Tuesday, July 31, 2018

மருத்துவமனையில் கருணாநிதி: விசாரித்தார் பழனிசாமி

31.07.2018


  சென்னை : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நேற்று நேரில் விசாரித்தனர்.




உடல் நலக்குறைவு காரணமாக, கருணாநிதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், காமராஜ், விஜயபாஸ்கர், கருப்பண்ணன் ஆகியோர், மருத்துவமனைக்கு சென்றனர்.

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி ஆகியோரை சந்தித்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். கருணாநிதியை, அவர் சிகிச்சை பெறும் அறைக்கே சென்று, முதல்வர் மற்றும் துணை முதல்வர் பார்த்தனர்.

அதன்பின், நிருபர்களிடம், முதல்வர் பழனிசாமி கூறுகையில், ''கருணாநிதி உடல்நிலை, தற்போது சீராக உள்ளது. அவரை, நானும், துணை முதல்வரும் நேரில் பார்த்தோம். ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர். மருத்துவக் குழுவினர் அங்கேயே இருந்து, அவரை கவனித்து வருகின்றனர்,'' என்றார்.

முதல்வர் சென்ற பின், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு, செய்தித்துறை அமைச்சர் ராஜு ஆகியோர், மருத்துவமனைக்கு வந்தனர். ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

அதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், மருத்துவமனைக்கு வந்து சென்றனர். அவர்கள் கூறியதாவது:ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: வாழ்நாள் எல்லாம், தமிழர்களுக்காக போராடியவர். டாக்டர்கள் சிகிச்சை அளித்தாலும், தானாகவே அதிலிருந்து மீண்டு விட்டார் என்பது அதிசயம். வாழ்நாள் எல்லாம் தமிழர்களுக்காக, தமிழுக்காக, பல்வேறு சக்திகளை எதிர்த்து, போராடி உள்ளார்.

தற்போது, எமனோடு போராடுகிறார். எமனையும் ஜெயித்து, மீண்டு வருவார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா: உடல் நலக்குறைவு காரணமாக, அவரை சந்திக்கக் கூடாது என, மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்தபோதும், அதைபொருட்படுத்தாமல், வியாபாரிகளை சந்தித்தவர். பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தவர். அவர் மீண்டும் வருவார். வணிகர்களுக்கு, பல்வேறு நன்மைகள் செய்வார்.

தென்னிந்திய திருச்சபை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன்: கருணாநிதி சுகம் பெற வேண்டி, இறை வேண்டல் செய்ய வந்தோம். தென்னிந்திய திருச்சபை சார்பாக, எல்லா ஆலயங்களிலும், இறை வேண்டல் செய்து வருகிறோம். ஸ்டாலினை சந்தித்து, அவரது நல் வார்த்தைகளை கேட்டு, மகிழ்ச்சி அடைந்தோம்.

* தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், நேற்று மாலை, காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றார். பின், தன், 'டுவிட்டர்' பதிவில், 'கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டும்' என, தெரிவித்துள்ளார்

* இலங்கை அமைச்சர்கள் செந்தில் தொண்டைமான், ராமேஸ்வரன், இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், ஆறுமுக தொண்டைமான் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டி, இலங்கை அதிபர் மைத்ரி பாலசிறிசேனா கொடுத்தனுப்பிய கடிதத்தையும், ஸ்டாலினிடம் வழங்கினர்
* புதுச்சேரி மாநில அமைச்சர்கள், நமச்சிவாயம், கந்தசாமி, ஈஷா யோகா மைய தலைவர் ஜக்கி வாசுதேவ் ஆகியோரும் நேற்று வந்து, உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.

மொட்டை போட்ட தொண்டர்கள்:

தி.மு.க., தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன் தி.மு.க., தொண்டர்கள் குவிந்துள்ளனர். இரவு பகலாக மூன்று நாட்களாக அங்குகாத்துக் கிடக்கின்றனர்.கருணாநிதி கடவுள் மறுப்பு கொள்கை உடையவர் என்றபோதிலும் அவரது கட்சியில் உள்ள கடவுள் நம்பிக்கை உடைய தொண்டர்கள் அவர் உடல் நலம் பெற வேண்டும் என இறைவனை வேண்டியபடி உள்ளனர். நேற்று மருத்துவமனை முன் சிலர் கருணாநிதி குணமடைய வேண்டி மொட்டை அடித்தனர்; திருஷ்டி பூசணிக்காய் உடைத்தனர்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...