Monday, October 29, 2018

தீபாவளி பயணம்: ரயில்வே ஸ்டேஷனில் நெரிசல்

Added : அக் 29, 2018 03:20



திருப்பூர்: தீபாவளிக்கு, ஒன்பது நாட்களே உள்ள நிலையில், திருப்பூரில் டிக்கெட்டை உறுதிப்படுத்த, ரயில் பயணியர் போட்டி போட்டனர்.தீபாவளியை முன்னிட்டு, அடுத்த மாதம், 3 முதல் 7ம் தேதி வரை, கோவை - சென்னை, எர்ணாகுளம் - யஷ்வந்த்பூர் இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஏற்கனவே, கோவை - திருப்பூர் - சென்னை மார்க்கத்தில் இயங்கும், சேரன், கோவை, நீலகிரி, இன்டர்சிட்டி உட்பட தினசரி ரயில்களில் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல், அதிகரித்து வருகிறது. சென்னை வழியாக, வட மாநிலம் செல்லும் ரயில்கள், ஒரு மாதம் முன்பே, 'ஹவுஸ்புல்'லாகி விட்டன.தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும், தங்களுக்கான டிக்கெட்டை உறுதிபடுத்துவதிலும் போட்டி போடுகின்றனர். 'தட்கல்' டிக்கெட் விபரங்களை தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர்.நேற்று காலை முதல், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுன்டரில், கூட்டம் நிரம்பி காணப்பட்டது; பயணியரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:பெரும்பாலான ரயில்களில், 95 சதவீதம் டிக்கெட் முன்பதிவாகி விட்டது. காத்திருப்பு பட்டியல் நீண்டு கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் அதே ரயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைக்குமா என பலரும் விசாரிக்கின்றனர். சிறப்பு ரயில் இயக்கத்தை அதிகரிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நவ., 1 முதல், 3 நாட்களுக்கு கனமழை : கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Added : அக் 28, 2018 23:36

'தமிழக கடலோர மாவட்டங்களில், வரும், 1ம் தேதி முதல், மூன்று நாட்களுக்கு, தொடர்ச்சியாக கனமழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை மையம் கணித்துள்ளது.தென்மேற்கு பருவமழை, அக்., 21ல் முடிந்து, 26ல், வடகிழக்கு பருவ காற்று வீச துவங்கியதாக, சென்னை வானிலை மையம் அறிவித்தது.தீவிரமடையும் இதன் தொடர்ச்சியாக, அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வடக்கே, வங்க கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இரு நாட்களில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை நோக்கி நகர்ந்து, கனமழையை தரும் என, கணிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், 'வடகிழக்கு பருவமழை, வரும், 1ம் தேதி முதல் தீவிரம் அடையும். 3ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியின் கடலோர பகுதி களில், தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.அந்த மையம், மேலும் கூறியுள்ளதாவது:வரும், 31 இரவு, 12:00 மணிக்கு மேல், மழை துவங்க சாதகமான சூழல் உள்ளதால், வருவாய் துறையினர், பேரிடர் மேலாண்மை துறையினர், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அடுத்த, இரண்டு நாட்களை பொறுத்தவரை, சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புஉள்ளது. 2 செ.மீ., மழை பதிவுசென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும்.நேற்று காலை, 8:30 உடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தக்கலை, நாகர்கோவிலில், 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மணமேல்குடி, மயிலாடி, வேதாரண்யம் மற்றும் கன்னியாகுமரியில், 1 செ.மீ., மழை பெய்து உள்ளது.இவ்வாறு, வானிலை மையம் கூறியுள்ளது.

- நமது நிருபர் -

'நீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம்

Added : அக் 28, 2018 23:30

'மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, வரும், 1ம் தேதி துவங்குகிறது. நவ., 30 வரை பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவு தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தி வந்தது. பல்வேறு பிரச்னைகள் மற்றும் புகார்கள் எழுந்ததால், தேர்வு நடத்தும் பொறுப்பு, என்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, மே, 5ம் தேதி, நீட் தேர்வை, என்.டி.ஏ., நடத்த உள்ளது. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகும். தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 1ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் விபரங்களை பதிவு செய்யலாம். நாடு முழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு, ஆதார் கட்டாயம் இல்லை.'இந்த ஆண்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிக்கப்படும். ஆனால், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில், தயாராகும் வினாத்தாளில் பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள வினாத்தாளின் அடிப்படையிலேயே பதில் எழுத வேண்டும்' என, மத்திய மனிதவளத் துறை அமைச்சர், ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர் -

Saturday, October 27, 2018


உங்கள் உள்ளங்கையில் Mini Printer - இதோ வந்துவிட்டது !



