Saturday, July 28, 2018

காலையில் காலேஜ்...மாலையில் மீன் விற்பனை...திடீர் சினிமா சான்ஸ்...ஆனால், ஹனானுக்கு என்ன நடந்தது?

எம்.குமரேசன்

ஹனானின் நடிப்புத் திறமையை அறிந்த `ராம்லீலா' இயக்குநர் அருண் கோபி, உதவிக்கரம் நீட்டினார்.



துயரங்களைத் தூசியாக்கித் தலைநிமிர்ந்த இளம் பெண்ணின் கதை இது. தினமும் குடித்துவிட்டு வரும் தந்தை, மனநிலை சரியில்லாத தாய், தம்பியைப் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு, விடாது துரத்திய வறுமை. இவற்றுக்கிடையே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த ஹனானுக்கு, டாக்டர் ஆகவேண்டும் என்று கனவு.



pic courtesy ; mathrubhumi

திருச்சூரைச் சேர்ந்த ஹனானின் தந்தை ஹமீது, ஒரு பிசினஸ்மேன். சித்தப்பா குடும்பத்தினருடன் ஹனான் குடும்பமும் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்தனர். வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்துகொண்டிருந்தது. கூட்டுக்குடும்பத்தில் பிரச்னை வர, தந்தை ஹமீது மனைவி ஷைரபி, மகள், மகனை அழைத்துக்கொண்டு தனி வீடு பார்த்துக் குடியேறினார். ஊறுகாய் கம்பெனி, எலெக்ட்ரானிக் கடை, கவரிங் நகை தயாரிப்பு எனப் பல்வேறு தொழில்களில் ஹமீது ஈடுபட்டுக்கொண்டிருந்தார். திருச்சூரிலேயே பணக்காரப் பள்ளியில் தன் மகள் ஹனானைச் சேர்த்துப் படிக்கவைத்தார். திடீரென, ஹமீதுவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அளவுக்கு மீறி மது குடிக்க ஆரம்பித்தார். தந்தையின் குடிப்பழக்கம், ஹனான் வாழ்க்கையைப் பாழாக்கியது.

ஹமீது தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்தார். ஒருமுறை ஷைரபியின் தலையைப் பிடித்து சுவரில் அடித்துவிட, அவருக்கு மனநிலை பாதித்துவிட்டது. அப்போது, ஹனானுக்கு 8 வயது. மனைவி, குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படாமல், ஹமீது குடித்துக் குடித்துப் பணத்தை அழிக்கத் தொடங்கவே வீட்டில் வறுமை தாண்டவமாடியது.

வீட்டிலேயே கவரிங் நகைகள் செய்து அக்கம்பக்கத்தில் விற்கத் தொடங்கினார், ஹனான். அதில் கொஞ்சம் வருமானம் வந்தது. தன் படிப்பு, சகோதரர் படிப்பு, தாயின் மருத்துவச் செலவுகளைப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு ஹனான் சம்பாதித்தார். அதேவேளையில் நாளுக்குநாள் தந்தையின் கொடுமையும் அதிகமானது. ஹனான் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது, தாயார் ஷைரபியை தந்தை ஹமீது விவகாரத்து செய்தார்.

தந்தை ஹமீது, தாய் ஷைரபியை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட, ஹனானும் தாயுடன் வெளியேறினார். அவர்களுக்கு, அன்றைய இரவு தங்குவதற்குக்கூட இடம் கிடைக்கவில்லை. ஆதிரா என்கிற நெருங்கிய தோழிதான் அப்போது அவருக்குக் கைகொடுத்தார். மனநிலை சரியில்லாத தாயுடன், தோழியின் வீட்டில் ஒரு மாதகாலம் ஹனான் தங்கியிருந்தார். தேர்வு முடிவு வெளியானது. கல்லூரி சென்று படிக்க, கையில் பணம் இல்லை. இதனால் ஓர் ஆண்டுக்காலம் வேலைபார்த்து பணம் சம்பாதிக்க முடிவுசெய்தார்.

