Monday, July 30, 2018

பெற்றோரை கைவிட்டோருக்கு என்ன தண்டனை?


பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளை ஒழுங்காகப் பராமரிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவிகிதம் வரை பிடித்தம் செய்ய அஸ்ஸாம் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில் மூத்த குடிமக்களை அவர்களின் பிள்ளைகளே கைவிடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. பல பகுதிகளிலும் அதிகரித்துவரும் முதியோர் இல்லங்களே இதற்கு நேரடி சாட்சியாகும். பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை, அவர்களது வயதான காலத்தில் கவனித்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். இந்த நிலையில், இதை சட்டம் போட்டுக் கட்டாயமாக்க வேண்டிய சூழ்நிலை தற்போது நிலவுகிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்படுகின்றன. இந்த நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்விதமாக, அஸ்ஸாம் அரசு புதிய வழிமுறையைக் கண்டுள்ளது. இதுதொடர்பாக, அஸ்ஸாம் மாநில நிதியமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "அஸ்ஸாமில் தங்களது பெற்றோரை ஒழுங்காகப் பராமரிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். போதிய வருவாய் ஆதாரம் இல்லாததால் அன்றாட வாழ்வுக்காகத் தங்களது பிள்ளைகளை நம்பி பல பெற்றோர் உள்ளனர்.

அந்தப் பிள்ளைகள் அரசுப் பணியில் இருந்து, தங்களது பெற்றோரை ஒழுங்காகப் பராமரிக்கவில்லை என்றால் அவர்களது சம்பளத்தில் 10 முதல் 15 சதவிகிதம் வரை பிடித்தம் செய்யப்படும். மேலும், தங்களது மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளையும் அரசு ஊழியர்கள் பராமரிக்க வேண்டியது அவசியம்.

இதுதொடர்பான மசோதா மாநிலச் சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இந்தப் புதிய சட்டம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் அமலுக்கு வருகிறது. பிள்ளைகளைச் சார்ந்திருந்த போதிலும், ஓய்வூதியம் பெறும் பெற்றோருக்கு இந்தச் சட்டம் பொருந்தாது" என்று தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...