பிரிண்டர் உற்பத்தியில் முன்னனியில் உள்ள நிறுவனம் HP.
பிரிணடர் என்றாலே பெரிய அளவில் தான் இருக்கும். இதன் எடை எப்படியும் அதிகமாகதான் இருக்கும். இந்த பிரிண்டர் 2.3″ * 3.4″ அளவுள்ள புகைப்படங்களை அச்சிடும் திறன் கொண்டது.

இந்த புகைப்பட பிரிண்டரை எளிதாக கையில் எடுத்து செல்லும் அளவிற்க்கு சிறியது. எளிதாக மொபைலில் இருந்து புளூடூத் மூலம் இதனை இயக்கலாம். HP Sprocket plus எனும் பெயர் கொண்ட இந்த பிரிண்டர் அமேசானில் 10 அச்சிடும் பேப்பர்களோடு ரூ.8,999/- க்கு கிடைக்கிறது. கூடுதலாக ரூ.800 செலுத்தினால் 20 அச்சிடும் பேப்பர்களோடு கிடைக்கும்.

Posted by SSTA

பெண்ணிடம் சைகை காட்டுவது பாலியல் குற்றமா? எவையெல்லாம் பாலியல் அத்துமீறல்கள்; என்ன தண்டனை?- விரிவான அலசல்

Published : 23 Oct 2018 15:40 IST

க.சே.ரமணி பிரபா தேவி




படம்: ராய்ட்டர்ஸ்.

பாலியல் தொடர்பான செய்திகள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், இணையம் என எல்லா ஊடகங்களிலும் இடம்பெறுகின்றன. ஆனால் பாலியல் அத்துமீறல் குறித்து முறையாக அறிந்திருக்கிறோமா?

எவையெல்லாம் பாலியல் அத்துமீறல்கள், அவற்றைப் புகார் அளிக்க முடியுமா? அவற்றுக்கு என்ன தண்டனை?, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு கிடைக்குமா உள்ளிட்ட கேள்விகளை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சதீஷ்குமாரிடம் கேட்டோம்.


1. பாலியல் அத்துமீறல் என்றால் என்ன?

தொடுவது, சைகை காட்டுவது, சைகை காட்டச் சொல்வது, முகத்தில் வெவ்வேறு பாவங்களைக் காண்பிப்பது, அதிகாரத்தை வைத்து மிரட்டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளைப் பேசுவது, பாலியலுக்கு அழைப்பது உள்ளிட்டவை பாலியல் குற்றங்களில் அடங்கும்.

2. என்னென்ன சைகைகள், உடல் மொழிகள் பாலியல் குற்றமாகக் கருதப்படும்?

அந்தரங்க உறுப்புகளைப் போன்ற சைகைகளைக் காண்பிப்பது, ஆபாசமான படங்களைக் காட்டுவது, பொதுவான மற்றும் அந்தரங்க உடல் பாகங்களைத் தொடுவது மற்றும் தொடச் சொல்வது மற்றும் அந்தரங்க உடல் உறுப்புகளைக் காண்பிப்பது குற்றமாகும்.

3. பாலியல் புகார்களை யாரிடம் அளிக்க வேண்டும்?

அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். அவர்களே புகார் எந்தப் பிரிவின் கீழ் வரும் என்பதைப் பகுப்பாய்வு செய்து வழக்குப் பதிவு செய்வர்.



4. இணையம் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு யாரை அணுக வேண்டும்?