கொச்சியில் கால் சென்டர் ஒன்றில் பணியில் சேர்ந்தார். இரவும் பகலும் வேலைபார்க்க, முடிவில் ஹனானுக்குக் காது கேட்காமல்போனது; கிடைத்த வேலையும் பறிபோனது. அடுத்ததாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை கிடைத்தது. அன்றாடத் தேவையைக் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு இந்தப் பணியில் சம்பளம் கிடைத்தது. திருச்சூரில் இருந்த தாயை கொச்சிக்குத் தன்னுடன் அழைத்து வந்து, தங்கவைத்துக்கொண்டார். ஹனானுக்கு மருத்துவம் படிக்கதான் ஆசை. ஒரு வேளை சாப்பாடுக்கே அல்லல்படும் அவரால், நீட் தேர்வுக்குத் தயாராக இயலவில்லை. நீட் தேர்வு எழுத வேண்டும் என்பது இந்த மாணவியின் எண்ணம். பிற்காலத்தில் மருத்துவம் படிக்கத் தயாராகும் வகையில், கொச்சியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொடுபுழாவில் ஒரு கல்லூரியில் சேர்ந்து வேதியியல் படிக்க ஆரம்பித்தார்.



ஹனானுக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். கல்லூரியில் படித்துக்கொண்டே சிக்கன் பொரித்து விற்பனை செய்தார். கல்லூரி கேன்டீனில் ஹனான் சமைக்கும் கே.எஃப்.சி மாடல் சிக்கன் ரொம்பவே பிரபலம். ஹனானின் கைப்பக்குவத்தை அனைவரும் மெச்சினர். அவரின் சின்சியாரிட்டியும் உழைப்பும் ஆர்வமும் அனைவரையும் கவர, உடன் படிக்கும் தோழர், தோழிகள், பேராசிரியர்கள் அவர் மீது தனி அக்கறைகொண்டனர். முதலில் ஹனானின் காது அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அறுவைசிகிச்சை வெற்றிக்கரமாக முடிய, ஹனானுக்கு மீண்டும் காது கேட்டது. உழைக்கும் பெண்ணுக்கு ஓய்வு ஏது... கல்லூரி நேரம் தவிர, மற்ற நேரத்தில் ஆலுவா கடற்கரையில் பஜ்ஜி சமைத்து விற்பனை செய்தார்.

இங்கேதான் ஹனானின் வாழ்க்கை திசை திரும்பியது. பஜ்ஜி சாப்பிட வந்த ஒருவர், `மீன் விற்பனை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யுங்கள் ஏற்பாடு செய்து தருகிறேன்' என்றார். ஹனான் மீன்கடை தொடங்கியதும் இன்னும் அதிகமாக உழைக்கவேண்டியிருந்தது. ஹனானின் ஒருநாள் வாழ்க்கை அதிகாலை 3 மணிக்கே ஆரம்பித்துவிடும். வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைக்கு சைக்கிளில் சென்று மீன்களை வாங்கி, அருகில் இருக்கும் கடையில் பாதுகாப்பாக வைத்துவிடுவார். பிறகு, வீட்டுக்கு ஓடிவந்து சமையல் செய்து எடுத்துக்கொண்டு பஸ் பிடித்து கல்லூரிக்குச் செல்வார். மாலை 3:30 மணிக்குக் கல்லூரி முடியும். மீண்டும் கொச்சி வந்து கல்லூரி யூனிஃபார்மை மாற்றவெல்லாம் அவருக்கு நேரம் இருக்காது. மாலை 5:30 மணியளவில் மீன் கடையைத் திறப்பார். இரவு 8 மணிக்குமேல் வீட்டுக்கு வந்து தாயையும் கவனித்துக்கொண்டு சமையலையும் பார்க்க வேண்டும்.

இப்படியாக வாழ்க்கையில் போராடிக்கொண்டிருந்த ஹனானின் வாழ்க்கையில் திருப்பம் மலையாள மீடியாக்கள் வழியே வந்தது. இளம்பெண் ஒருவர் யூனிஃபார்முடன் மீன் விற்பனை செய்துகொண்டிருப்பதைப் பார்த்த மீடியாக்கள், ஹனானின் துயரக் கதையைச் செய்தியாக்க, உதவிக்கரம் குவிந்தது. மொரீஷியஸ் நாட்டில் மருத்துவம் படிக்க 35 லட்சம் ரூபாய் செலவாகும். அங்கு சென்று மருத்துவம் படிக்கும் அளவுக்கு ஹனானுக்கு நிதி திரண்டது. டிவி ஆங்கர் ஆகும் ஆசையும் இவருக்கு உண்டு. தொலைக்காட்சிகளில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருந்தார். அப்போது, சில நடிகர்-நடிகைகளுடன் எடுத்த புகைப்படங்களை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஹனான் பதிவிட்டிருந்தார்.

