Sunday, July 29, 2018

எம்.பி.பி.எஸ்., வகுப்பு 1ம் தேதி துவக்கம்

Added : ஜூலை 28, 2018 22:04

சென்னை, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப்புகள், ஆகஸ்ட், 1ல், துவங்குவதாக, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 4,699 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 7ம் தேதி வரை நடந்தது. இதில், அனைத்து இடங்களும் நிரம்பின.நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டிருந்த போது, 'நீட்' தேர்வில், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, 196 கருணை மதிப்பெண் வழங்கும்படி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.அதைத்தொடர்ந்து, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான, முதற்கட்ட கவுன்சிலிங், வரும், 30, 31ம் தேதி, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, ஆக., 1ம் தேதி முதல், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப்புகள் துவங்க உள்ளன.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறியதாவது:அரசு ஒதுக்கீட்டில், அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, ஆக., 1ம் தேதி, வகுப்புகள் துவங்குகின்றன. மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை உத்தரவால், இரண்டாம் கட்ட அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் முடிவுகள் வெளியிடப்படவில்லை.அந்த முடிவுகள் வெளியானதும், அதில், மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் அடிப்படையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024