இணையப் புகார்களையும் அதே காவல் நிலையத்தில் அளிக்கலாம். அவர்கள் அங்குள்ள சைபர் க்ரைம் அதிகாரிக்கு புகாரை அளிப்பார்கள். காவல் துறையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத சூழலில், மாவட்ட மாஜிஸ்திரேட்டை அணுகலாம், அல்லது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட மகளிர் ஆணையத்தை நாடலாம். அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத பட்சத்தில், நீதிமன்றங்களின் கதவைத் தட்டலாம்.

5. சம்பவம் நடந்து எவ்வளவு நாட்கள் கழித்துப் புகார் கூறமுடியும்?

பாலியல் குற்றம் நடந்து, எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். ஆனால் தாமதம் குறித்து நீதிமன்றம் கேட்கும் காரணங்களுக்குத் தகுந்த பதிலை அளிக்க வேண்டும். (உதாரணத்துக்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் மேற்கொள்ளப்படும் தாமதம் ஏற்றுக்கொள்ளப்படும். )

புகாரை ஏற்றுக்கொள்வது நீதிமன்றத்தின் இறுதி முடிவாகும்.

6. பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகளை எப்படி எதிர்கொள்வது?

சம்பந்தப்பட்ட அலுவலகமே உள்ளூர் காவல் நிலையம் சென்று புகார் அளிக்கலாம். அலுவலகம் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும்.


வேலை பார்க்கும் ஒரு பெண், வீட்டில் இருந்து கிளம்பியதும் அவர், பணியிடத்துக்கு பொறுப்பானவர் ஆகிறார். அதேபோல வேலை முடித்து வீடு திரும்பும் வரை, அவர் பணியில் இருப்பதாகத்தான் அர்த்தம். அல்லது அப்பெண் தனிப்பட்ட முறையிலும் புகார்களை அளிக்கலாம்.

7. உள் விவகாரங்கள் ஒழுங்குமுறை கமிட்டி (விசாகா கமிட்டி) என்றால் என்ன? அதன் விதிமுறைகள் என்னென்ன?

* விசாகா கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.

*குறைந்தபட்சம் 7 உறுப்பினர்கள் அமைக்கப்பட வேண்டும்

* கமிட்டியின் மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

* ஓரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வு தொண்டு அமைப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

* இந்த கமிட்டி ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாகத் தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும்.

விசாகா கமிட்டி அமைக்காத அலுவலகங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அரசு சார்பில் அபராதம் விதிக்கப்படும். அதுதவிர சட்ட நடவடிக்கைகளும் பாயும்.

8. எங்கெல்லாம் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும்?

* அரசு அலுவலகங்கள்,

* தனியார் நிறுவனங்கள்,

* பத்து ஊழியர்களுக்கு மேல் பணி புரியும் அனைத்து நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டியது கட்டாயம்.



பாலியல் அத்துமீறல் - சித்தரிப்பு படம்

9. ஆதாரம் இல்லாத புகாரை எப்படிக் கையாள வேண்டும்?

பாலியல் புகார் அளிக்கும்போது கட்டாயம் ஆதாரம் தேவை. சாட்சி இல்லாத பட்சத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியாக அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம். தேவைப்படும்போது குற்றம் சாட்டப்பட்டவரிடம் உண்மை அறியும் சோதனையை மேற்கொள்ளலாம். இதில்தான் பெரும்பாலான வழக்குகள் தீர்க்கப்படுகின்றன.

இனி வரும் காலங்களில் பாலியல் வழக்கை 6 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10 . உறவில் இருவர் இருந்த போது, ஒருவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மற்றொருவர் புகார் கூற முடியுமா?

உறவில் இருக்கும்போதோ, அதற்குப் பிறகோ, நண்பர்களாக இருக்கும்போதோ/ இருந்தபோதோ கூறப்படும் அனைத்துப் பாலியல் புகார்களும் ஒரே மாதிரியாகவே எடுத்துக் கொள்ளப்படும்.


11.பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் இருக்கிறதா?

ஆம், சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் மகிளா சிறப்பு நீதிமன்றம் உள்ளது. அங்கே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் அத்துமீறல்கள் விசாரிக்கப்படும். நீதிமன்றத்தின் தலைவராக பெண் நீதிபதி இருப்பார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக மூடிய அறைக்குள் வழக்கு விசாரணை நடைபெறும். அப்போது பாதிக்கப்பட்ட நபரும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியாத வகையில் கண்ணாடிக் கதவு அமைக்கப்பட்டிருக்கும்.

மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கை மேல்முறையீடு செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகலாம்.



வழக்கறிஞர் சதீஷ் குமார்

12. பாதிக்கப்பட்ட நபர் இழப்பீடு பெற முடியுமா?

நிச்சயமாக. பாதிப்பின் தன்மையைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.10 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும்.

13.நிரூபிக்கப்படும் குற்றங்களுக்கு என்ன தண்டனை?

பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதன் தன்மையைப் பொறுத்து தண்டனை மாறும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் ஆயுள் தண்டனை, இரட்டை ஆயுள் மற்றும் மரண தண்டனை வரை கிடைக்க வாய்ப்புண்டு.

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
ருசியாக சமைத்த ஹோட்டல் சமையல்காரருக்கு ரூ.25,000 டிப்ஸ் அளித்த அமைச்சர்: உணவை ஊட்டிவிட்டு, ஹஜ்பயணத்துக்கும் ஏற்பாடு

Published : 25 Oct 2018 21:29 IST

மங்களூரு,



கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் : கோப்புப்படம்


ஹோட்டலில் மிகவும் ருசியாக மீன் உணவு சமைத்த சமையல்காரரை அழைத்து ரூ.25 ஆயிரம் டிப்ஸ் அளித்த கர்நாடக அமைச்சர், அவருக்குத் தனது தட்டில் இருந்து உணவை ஊட்டிவிட்டு, புனித ஹஜ் பயணம் செல்லவும் உதவுவதாக உறுதியளித்தார்.

கர்நாடக மாநிலத்தின் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் பி ஜமீர் அகமது கான் இந்த நெகிழ்ச்சியான செயலைச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அந்த ஹோட்டல் சமையல்காரர் ஹனீப் முகமது இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஜமீர்அகமது கான் மங்களூரு நகருக்கு அலுவல் நிமித்தமாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மதிய உணவுக்கு நகரில் உள்ள “பிஷ் மார்க்கெட்” என்ற ஹோட்டலுக்கு சென்றனர்.

அமைச்சர் ஜமீர் அகமது கானுடன் முன்னாள் எம்எல்ஏ மொய்தீன் பாபா, வக்பு வாரியத் தலைவர் மோனு, இப்திகார் அலி, அமைச்சரின் சகோதரர் காதர் உள்ளிட்டோர் சென்றனர்.

இவர்கள் அனைவரும் பல்வேறு வகையான மீன் வகை உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஆனால் “பாம்பிரட்” மற்றும் “அஞ்சல்” ஆகிய மீன் உணவுகளைச் சாப்பிட்ட அமைச்சர் ஜமீர் அகமது அதன் ருசியில் சொக்கிவிட்டார்.

உடனடியாக அந்த ஹோட்டலின் நிர்வாகியை அழைத்த அமைச்சர் ஜமீர் அகமது, “என் வாழ்நாளில் இதுபோன்ற சுவையான மீன் உணவைச் சாப்பிட்டது இல்லை. உடனடியாக இதைச் சமைத்த சமையல்காரரை(செஃப்) அழைத்துவாருங்கள்” என்று தெரிவித்தார்

இதையடுத்து, அந்த ஹோட்டலின் தலைமை சமையல்கலைஞர் ஹனீப் அகமதுவை அழைத்து அமைச்சரின் முன் நிறுத்தினார்கள். சமையல்கலைஞர் ஹனீப் அகமதுவை தனது அருகே அமரவைத்த அமைச்சர் ஜமீர், தனது தட்டில் இருந்து உணவுகளை எடுத்து அவருக்கு அன்புடன் ஊட்டிவிட்டு அவரைப் பாராட்டினார். அதுமட்டுமல்லாமல், தன்னிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்து டிப்ஸாக அளித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினார்.