ஹனானின் நடிப்புத் திறமையை அறிந்த `ராம்லீலா' இயக்குநர் அருண் கோபி, உதவிக்கரம் நீட்டினார். தன் அடுத்த தயாரிப்பான `21-ம் நூற்றாண்டு' என்ற படத்தில் ஹனானுக்கு நல்ல கதாபாத்திரம் அளிக்க முன்வந்தார். இந்தப் படத்தின் ஹீரோ, பிரணவ் மோகன்லால். அவ்வளவுதான்... இங்கேதான் வினையே ஆரம்பித்தது. அதுவரை, ஹனானின் உழைப்பை மெச்சிக்கொண்டிருந்த சமூக வலைதளத்தின் முகம் மாறியது. படவாய்ப்புக்காகத்தான் கஷ்ட ஜீவனம் பற்றி ஹனான் பொய்த்தகவல் அளித்ததாகக் குற்றம்சாட்டியது. ஹனான்பட்ட கஷ்டங்களைப் பற்றிப் படித்துவிட்டு கண் கலங்கிய கைகளே, இப்போது அவரை நோக்கி கல் எறியத் தொடங்கின. ஹனானுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்து, தன் படத்துக்கு புரொமோஷன் செய்துகொண்டதாக இயக்குநர் அருண் கோபி மீதும் சிலர் பாய்ந்தனர். ஆக, ஹனானின் வேதனை தீராமல் தொடர்ந்துகொண்டிருந்தது.



`ஹனான் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உண்மைதானா?' என்கிற கேள்வியும் எழுந்தது. தொடுபுழாவில் ஹனான் படித்த அல் நாஸர் கல்லூரியின் தலைவர் மிஜாஸைச் சந்தித்து உண்மை நிலவரம் கேட்டனர். ``இப்படியெல்லாம் ஒரு பெண்ணை டார்ச்சர் செய்யலாமா?'' என்று ஆதங்கத்துடன் பேச ஆரம்பித்த அவர், ``ஹனானுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்தான் காது அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. எங்கள் பேராசிரியர்கள், மாணவர்கள்தாம் அதற்கு உதவினர். காது அறுவைசிகிச்சைக்கு நானும் உதவினேன். அவரை இங்கு இலவசமாகவே படிக்க நான் கூறினேன். ஆனால், ஹனான் அதை மறுத்துவிட்டாள். அத்தகைய நேர்மையான பெண். தொலைக்காட்சிகளில் சின்னச் சின்ன ரோல்களிலும் நடித்து தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறாள். தெருவில் பஜ்ஜியும் விற்கிறாள். இதுபோன்று கஷ்ட ஜீவனத்தில் வாழும் பெண்களை தயவுசெய்து டார்ச்சர் செய்யாதீர்கள்'' என்று கோபத்துடன் சொல்லியிருக்கிறார்.

ஹனானோ, ``நீங்கள்தான் ஒரே நாளில் என்னை ஸ்டார் ஆக்கினீர்கள். அடுத்த நாளே என் மீது கல் எறிகிறீர்கள். இனிமேல் நான் என் கடையில் மீன் விற்க முடியுமா? என்னை இனிமேல் ஒரு சாதாரண வியாபாரம் செய்யும் பெண்ணாகப் பார்ப்பார்களா? என் பெற்றோரால்கூட எனக்கு நல்ல வாழ்க்கையைத் தர முடியவில்லை. எல்லாம் நானே சம்பாதித்து நானே அமைத்துக்கொண்டது. படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் தொடர்ந்து மீன் விற்கத்தான் செய்வேன்'' என்கிறார் ஆணித்தரமாக.

தைரியப் பெண்ணுக்கும் தன்னம்பிக்கை மனதுக்கும் ஹனான் நல்ல உதாரணம்!

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...