Tuesday, July 31, 2018


பிஎஸ்என்எல் வழக்கு விசாரணையை மாறன் சகோதரர்கள் எதிர்கொள்ள வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தர
வு

By DIN | Published on : 31st July 2018 01:14 AM |



பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்ததுடன், குற்றம்சாட்டப்பட்டோர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவும் உத்தரவிட்டது.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக மாறன் சகோதரர்கள், பிஎஸ்என்எல் பொது மேலாளராகப் பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளரான கௌதமன், சன் டி.வி. ஊழியர் கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை 14 -ஆவது சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், கடந்த ஜூலை 25-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைகள், ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் 7 பேரும் குற்றம் இழைத்தவர்களாகவே கருத முடிகிறது. எனவே, 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்படுகிறது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர். பானுமதி, நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, விகாஸ் சிங், ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் ஆஜராகி, 'இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிபிஐ நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஆனால், அந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்றனர்.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் நாங்கள் தலையிட்டால் விசாரணை பாதிக்க நேரிடும். எனவே, தலையிடுவதை தவிர்க்கிறோம். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒவ்வொருவரும் விசாரணை நீதிமன்றத்தை அணுகி முறையிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள், பதிவு செய்யப்பட்டுள்ள விசாரணை முடிவுகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் விசாரணை நடைபெறும். இதைக் கருத்தில் கொண்டு மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...