சமையல்காரருடன் அமைச்சர் ஜமீர் அகமது கான்

மேலும், புனித ஹஜ்பயணம் சென்றுவிட்டாயா எனக் ஹனீபிடம் கேட்ட அமைச்சர், ஹனீப் செல்லவில்லை என்றவுடன், புனித ஹஜ்பயணம் செல்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என்று உறுதியளித்து, தனது உதவியாளரிடம் ஹனீப்பின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

தான் முற்றிலும் எதிர்பாராத இந்த நிகழ்வால் சமையல்கலைஞர் ஹனீப் அகமது மகிழ்ச்சியில் உறைந்தார்.

இதுகுறித்து அவர்கூறுகையில், அமைச்சர் எனக்கு இப்படி இன்பஅதிர்ச்சி அளிப்பார் என்று நினைக்வில்லை. இதற்குமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் எனது உணவைச் சாப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் பாராட்டுமட்டும்தான் தெரிவித்தனர். ஆனால், அமைச்சர் ஜமீல் எனக்கு ரூ.25 ஆயிரம் டிப்ஸ் அளித்து, ஹஜ் பயணத்துக்கும் உதவுவதாகத் தெரிவித்துள்ளார். எனது 18 ஆண்டு வாழ்க்கையில் இப்படியான சம்பவத்தை சந்திப்பது இதுதான் முதல் முறை என்று தெரிவித்தார்
மருத்துவம்: தொழிலல்ல, சேவை!

By தி. வே. விஜயலட்சுமி | Published on : 27th October 2018 03:03 AM |

முன்பெல்லாம் மக்கள் இயற்கையோடு இணைந்து, இயற்கை உணவை உண்டு வாழ்ந்தனர். காய்ச்சல், வயிற்றுவலி போன்ற பிணிகட்கு நாட்டு மருந்தையே நாடினர் நகர்ப்புறங்களிலோ குடும்ப மருத்துவர் மட்டுமே மருத்துவ சிகிச்சை அளிப்பர். நீரிழிவு, இதய நோய், புற்று நோய்த்தாக்கம் கிராமங்களில் அறவே இல்லை. நகரத்தில் ஆயிரத்தில் ஒருவர்க்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்ட நிலையிருந்தது. 

இக்காலத்தில், துரித உணவு முறை, அவசர கதியில் செல்லும் வாழ்க்கைமுறை, உணவில் கலப்படம், உடல் உழைப்பின்மை, சுற்றுச் சூழலால் ஏற்படும் மாசு இவற்றால் பிணி பல்கிப் பெருகி மக்களை வாட்டுகிறது. பொருள் வசதிபடைத்தவர் தவிர மற்றவர் அரசு மருத்துவ மனைகளையே நாடுகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தனிப்பட்ட முறையில் கவனித்து சிறந்த சிகிச்சை அளித்தாலும் மருத்துவச் செலவு மிக அதிகம். சிறு நோய்க்குக் கூட பல ஆயிரம் கொடுத்து சிகிச்சை பெறும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். சாதாரண காய்ச்சல் என்றால் கூட தேவையற்ற ரத்தப் பரிசோதனை, சி.டி.ஸ்கேன் போன்ற ஆய்வுகள் செய்த பின்னர்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

நோயாளிகள் பொருள் வசதி படைத்தவர்கள் என்று அறிந்து விட்டால் அதிகக்கட்டணம் உள்ள சிறப்பு அறைகளைக் கொடுத்து பணம் கறக்கிறார்கள். இதில் நடுத்தர வர்க்கத்தினர் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். படித்தவர்கள் காப்பீட்டு நிறுவன உதவியால் ஓரளவு நிலைமையைச் சமாளிக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகள் இன்று வர்த்தக நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன என்பதே உண்மை.
அக்காலத்தில் கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருந்தார். உடல் நலிவடைந்தால் அவரைத்தான் பார்ப்பார்கள். சிலரால் செல்ல இயலாவிடின் அழைத்தால் அவரே இல்லத்திற்கு வந்து சோதித்துப் பார்த்து மருந்து கொடுத்துச் செல்வார். இன்று குடும்ப மருத்துவர்கள் அருகிவிட்டனர். 

