரிவித்தார்.எனவே, இன்றைக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். அவ்வாறு செலுத்தும்பட்சத்தில், உடனே ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். ஆக., ௧ல் துவங்கும் தேர்வை எழுத, அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024