Sunday, July 29, 2018

ஆந்திரா ஜாதி சான்றிதழ் பெற்ற பெண்ணுக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு சலுகை இல்லை

Added : ஜூலை 29, 2018 00:02

சென்னை, 'வெளி மாநிலத்தில், பழங்குடியின சான்றிதழ் பெற்றவர், தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டின் கீழ், மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்க கோர முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, கீதா என்பவர் விண்ணப்பித்திருந்தார். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். ஆந்திர மாநிலத்தில் பெற்ற, பழங்குடியின சான்றிதழை இணைத்திருந்தார்.பழங்குடியின பிரிவின் கீழ், மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்கக்கோரி, மருத்துவ கல்விக்கான தேர்வுக் குழுவுக்கு, மனு அளித்தார். மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:மருத்துவ படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில், தமிழக மாணவர், வெளிமாநிலத்தில் இருந்து, ஜாதி சான்றிதழ் பெற்றிருந்தால், பொதுப் பிரிவின் கீழ் தான் பரிசீலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.மனுதாரர், ஆந்திர மாநிலத்தில் இருந்து பெற்ற, ஜாதி சான்றிதழை சமர்ப்பித்து, இடஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கும்படி கோரியுள்ளார். அதனால், நிவாரணம் பெற, அவருக்கு உரிமை இல்லை.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஒரு மாநிலத்தைச் சேர்ந்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அதே மாநிலத்தில் தான் சலுகை பெற முடியும். குடிபெயர்ந்த மாநிலத்தில், சலுகை பெற உரிமையில்லை.இந்த வழக்கை பொறுத்தவரை, ஆந்திர மாநிலத்தில், ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளதால், தமிழகத்தில் இடஒதுக்கீட்டு பிரிவின் கீழ் நிவாரணம் கோர முடியாது. விளக்க குறிப்பேட்டின்படி, பொதுப்பிரிவுக்கு தான் பரிசீலிக்க முடியும். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024