தற்காலத்தில் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் காய்ச்சல், தலைவலி என்றாலே சிறப்புநிலை மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதால் படும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. பரிசோதனை முடிவதற்குள் ஒருமாத வருவாயை எடுத்து வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஒருசில மருத்துவர்களே வருவாயை எதிர்பார்க்காமல் சேவையில் ஈடுபடுகிறார்கள். அப்பணி ஏழை, எளியவர்களுக்குப் பயன்பட வேண்டும் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும். விபத்து வழக்குகள் குறித்து பயப்படக் கூடாது. விபத்தில் காயம் அடைந்தவர்களை எந்த இடத்திலும் சிகிச்சைக்காகச் சேர்க்கலாம், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யலாம் என்று சட்டம் உள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்கட்கு மருத்துவர்கள் தயங்காமல் உதவ முன்வர வேண்டும்.
மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றினால், நோயைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம். செலவை எதிர் நோக்கும் அச்சவுணர்வே நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி விடுகிறது.

இந்தியாவிலேயே மருத்துவப்பட்டம் பெற்ற முதல் பெண் பட்டதாரியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிதான் மருத்துவ மனைகளில் பெண் மருத்துவர்களை நியமிக்க வழிவகை செய்தார். மேலும், புற்று நோயை ஒழிக்க ஆய்வுக்கழகம் அமைத்ததும் அவர்தான். ஒவ்வொரு மருத்துவரும் அவரை நினைவில் கொள்ள வேண்டும். அவர் மருத்துவம் தொடர்பாக எழுதிய நூல்களை மருத்துவக் கல்லூரியில் பாடப்புத்தகங்களாக வைக்க வேண்டும். 

மருத்துவம் என்பது தொழில் அல்ல; அது ஒரு சேவை. இதனை மருத்துவர்கள் உணர வேண்டும். மருத்துவர்கள் நோயாளிகளை அன்புடன் அணுகி, அவரை சோதித்து, நோயின் தன்மை குறித்து உறவினர்களிடம் தெளிவாக விளக்க வேண்டும். இளம் மருத்துவர்கள் தங்களைவிட மூத்த மருத்துவர்களின் அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும். 

நோயாளிகள் மருத்துவர்களை தெய்வமாகவே நினைக்கின்றனர். ஆனால் சில மருத்துவர்கள் செயற்பாடு இரக்கமற்ற நிலையில் இருப்பதைப் பார்க்க நெஞ்சம் நோகிறது.

சில மாதங்கட்கு முன்னர், எண்பது வயதைக் கடந்த இதய நோயாளி ஒருவர், மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், பணம் கொண்டுவர மறந்து விட்டார். மருத்துவரின் காரியதரிசி, அம்முதியவரை மீண்டும் வீட்டுக்குப் போய் தொகையை எடுத்து வரவேண்டும் என்று சொல்லி அவர் மருந்துச் சீட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டார். மனம், உடல் சோர்ந்து அம்முதியவர் வீட்டுக்குப் போய் பணம் கொண்டு வந்த பிறகே மருத்துவர் சிகிச்சையளித்தார்.

ஆனால், அதே சமயம் சிகிச்சையோடு அன்பையும் ஒரு சேர அளித்து காப்பாற்றும் மருத்துவர்களும் இருக்கின்றனர். அத்தகைய பரந்துவிரிந்த மனம் அனைவர்க்கும் இருந்தால், எளியோரும் முதியோரும் மனச்சுமையின்றி தம் நாள்களைக் கழிப்பர். மருத்துவர்கள் தாங்கள் செய்வது தொழிலன்று; மனித உயிர்களைச் காக்கும் மகோன்னதமான சேவை என்பதை என்றும் நினைவிற் கொள்ள வேண்டும்.
சமூகம் நோய்ப்பிடியிலின்று தங்களை விடுவித்துக் கொள்ள, மருத்துவம் பற்றிய புரிதல் உணர்வுடன், சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணி நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக் கேற்ற உணவு முறை உடற்பயிற்சி, யோகா, போன்றவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்.
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதும் சிறந்த சேவை மனப்பான்மையுடைய மருத்துவர்களை உருவாக்குவதும், மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மக்களுக்குத் தரமான சிகிச்சையளிக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டியது மருத்துவர்களின் கடமை.

NEWS TODAY 2.5.2024